ஹன்னா காட்ஸ்பியின் Nanette : பெண்ணியமும், தன்பாலீர்ப்பும்
Nanette என்கிற ஹன்னா காட்ஸ்பியின் ’netflix’ நிகழ்ச்சி எளிமையாகத் துவங்குகிறது. அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ‘ஸ்டாண்ட் அப் காமெடி’ கலைஞர். வயிறு குலுங்க சிரிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தோடு நிகழ்வை காண ஆரம்பித்தேன். முதல் சில கணங்களில் தன்னுடைய இரு நாய்களோடு அமர்ந்து இருந்து விட்டு, ஹன்னா சிட்னியில் உள்ள அரங்கத்துக்குள் நுழைகிறார். அரங்கம் நிரம்பி வழிகிறது. நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் இது.
“நான் டாஸ்மானியா மாநிலத்தின் சிறிய நகரத்தில் வளர்ந்தவள். டாஸ்மானியா அற்புதமான இடம். அங்கே மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். ஆனால், ஒரு நாள் அந்த மாநிலத்தை விட்டு நான் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் ஒரு கடிதம். அன்புள்ள மேடம் என்று துவங்கிய அந்தக் கடிதம் என்னை மாநிலத்தை விட்டு வெளியேற சொன்னது. நான் என்னை ஓரளவிற்கு லெஸ்பியனாக உணர்பவள். என்னுடைய மாநிலத்தில் 1997-வரை தன் பாலின உறவானது சட்டப்படி குற்றம். என் ஊரை பொறுத்தவரை தன்பாலின ஈர்ப்பு மோசமான விஷயம். தன்பாலின உறவில் ஈடுபடுவர்கள் தங்களுடைய மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவின் மையப்பகுதிக்கு மொத்தமாக ஓடிபோய் விட வேண்டும். மறந்து கூட மீண்டும் டாஸ்மானியா வரவேண்டும் என்று எண்ணக்கூடாது.
நான் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சிகளில் லெஸ்பியன் உறவுகள் குறித்தும், என்னைக் குறித்தும் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளை உதிர்ப்பேன். தன்பாலின உறவுகள் எப்படி அச்சத்தோடும், ஐயத்தோடும் அணுகப்படுகின்றன எனப் பல்வேறு நகைச்சுவை துணுக்குகளைக் கூட்டத்தினர் சிரிக்க வீசிக்கொண்டே இருப்பேன்.
நான் என்னைப்போன்ற லெஸ்பியன் மக்களின் உணர்வுகளை, சிந்தனைகளைப் போதுமான அளவுக்கு மக்கள் முன் கொண்டு சேர்த்ததில்லை என உணர்கிறேன். ஒரு பெண் என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியின் முடிவில், ‘போதுமான அளவுக்கு லெஸ்பியன் நகைச்சுவை இல்லை’ என்று குறைபட்டுக் கொண்டார். என்னை லெஸ்பியன் நகைச்சுவை கலைஞர் என அறிமுகப்படுத்துகிறார்கள். நான் லெஸ்பியனாக இருப்பதை விட, அதிக நேரத்தை சமைப்பதில் செலவிடுகிறேன். என்னை ஏன் சமையல் கலையில் அசத்தும் நகைச்சுவை கலைஞர் என்று யாரும் அறிமுகப்படுத்துவது இல்லை? நான் அனேகமாக இவ்வகையான நகைச்சுவை நிகழ்ச்சிகளை மொத்தமாக முடித்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.
நான் நகைச்சுவை கலைஞராக எப்படி உருவெடுத்தேன்? என்னுடைய கலைப்பயணம் என்னை நானே தாழ்த்தி கொண்டு உதிர்த்த நகைச்சுவை துணுக்குகளின் மூலமே வளர்ந்தது. இப்படி என்னை நானே இழிவுபடுத்துவதை இனிமேல் செய்யப்போவதில்லை. ஏன் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஏற்கனவே சமூகத்தில் ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டுப்பட்டு இருக்கும் ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் நகைச்சுவைகளை மேடைகளில் உதிர்க்கிறார் என்றால் அது தன்னடக்கமா? இல்லை. அது தன்னைத்தானே அவமானப்படுத்திக் கொள்வது. நான் என் குரலை பிறர் கேட்க வேண்டும் என்பதற்காக, பிறர் என்ன பேச அனுமதிக்க வேண்டும் என்பதற்காக என்னை நானே இழிவுபடுத்திக் கொள்வது. இனிமேல், அதனை ஒருக்காலும் செய்ய மாட்டேன். என்னையோ, என்னைப் போன்றவர்களையோ இழிவுபடுத்தும் விஷயங்களை நகைச்சுவை என்கிற பெயரில் நிச்சயம் மேடைகளில் நிகழ்த்த மாட்டேன்….
என்னை நான் லெஸ்பியன் என்று கூட அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டேன். இந்த அடையாளத்தை விட்டும் நான் வெளியேறக்கூடும். என்னை நான் ‘சோர்ந்து போனவர்’ என்று வேண்டுமானால் அடையாளப்படுத்திக் கொள்வேன். நான் சோர்ந்து போயுள்ளேன் . பாலினம் என்பது இயல்பானதாக இருக்க வேண்டும் என்று திரியும் உங்களைப் போன்றவர்களால் நான் அயர்ச்சி அடைகிறேன். நீங்கள் வேறுபட்டவர்கள். எல்லாரும் உங்களைப் போல இருக்க வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு இயங்குபவர்கள். சாந்தம் கொள்ளுங்கள் அன்பர்களே.
கொஞ்சம் முடியோடு பிறந்திருக்கும் பெண் குழந்தையை, ‘ஆம்பிள பிள்ளையா’ எனப் பிறர் கேட்கிறார்கள் என்பதற்காகப் பெண்ணுக்கு உரிய அடையாளங்கள் என்று நீங்கள் கருதும் அடையாளங்களால் ஏன் நிறைக்கிறீர்கள்? யாரும் பெண் குழந்தையை, ஆண் பிள்ளை என்று எண்ணிவிடக் கூடாது என்று இத்தனை அச்சப்படுகிறோம். நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஆண், பெண் என்று பிரித்தே வளர்ப்பதை ஏன் நிறுத்திக்கொள்ளக் கூடாது. ஒரே ஏழு அல்லது பத்து ஆண்டுகள் நாம் அனைவரும் ஒன்றே என்று கருதும் வகையில் ஏன் அவர்களை வளர்க்க கூடாது? ஆணுக்கு பெண்ணுக்கு எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் அதைக்குறித்து அக்கறை கொள்வதே இல்லை. நம்முடைய கவனம் முழுக்க வேற்றுமைகளில் மட்டுமே குவிந்து இருக்கிறது. ‘Men are from Mars, Women are for his penis’
என்னுடைய உருவத்தைப் பார்த்துவிட்டு பலர் என்னை ஆண் என்று எண்ணிவிடுவார்கள். பிறகு உண்மை தெரிந்ததும் அதற்காக வெகுவாக வருந்துவார்கள். விமானத்தில் ஏறிய போது. ‘வாங்க சார்’ என்று அன்போடு விமானப் பணி ஆண் அழைத்தார். பின்னர்ப் பெண் என உணர்ந்து கொண்டு அதிர்ந்து போய் மன்னிப்பு கேட்டார். என்னை ஆண் என்று பிறர் கருதும் கணங்களில் எந்த முயற்சியும் இல்லாமலே பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. அதிகாரம் செலுத்த முடிகிறது….ஆனால், நான் நேர் பாலின உறவு கொள்ளும் வெள்ளையின ஆண் என அறியப்பட விரும்பவில்லை. அப்படிப்பட்ட அடையாளம் எனக்குப் பல மடங்கு கூடுதல் சம்பளத்தைத் தரும் என்றாலும் எனக்கு அந்த அடையாளம் வேண்டாம்….
இதுவரை மானுடத்தின் முகமாக இருந்த வெள்ளையின ஆண்கள் காட்டிக்கொண்டார்கள். திடீரென்று ‘நீங்களும் மனிதர்களில் ஒரு வகை’ என்பதை நாம் முதன்முறையாக உரக்க சொல்லும் போது அதனை எதிர்கொள்ள மறுக்கிறார்கள். அவர்களை ‘வெள்ளையின ஆண்’ என்று விளித்தால் ‘reverse-racism’ எனக் கதறுகிறார்கள். என்னை, என்னுடைய உருவத்தை, பாலின தேர்வை பல்வேறு வகைகளில் கேலி செய்யும் விதிகளை இயற்றி தந்தவர்கள் நீங்கள். உங்களுடைய படைப்பான விதிகளை உங்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறோம். அவ்வளவே
“ஆண்களை இவ்வளவு வெறுக்கும் நீ, ஏன் எங்களைப் போல ஆடை அணிகிறாய், காட்சி அளிக்கிறாய்” எனக் கேட்கிறார்கள். “மச்சி! உங்களுக்கு நல்ல முன்மாதிரி வேண்டும் இல்லையா. அதற்காகத் தான்”. என்பதே என்னுடைய பதில். உங்களுடைய அடையாளத்தைத் தற்காத்துக் கொள்ள முனையாமல், திறந்த மனதோடு அணுகுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். …
இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளில் உதிர்க்கப்படும் நகைச்சுவை துணுக்குகளின் வடிவம் எளிமையானது. அவை முதலில் ஒரு பதற்றத்தை உருவாக்கும். பின்னர் ஆச்சரியப்படுத்தும் வகையில் அது முடிவுக்குக் கொண்டு வரப்படும். ஆனால், நான் முழுக்கப் பதற்றங்களால் நிரம்பியிருக்கிறேன். நான் இந்த நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன். ஆனால், எனக்கு வேறென்ன செய்வது என்றும் தெரியவில்லை.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன் கலை வரலாற்றில் நான் பட்டம் பெற்றேன். கலை வரலாற்றை மற்றவர்களுக்குப் புரிய வைக்க முயல்வது என்னுடைய உலகம் இல்லை. அது எனக்கான உலகம் இல்லை. கலை என்பது மக்களை மேம்படுத்துவது இல்லையா? என்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சி உங்களை மேம்படுத்தும் என்று நான் உறுதி தரமாட்டேன். நாம் உருவாக்கிய கசடுகுகளில் நம்மை முக்கி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில், மன உளைச்சலுக்கு உள்ளாகும் கலைஞர்கள் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போகிற போக்கில் சொல்லியிருந்தேன். நிகழ்வு முடிந்ததும் என்னிடம் வந்த ஒரு நபர், “கலைஞர்கள் தான் உணர்வதை அப்படியே வெளிப்படுத்த வேண்டும். அதனை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முயலக்கூடாது. வான்கா மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால் உலகம் மெச்சும் ‘சூரிய காந்திகளை’ப் படைத்திருக்க முடியாது ” என்று அறிவுரை தந்தார். நான் கற்ற கலை வரலாறு இப்படிக் கைகொடுக்கும் என்று எனக்கு அதுவரை தெரியாது.
“வான்கா மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்டார் என்பது உண்மையே. ஆனால், அவர் மருந்துகள் உட்கொள்ளாமல் இல்லை. அவர் மருந்துகளை எடுத்துக் கொண்டார். பல்வேறு மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை தந்தார்கள். அவருக்குச் சிகிச்சை தந்த மனநல மருத்துவர்களின் ஓவியங்களை அவர் தீட்டியுள்ளார். அதிலும் ஒரு ஓவியத்தில் மனநல மருத்துவர் foxglove மலர்களோடு நிற்கிறார். அந்த மலர்கள் வலிப்புக்கு வைத்தியம் பார்க்க உதவுபவை. கொஞ்சம் கூடுதலாக உட்கொண்டால், சுற்றியிருப்பவை அடர்மஞ்சளாக அம்மருந்து தெரிய வைக்கும். ஆகவே, மருந்து உண்டதால் தான் வான்கா சூரியகாந்தியை படைக்க முடிந்தது. நீங்கள் இன்புற ஏன் கலைஞர்கள் துன்பத்தில் உழல வேண்டும். அவர்களின் படைப்புத்திறனுக்குத் துயரம் என்கிற சுமையை ஏன் விதிக்கிறீர்கள். உங்களுக்குச் சூரியகாந்தி வேண்டும் என்றால் காசு கொடுத்து வாங்கி வளர்த்து ரசித்து விட்டுப் போங்கள். கலைஞர்களைக் காவு கேட்காதீர்கள்.” என்றேன்.
அவர், ‘ரொம்பக் கொதிக்காதீர்கள்’ என்றார். நான் மென்மையாகச் சொன்னேன். ‘நான் கொதிக்கவில்லை. உணர்வதை வெளிப்படுத்துகிறேன்”. ‘கொதிக்காதே/உணர்ச்சிவசப்படாதே’ என்று என்னிடம் சொல்பவர்கள் எல்லாம் அதைக் காட்டுக்கத்தலில் தான் சொல்கிறார்கள். குசு, மூக்கை பார்த்து ‘உன்கிட்டே ஒரே நாத்தம், சுத்தமா இரு’ என்றதை போலத்தான் இந்த அறிவுரை இருக்கிறது. என்னுடைய உணர்ச்சிகளும், கொதிப்பும் தான் என்னுடைய சிக்கலான வாழ்க்கையில் இவ்வளவு தூரம் வலிமையோடு பயணிக்க உதவியிருக்கின்றன. உணர்வற்று வாழ்வது இயலாத ஒன்று.
என் அம்மாவோடு கொஞ்ச நாட்களுக்கு முன்னால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையின் துயர்கள் குறித்து நகைச்சுவையாக நானும், அவரும் அவ்வப்போது பேசிக்கொள்வோம். அன்றைய தினம் உரையாடல் அப்படிப் பயணிக்கவில்லை. அவர், என்னிடம் மன்னிப்பு கேட்டார். “உங்கள் ஐந்து பேரையும் மத நம்பிக்கை இல்லாதவர்களாக வளர்த்தேன். ஆனால், உன்னை நேர் பாலின ஈர்ப்பு கொண்டவள் என்று கருதிக்கொண்டு வளர்த்து விட்டேன். வேறு எப்படி வளர்ப்பது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அதற்காக வருந்துகிறேன். என்னை மன்னித்து விடு மகளே. என்னை மன்னித்துவிடு. நீ தன்பாலின ஈர்ப்புள்ளவள் என்று தெரிந்த போது, உன் வாழ்க்கை கடினமானதாக இருக்கும் என்று உனக்கு முன்னரே எனக்குத் தெரியும். உன்னை நேர் பாலின ஈர்ப்புள்ளவளாக மாற்ற முயன்றேன். நான் உன் வாழ்க்கையைத் துயரம் மிக்கதாக ஆக்கிவிட்டேன். இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ளாது எனத் தெரிந்ததால், உன்னை மாற்ற முயன்றேன் மகளே. மன்னித்துவிடு” என்று அரற்றினார்.
நான் திகைத்து போனேன். என்னுடைய கதையின் நாயகியாக எப்படி என் அம்மா மாறினார்? வாழ்க்கைப்பயணத்தில் அவர் தன்னைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார், சிந்தனையில் வளர்ச்சி அடைந்திருக்கிறார். நானோ நகைச்சுவை என்கிற பெயரில் தேங்கிப் போய்விட்டேன். என் கதைகளை நகைச்சுவைகளின் வழியாகச் சொல்ல முயன்று தோற்றுவிட்டேன்…ஏன் தெரியுமா? கதைகளுக்கு ஆரம்பம், மையம், முடிவு என்று மூன்று பகுதிகள். நான் முன்னரே சொன்னதைப் போல நகைச்சுவைக்கோ இரு பகுதிகள் மட்டுமே. என்னுடைய நிஜ வாழ்க்கையின் வலிகளை இந்த நகைச்சுவை சரியாகக் கடத்தவில்லை. நகைச்சுவைக்கு என்று நான் உருவாக்கும் பன்ச்லைன்கள் உண்மையின் வலியை சிதைக்கின்றது.
எனக்குள் இன்னமும் என் அடையாளம் குறித்த அவமானம் இருக்கிறது. என் சிந்தனையில் அந்த அவமானம் அறவே இல்லை. ஆனால், என் உணர்சிகளில் அவமானம் இன்னமும் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. என் பாட்டியை நான் நெடுங்காலமாக நேரில் பார்க்கவில்லை. என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.
நான் வளர்ந்தது டாஸ்மானியாவின் வடமேற்கு பகுதி. அதற்குப் பைபிள் பகுதி என்று பெயருண்டு. 1989-1997 காலத்தில் தன்பாலின சேர்க்கையைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கலாமா என்று பெரும் விவாதங்கள் நிகழ்ந்தன. அது என்னுடைய வளரிளம் பருவமும் கூட. என் பகுதி மக்களில் 70% தன் பாலின சேர்க்கையில் ஈடுபடுவர்களைக் கிரிமினல் சட்டங்களில் சிறையில் அடைக்க வேண்டும் என்பது அவர்களின் பார்வையாக இருந்தது. என்னை வளர்த்த, அன்பு செய்த, நான் நம்பிய மக்கள் தன்பாலின சேர்க்கையைப் பாவமாகக் கருதியது என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்பாலின ஈர்ப்புக் கொண்டவர்களைக் கொடூரமானவர்கள், ஈவிரக்கம் அற்றவர்கள், குழந்தைகளோடு உடலுறவு கொள்ளும் காமுகர்கள் என்றெல்லாம் அவர்கள் எண்ணினார்கள்.
நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பது வெளிப்பட்ட போது காலம் கடந்து விட்டிருந்தது. நான் என்னுடைய அடையாளத்தை, தன் பாலின ஈர்ப்பை வெறுப்பவளாக மாறியிருந்தேன். ஒரு ஸ்விட்சை அமுக்கிய உடனே மாறிவிடக் கூடிய உணர்வு அல்ல அது. தன்பாலின ஈர்ப்பை வெறுப்பது உள்ளுக்குள் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டது. இதனால், எங்கள் அடையாளத்தை நாங்களே வெறுக்க ஆரம்பிக்கிறோம். முழுக்க முழுக்க எங்களை நாங்களே வெறுத்து வேகிறோம். அவமானத்தால் கூனிக்குறுகி பத்தாண்டுகள் இருட்டில் இருந்தேன். அந்த இருட்டு என்னைப் பிறர் பார்ப்பதில் இருந்து மட்டும் தான் காக்க முடியும். நான் அவமானத்தில் உழல்வதை அதனால் தடுக்க முடியாது இல்லையா?
ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே மூழ்கடித்தால், அந்தக் குழந்தையால் தான் சுயமரியாதை உள்ளவள்/ன் என்கிற எண்ணத்தை உள்வாங்கிக் கொள்ளவே இயலாது. தன்னைத் தானே வெறுப்பது என்பது வெளியில் இருந்து ஊன்றப்படும் விதை. அது ஒரு குழந்தையின் மனதில் விதைக்கப்பட்டால், அது முட்செடியாக மாறுகிறது. வேகமாக வளர்ந்து கிளைபரப்பி நிற்கிறது. புவி ஈர்ப்பு விசையைப் போல அது நீக்கமற நிறைந்து விடுகிறது. இயல்பான ஒன்றாகத் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. என்னுடைய இருட்டை விட்டு வெளியே வந்த போது என்னிடம் நகைச்சுவை இருக்கவில்லை. யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதிலும், என்னை நானே வெறுப்பதிலுமே என் கவனம் இருந்தது. அடுத்தப் பத்தாண்டுகளில் எனக்கான வெளியை கண்டடைந்தேன். ஆனால், என் வாழ்க்கையின் துயர்களை நகைச்சுவைக்கு நடுவே மறைத்துக் கொண்டேன். என்னுடைய கதையை நான் ஒழுங்காகச் சொல்லியே ஆகவேண்டும்,
யாரும் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத பாடத்தை நான் அதிகவிலை கொடுத்துக் கற்றுக்கொண்டேன். அந்தப் பாடம் தன்பாலின ஈர்ப்பை பற்றியது அல்ல. பொதுவெளியில் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் எப்படி விவாதிக்கிறோம்? அது சிறுபிள்ளைத்தனமானதாக, வெறுப்பு வழிவதாக, அழிவுக்கு அறைகூவல் விடுப்பதாக இருக்கிறது. நாம் யாருடன் முரண்படுகிறோமோ அவர்களை விட நியாய உணர்வு மிக்கவர்கள் என்று காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம். அவர்களின் மனித நேயத்தை நம்முடைய கருத்துக்களின் மூலம் தட்டி எழுப்ப நாம் முனைவதே இல்லை. அறியாமை நம்மிடையே எப்போதும் நடமாடி கொண்டே இருக்கும். யாருக்கும் அனைத்தும் தெரியாது.
நான் உலகத்தை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று என்னுடைய கலை வரலாறு படிப்புக் கற்றுக்கொடுத்தது. இந்த உலகத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று நான் மெத்தனப்படவில்லை. கலை வரலாற்றைப் பொறுத்தவரை பெண்கள் இரு வகை மட்டுமே – கற்புக்கரசி, வேசி. ஆணாதிக்கம் சர்வாதிகாரம் இல்லை. அது ஒரு பெண்ணுக்கு இரண்டு தேர்வுகளைத் தருகிறது. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து நாம் உய்ய வேண்டும். மேற்கத்திய ஓவியங்களில் வந்து செல்லும் பெண்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள், சதைப்பிண்டங்கள்…. நான் இந்த உன்னதக்கலையை அதன் உண்மையான பெயர் சொல்லி அலைக்கப்போகின்றேன். அது ‘bullshit’! ஆண்கள் தங்களுடைய ஆசனவாயின் மலர்களை ஏந்தும் ஜாடிகளாகப் பெண்களைக் கருதி வரைந்தவையே இந்த மேற்கத்திய ஓவியங்கள்…
நான் பாப்லோ பிகாசோவை வெறுக்கிறேன். அவர் நவீன ஓவியக்கலையின் க்யூபிசத்தைத் தந்தவர் என்பதால் அவரை நீங்கள் வெறுக்கக் கூடாது என்பார்கள். பிகாசோ மனநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அந்த மனநோயின் பெயர் பெண் வெறுப்பு. பெண் வெறுப்பு மனநோயா என்று நீங்கள் அதிரக்கூடும். ஆம், தன்பாலின ஈர்ப்பற்ற ஆண்களுக்கு இருக்கும் பெண் வெறுப்பு மன நோயே ஆகும். பிகாசோ மனநோயாளி இல்லை என்று கற்றறிந்த அறிஞர்கள் சொல்வார்கள். நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பிகாசோவின் ஒரு மேற்கோள் இது, ‘ஒவ்வொரு முறை ஒரு பெண்ணை விட்டு விலகும் போதும் அவளை எரிக்க விரும்புகிறேன். அந்தப் பெண்ணை, அவள் பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த காலத்தை மொத்தமாக அழித்துவிட வேண்டும்.’ அவர் பதினேழு வயதே ஆன மரியா தெரசா வால்டர் என்கிற பெண்ணோடு உடலுறவு கொண்டார். அந்தப் பெண் சட்டப்படி வயது வந்தவர் கிடையாது. பிகாசோவிற்கு அப்போது நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. அவருக்குத் திருமணமாகி இருந்தது. அதனை நியாயப்படுத்த வேறு செய்தார். ‘ I was on my prime. She was on her prime’ என்று அதை விவரித்தார். இதனைப் படித்த போது எனக்கு வயது பதினேழு. நான் அப்படியே உறைந்து போனேன்.
பிகாசோ உருவாக்கிய க்யூபிசம் மகத்தான அற்புதம். அவர் நம்மை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தார். இரு பரிமாண தலத்தில் முப்பரிமாண வடிவங்களை வரைய ஓவியர்கள் முயன்று கொண்டிருந்தார்கள். பிகாசோ இப்படி ஒரே ஒரு பார்வையோடு ஓவியங்களை வரைய மாட்டேன் என்று மறுத்தார். ‘உங்களுடைய பார்வைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் பாயட்டும். மேலிருந்து, கீழிருந்து, உள்ளிருந்து, வெளியில் இருந்து என்று அனைத்து பார்வைகளைக் கொண்டதாகவும் இருக்கட்டும்’ என்று அவர் போட்ட வித்தே ஓவியத்துறையைப் புரட்டி போட்டது. அற்புதம். எத்தகைய கலைஞன். இப்போது சொல்லுங்கள். அவர் படைத்த எத்தனை ஓவியங்கள் ஒரு பெண்ணின் பார்வையில் அமைந்திருந்தன. எதுவுமில்லை. அவை அவரின் பிறப்புறுப்பின் எண்ணங்களைக் கலைடாஸ்கோப் கொண்டு காட்டிய ஓவியங்கள். அவ்வளவே. கலையையும், கலைஞனையும் பிரித்துப் பாருங்கள் என்கிறார்கள். நான் பிரித்துப் பார்க்க மறுக்கிறேன்.
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் இத்தனை கலை வரலாறு உங்களை மூச்சு முட்ட வைக்கும். மன்னிக்கவும். இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் பாதிரியார்கள் காமுகர்களாக இருப்பது, ட்ரம் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியது முதலியவை நகைச்சுவைக்குப் பயன்படும். முன்னொரு காலத்தில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் மோனிகா லெவின்ஸ்கி பன்ச் லைனாகப் பயன்படுத்தப்பட்டார். அவரைக் கேலி செய்ததற்குப் பதிலாக, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய கிளிண்டனை நகைச்சுவை கலைஞர்கள் மேடைகளில் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தால், இளம்பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தி விட்டு அதைக்குறித்து அகங்காரத்தோடு அறிவித்துக் கொள்ளும் ஒரு ஆண் அமெரிக்கக் குடியரசு தலைவர் மாளிகையில் உட்கார்ந்திருக்க முடியாது.
நம்முடைய நகைச்சுவையின் இலக்காக இருக்க வேண்டும் தெரியுமா. ஒருவரின் நற்பெயர் மீது நமக்கு இருக்கும் அளவுகடந்த வெறி. அனைத்தையும் விட ஒருவரின் புகழ் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. மானுடத்தை விடவும் நற்பெயர் நமக்கு முக்கியமானதாகி விடுகிறது. இவ்வாறு வழிபாட்டுத்தன்மையைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது ஒழிய வேண்டும். பிரபலங்களான பிகாசோ, கிளின்டன், ட்ரம்ப், வேய்ன்ஸ்டீன், ரோமன் போலன்ஸ்கி என்று பெண்களை, குழந்தைகளைப் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்திய ஆண்கள் விதிவிலக்குகள் அல்ல. அவர்களே பெரும்பான்மை. அவர்கள் தனிப்பட்ட நபர்கள் அல்ல, அவர்களே சமூகத்தின் உண்மை முகத்தைச் சொல்லும் கதைகள்.
இந்தக் கதைகளின் நீதி என்ன தெரியுமா? ‘நாங்கள் பெண்கள், குழந்தைகள் குறித்துத் துளிகூட அக்கறைப்படுவதில்லை. நாங்கள் ஆண்களின் புகழ் குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம். அந்த ஆண்களின் மனித நேயம் எங்கே? இந்த ஆண்கள் நம்முடைய வாழ்க்கை கதைகளைப் படிப்பவர்கள். அவர்கள் மனித நேயமற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நாம் அது குறித்துத் துளி கூடக் கவலைப்படவில்லை. இந்த ஆண்கள் தங்களுடைய விலை மதிப்பில்லாத புகழோடு ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை, இவர்கள் எத்தனை கொடூரமானவர்களாக இருந்தாலும் நாம் கவலை கொள்வதில்லை. புகழ் மீதான உங்களுடைய வெறி கெட்டு ஒழியட்டும். என்னுடைய நேரத்தை வீணடிக்காதீர்கள். ம்ம்ம்ம். (பெருமூச்சு விட்டு சிரிக்கிறார்) எனக்குக் கோபம் கொப்பளிக்கிறது இல்லையா. நான் மன்னிப்புக் கோருகிறேன். நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இந்த அறையில் இருக்கும் சிலர், ‘இந்தப் பெண் தன்னுடைய பதற்றத்தின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து விட்டாள்’ என்று நினைக்கிறார்கள். அது சரி தான். கொஞ்சம் கட்டுப்பாட்டை இழந்துவிட்டேன்.
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் நான் கோபப்படக்கூடாது இல்லையா? தன்னைத் தானே கேலி செய்து கொள்ளும் நகைச்சுவையில் தானே நான் ஈடுபட வேண்டும். எனக்கு நடந்ததை உங்கள் முன் நகைச்சுவை கலக்காமல் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணுடன் என்னுடைய இளம் வயதில் ஆர்வத்தோடு பேசிக்கொண்டு இருந்தேன். எனக்கு அவளைப் பிடித்து இருந்தது. அவளுக்கு ஒரு காதலன் இருந்தான் போல. நான் பேசிக்கொண்டு இருந்த போதே அந்த இடத்திற்கு வந்துவிட்ட அந்த இளைஞன் என்னை ஆண் என நினைத்துக் கொண்டு தாக்க ஆரம்பித்துவிட்டான். பெண் என்று தெரிந்ததும், ‘அவளா நீயி?’ என்று என்னை அடித்துத் துவைத்தான். நான் ரத்தம் சொட்ட சொட்ட நின்றேன். நான் அவனைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் மருத்துவமனைக்கு ஆவது போயிருக்க வேண்டும். நான் இவை எதையுமே செய்யவில்லை. ஒரு குழந்தையை அவமானத்தால் மட்டுமே நிறைத்தால் அது தான் வாழ்வதற்கான எந்தத் தகுதியும் அற்ற ஒருத்தியாகத் தானே உணரும். மற்றொரு புறம், இன்னொரு மனிதன் என்னை வெறுப்பதற்கும் அனுமதி தருகிறீர்கள்.
அந்தச் சம்பவம் நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவள் என்பதால் நிகழவில்லை. அது என்னுடைய பெண் அடையாளம் சார்ந்தது. நீங்கள் பெண் என்பதற்கு வைத்திருக்கும் அளவுகோல்களின் படி, நான் வழிதவறிப்போன பெண். நான் தண்டிக்கப்பட வேண்டியவள். இந்த வாழ்க்கைப்போராட்டம் உங்களால் ஏற்பட்ட பதற்றம். இதனை இனிமேலும் என்னால் சுமந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் போன்ற ‘இயல்பானவர்களாக’ இல்லாத எங்களுக்குள் இந்தப் பதற்றம் சுட்டெரித்துக் கொண்டே இருக்கிறது. உங்களிடம் இருந்து வேறுபட்டு இருக்கும் மனிதர்கள் ஆபத்தானவர்கள் என்பது தானே உங்களுடைய பார்வையாக இருக்கிறது.
இந்த அறையில் இருக்கும் ஆண்களே. உங்களுடைய சட்டையை மடித்துக் கொண்டு இந்த அநீதிக்கு எதிராகக் கிளம்புங்கள். சே, என்ன அவமானம் இது! ஒரு லெஸ்பியன் உங்களுக்கு எப்படி ஆடை அணிவது என்று அறிவுரை சொல்கிறாள். இந்த நிகழ்ச்சியின் கடைசி நகைச்சுவையாக இதுவே இருக்கட்டும்.
என் வாழ்க்கை முழுக்க நான் ஆண்களை வெறுப்பவள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் ஆண்களைச் சத்தியமாக வெறுக்கவில்லை. நான் பெண்கள் ஆண்களைவிட உயர்ந்தவர்கள் என்று என்றைக்கும் எண்ணியதில்லை. அதிகாரம் தலைக்கேறினால் ஆண்களைப் போலவே பெண்களும் நடந்து கொள்வார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால், ஆண்களான நீங்கள் ஒட்டுமொத்த மானுட நிலையை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும் என்று இயங்குகிறீர்கள். அதிகாரம் ஆண்களுக்கு உரியது, மனிதகுல மேன்மை எங்களுடைய பொறுப்பு என்று நீங்கள் ஏகபோக உரிமை கொண்டாடுகிறீர்கள். அப்படித்தான் கதைகளைக் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். உங்களை நோக்கி எழுப்பப்படும் ஒரு விமர்சனத்தை, ஒரு எளிய நகைச்சுவையை உங்களால் நேருக்கு நேராக எதிர்கொள்ள முடியவில்லையே. உங்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பதற்றத்தை வன்முறை இல்லாமல் சீர்செய்ய முடியவில்லை என்றால், நீங்கள் சிரமேற்றுக்கொண்ட பணிக்குத் தகுதியானவர்கள் தானா நீங்கள் என்று கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.
நான் ஆண்களை வெறுக்கவில்லை. நான் ஆண்களைக் கண்டு அஞ்சுகிறேன். ஒரு அறையில் ஆண்களுக்கு நடுவே ஒரே ஒரு பெண்ணாக நான் இருக்க நேர்ந்தால் எனக்குப் பதற்றம் ஏற்படுகிறது. இப்படி நடந்து கொள்வது வேடிக்கையானது என நீங்கள் எண்ணக்கூடும். அப்படி என்றால், நீங்கள் பெண்களோடு உங்கள் வாழ்க்கை முழுக்க உரையாடி இருக்கவில்லை என்று பொருள். நான் உங்களை வெறுக்கவில்லை. என்னைப்போன்ற பெண்களின் வாழ்க்கையை ஆண்கள் வாழ்ந்திருந்தால் என்னாகி இருக்கும் என்று ஆச்சரியப்படுகிறேன்.
நான் சிறுமியாக இருக்கும் போது, ஒரு ஆணால் பாலியல் சித்திரவதைக்கு ஆளானேன். என்னுடைய பதினேழு வயதில் ஒரு ஆண் என்னை அடித்துத் துவைத்தான். என்னுடைய இருபதுகளில் இரு ஆண்கள் என்னை வன்புணர்வு செய்தார்கள். எனக்கு நடந்தவை சரியானவையே என்று ஏன் சமூகம் கருதியது. ஏன் என்னை மட்டும் குறிவைத்து தாக்கினார்கள். நான் உங்களில் இருந்து வேறுபட்டவள் என்பதால் தானே? இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு என்னை ஆட்படுத்தியதற்குப் பதிலாக, என் வீட்டின் கொல்லைக்குக் கொண்டு போய், நெற்றியில் துப்பாக்கியால் என்னைச் சுட்டு கொன்று இருக்கலாமே? உங்களைப் போல இல்லாமல் வேறுபட்டவர்களாக இருப்பது அத்தனை பெரிய குற்றமா?
உங்களிடம் ஒன்றை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். என்னை நீங்கள் பாதிக்கப்பட்டவளாகப் பார்க்க ஆரம்பித்து இருக்கலாம். நான் ஒன்றும் பாதிக்கப்பட்டவள் இல்லை. என்னுடைய கதையை உங்களிடம் சொல்கிறேன். ஏனெனில், என் கதை மதிப்புமிக்கது. நீங்கள் அனைவரும் என் கதையைத் தெரிந்து கொள்ள வேண்டும். நான் என்ன அறிந்து கொண்டேன் என்பதை உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கவே உங்கள் முன் நிற்கிறேன். எங்களை ஆதரவற்றவர்களாக நிற்க வைத்தாலும் எங்களுடைய மனித நேயம் இறந்து விடாது. இத்தனை வலிகளுக்கு நடுவேயும் நம்பிக்கையோடு இருப்பதே மனிதநேயம் தான். இன்னொரு சக மனிதரை ஆதரவற்றவர்களாக நிற்க வைக்கும் உரிமை தங்களுக்கு உண்டு என்று கருதிக்கொண்டு இயங்குபவர்களே மனிதநேயம் அற்றவர்கள். அவர்களே பலவீனமானவர்கள். அத்தனை அடிகளுக்குப் பிறகும், உடைந்து போகாமல் இருப்பதே உன்னதமான வலிமை.
ஒரு பெண்ணை அழிக்கிறீர்கள் என்றால் அவளுடைய கடந்த காலத்தையும் அழிக்கிறீர்கள். என்னுடைய கதையை நான் சாகவிட மாட்டேன். என்னைப்போலப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கேட்டிருந்தால் நான் என்ன செய்திருப்பேன். நான் குறை சொல்வதற்காக என் கதையைச் சொல்லவில்லை. பணம், அதிகாரம், புகழ் நாடி என் கதையை உங்கள் முன் கொட்டவில்லை. என்னை வாட்டிக்கொண்டிருக்கும் தனிமையின் வெம்மை சற்றே தணியவே என் கதையைக் கண்ணீரோடு சொல்கிறேன். உங்களோடு என்னைப் பிணைத்து கொள்ளவே என் கதையைச் சொல்கிறேன். என் கதையை நீங்கள் காதுகொடுத்து கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். முரண்சுவையாக, பிகாசோ சொன்னதைப் போல, ‘நாம் வேறுபட்ட சமூகத்தை வரைய துணிவோம்.’ எல்லா வகையான பார்வைகளும் கொண்ட உலகத்தைப் படைக்க முனைவோம். வேறுபாடுகள் கொண்ட சமூகமே நம்முடைய பலம். வேற்றுமைகளே நமக்கான ஆசிரியர். வேறுபாடுகளைக் கண்டு அஞ்சுவீர்கள் என்றால் நம்மால் எதையுமே கற்றுக்கொள்ள முடியாது.
பிகாசோ எல்லாருடைய பார்வைகளையும் தானே படைத்துவிட முடியும் என்று நம்பியது தான் அவரிடம் இருந்த கோளாறு. அவரின் பார்வையை மட்டுமே கணக்கில் கொண்டதால் தான் நம்மால் ஒரு பதினேழு வயதின் பெண்ணின் பார்வையைக் கவனத்தில் கொள்ளவே இல்லை. ஒரு பதினேழு வயது பெண்ணிடமா உன்னுடைய பலத்தைப் பரிசோதிப்பாய். என்னைப்போன்ற வலிமை மிக்கப் பெண்ணிடம் உன் வேலையைக் காட்டிப்பார் காமுகனே. வரமாட்டாய். உடைந்து, உருக்குலைந்து போய், தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட பெண்ணை விட உலகில் வலிமை மிக்கவர் யார் உள்ளார்? [பலத்த கரவொலி]
எதோ ஆண்களைக் குற்றவாளி கூண்டில் ஏற்றி நான் கேள்விகளால் துளைப்பதாக உங்களுக்குத் தோன்றலாம். முழுக்க முழுக்க உண்மை. நான் ஒரு வாழ்நாள் முழுக்க அனுபவித்ததை ஒரு மணிநேரம் உங்களுக்குச் சுவைக்கத் தந்தேன். அவ்வளவே. எனக்கு ஏற்பட்ட ரணங்கள் உண்மையானவை, அவை என்னை முடக்கி போட்டன. நான் மீண்டும் தழைக்க முடியாது. அதனால் தான் நான் நகைச்சுவை கலைஞராக இனிமேலும் தொடரக்கூடாது. என்னுடைய பதற்றம் மிகுந்த கதையை நகைச்சுவையால் சொல்லிவிட முடியாது. அதனைக் கோபத்தோடு தான் உரக்க சொல்ல முடியும். நான் கோபத்தோடு இருக்கிறேன். எனக்குக் கோபப்பட எல்லா உரிமையும், நியாயமும் இருக்கிறது. ஆனால், என்னுடைய கோபத்தை மற்றவர்களுக்குப் பரப்ப எனக்கு உரிமையில்லை. நான் அதனை நிச்சயம் செய்யமாட்டேன். கோபமும் நகைச்சுவையைப் போல அனைவரையும் இணைக்கக் கூடியது. முகந்தெரியாத மனிதர்கள் அனைவரும் ஒரே கோபத்தில் ஒன்று சேர முடியும். அது ஆனால் நல்லதில்லை.
நகைச்சுவையைப் போலக் கோபம் பதற்றத்தை தணிக்காது. கோபமே ஒரு நச்சான பதற்றம். அது வேகமாகப் பரவும் வியாதி. அதற்குக் கண்மூடித்தனமான வெறுப்பைப் பரப்புவதைத் தாண்டி எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய கருத்துரிமை பொறுப்பு மிக்க ஒன்று. நான் பாதிக்கப்பட்டவள் என்பதற்காக என் கோபத்தைப் பரப்புவது எந்த வகையிலும் வளர்ச்சிக்கு உதவாது. வெறுப்பு என்றைக்கும் மேம்பாட்டிற்குப் பயன்படாது.
வாய் விட்டு சிரித்தால் நம்முடைய நோய்கள் விலகாது. கதைகள் நம்மைக் குணப்படுத்தும். நகைச்சுவை கசப்பான கதைகளைத் தேன் தடவி தருகிற ஒன்று. நீங்கள் நகைச்சுவையாலோ, வெறுப்பாலோ ஒன்று திரள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. என் கதைக்குச் செவிமடுங்கள். என் கதையை ஒவ்வொரு சுய சிந்தனையுள்ள மனிதரும் தனிப்பட்ட முறையில் உணர்ந்து, புரிந்து கொள்ளுங்கள். என் கதை உங்களுடைய கதையைப் போன்றதில்லை. ஆனால், என் கதை உங்களுடைய கதையும் கூட. என் கதையை இனிமேலும் என்னால் சுமக்க முடியாது. என் கதையைக் கோபத்தால் நிறைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய கதையை அக்கறையோடு பார்த்துக் கொள்ள உதவுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
வான்காவின் மகத்தான படைப்பான சூரிய காந்திகள் அவருடைய மனநோயால் நமக்குக் கிடைக்கவில்லை. அத்தனை துயரத்திலும், வலியிலும் அவனை நேசிக்க ஒரு உயிர் இருந்தது. அவன் தம்பியின் அன்பு இந்த நம்பிக்கையற்ற உலகத்தில் பற்றிக்கொள்ள, தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்ள வான்காவுக்கு உதவியது. நாம் படைக்க விரும்பும் கதையின் மையமும் அதுதான். ஒருவரோடு ஒருவர் தொடர்புள்ளவர்களாக உணர வேண்டும். பிணைய வேண்டும். நன்றி!