[கதை] இரகசிய சிநேகிதனே
எத்தணை நாள் தான் இந்த நாடகத்தை கொண்டு செல்வது? இதற்கு ஒரு முடிவு எழுதுவது எப்போது? கானல் நீராய் செல்லும் என் காதல் எப்போது உண்மையாகும்? என் மேல் பெரும் மரியாதை வைத்திருக்கும் என் மனைவிக்கு, இந்த உண்மைகள் தெரிய வந்தால் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்? கேள்விகள் மட்டுமே என்னிடம் உள்ளது. பதில் கிடைக்க உதவ வேண்டியவனோ கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறான். தவறு தான் தன்பாலின ஈர்ப்பாளனான நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தது தவறு தான். என்ன செய்வது அவனை சந்திக்கும் நாள் வரையிலும் என்னைப் பற்றிய என் பாலீர்ப்புப் பற்றிய சரியான புரிதல் இல்லாமல், குழப்பத்தில் இருந்த நான் குடும்பத்தாரின் அழுத்தத்தினால் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாகி விட்டது. நான் தான் தடுமாறி விட்டேன் அவனைப் பார்த்த அந்த நொடி. அவன் ஏன் நான் வேலைக்குச் சேர்ந்த அதே அலுவலகத்தில் வேலைக்குச் சேர வேண்டும்? அதுவும் எனது திருமணத்திற்கு 10 நாட்கள் முன்பு? ஏன் நானாக அவனது அலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அதே நாளில் அவனிடம் பேச வேண்டும்? கடந்த ஆறுமாத காலத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்.
ஒரு ஜீன் மாதத்தில் நான் அக்கௌண்டண்டாக* வேலைப் பார்த்துக் கொண்டிருந்த அதே நிறுவனத்தில் மனித வளத் துறையின் இளநிலை அலுவலராக பீட்டர் வேலைக்குச் சேர்ந்தான். திருப்பூரில் இருந்த நூற்றுக்கணக்கான மில்களில் அதுவும் ஒன்று. பீட்டர் என்னை விட 5 வயது சிறியவன் தான். ஆனால் 35 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தான். 30 வயதைக் கடந்த நானோ 25 வயதிற்குரிய உடலமைப்புடன் இருந்தேன். என்னவோ தெரியவில்லை பார்த்த அன்றே அவனிடமிருந்த ஏதோ ஒன்று என்னை ஈர்த்தது. அன்று மாலையே அவனது தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து அவனுடன் பேசினேன். ஜீலை மாதத் தொடக்கத்தில் எனக்கு திருமணம் முடிவாகி இருந்ததால் அதற்கு அடுத்து வந்த நாட்களில் கல்யாண வேலையில் பிசியாகி விட்டேன். திருமணத்திற்கு 15 நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டியதாகி இருந்தது. அதே வேளையில் நிறுவன கணக்கு வழக்கிலும் ஒரு முக்கிய வேலை இருந்தது. எனவே மேலாளரிடம் பேசி, பி.காம் முடித்துவிட்டு ஹெச். ஆர் சம்பந்தப்பட்ட படிப்பு படித்து இருந்த பீட்டரிடம் அந்த வேலையை கொடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்திருந்தேன். இந்த ஏற்பாடு பீட்டருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்பது அவன் என்னிடம் பேசிய விதத்தில் இருந்து தெரிய வந்தது. எனக்கும் வேறு வழி இல்லை. அன்றிலிருந்து பீட்டர் என்னை வேண்டாதவனாகவே பார்க்க ஆரம்பித்தான்.
எனது திருமணத்திற்காக எடுத்த விடுப்புகள் முடிந்து வேலைக்கு திரும்பி வந்தப்பின்பும் பீட்டர் என்னிடம் வேண்டாவெறுப்பாகவே பேசிக்கொண்டிருந்தான். மதிய உணவு வேலையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் வேளையில் புதிதாக திருமணம் ஆனவன் தான் பொழுது போக்குக்கான டார்கெட். அப்படி என்னை கேலி பேசி கிண்டலடிக்க ஆரம்பித்தவன் கொஞ்ச நாட்களில் சகஜமாக பேச ஆரம்பித்தான்.
ஆகஸ்ட் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை எனது வாழ்க்கையை மாற்றிப் போட்ட நாள். அப்போது பீட்டர் திருப்பூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தான். அலுவலக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அந்த ஞாயிற்றுக்கிழமை பீட்டரின் வீட்டில் சரக்கு அடித்தோம். சரக்கு அடித்தப் பின் மற்ற நண்பர்கள் அனைவரின் வீடுகளும் அருகே இருந்ததால் அவர்களது வீட்டிற்குச் சென்று விட்டனர். நான் பீட்டரின் வீட்டில் இரவு தங்கும் முடிவுடன் தான் வந்து இருந்தேன்.அந்த இரவு ஒரே கட்டிலை பகிர்ந்திருந்த நாங்கள், எங்கள் உடல்களையும் கலக்க விட்டோம். எந்த ஒரு தூண்டுதலும் இல்லாமல், அதுவாகவே தோன்றிய காட்டுத்தீ போல எங்களது உடல்கள் தங்களை தழுவிக்கொண்டன. ஆம் அது காட்டுத்தீ தான். அந்த காட்டுத்தீயிற்கான முகாந்திரமோ தொடக்கமோ இன்று வரையிலும் எங்கள் இருவருக்கும் புலப்படவில்லை. மிகவும் இயல்பாய், இலகுவாய் பல வருடம் பழகிய நண்பர்கள் போல் எங்களது உடல்கள் காமம் பேசி பழகிக் கொண்டன அந்த இரவில். திருமணத்திற்குப் பின் மனைவியுடன் பலமுறை உடலுறவு வைத்திருந்தப் போது கிடைக்காத ஒரு முழுமை பீட்டரிடம் எனக்கு கிடைத்தது. அந்த போதை மயக்கத்தில் பீட்டர் சொல்லித் தான் எனக்கு தெரிய வந்தது பீட்டர் என்னை எந்த அளவுக்கு விரும்பி இருக்கிறான் என்று.
“விக்னேஷ், நான் உன்னை பார்த்த அன்றே எனக்கு உன்னை அவ்வளவு பிடித்து இருந்தது, ஆம் நான் ஒரு தன்பால் ஈர்ப்பாளன். ஆனால் அன்று மாலையே உனக்கு திருமணமாகப் போகும் செய்தி கிடைத்தவுடன் எனது மனதில் இருந்த ஆசையை முற்றிலுமாக நீக்க முயற்சி செய்தேன். அதனால் தான் உன்னிடம் சிடுசிடுப்பாக நடந்து கொண்டேன். இன்று இரவு நீ இங்கு தங்கப்போவதாய் சொன்னதும் அடக்கம் செய்திருந்த எனது ஆசை கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. நமக்குள் நடந்த இந்த உறவு என்னை எந்த அளவுக்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என உனக்கு தெரியாது. இப்போது எனக்கு வருத்தம் மட்டுமே உள்ளது. இந்த மது போதை தெளிந்ததும் நீ என்னை மறந்துவிடுவாய், உன் மனைவியிடம் சென்று விடுவாய். எனக்கும் இது புதிதில்லை” என்று சொன்ன பீட்டரிடம் நான் எப்படிச் சொல்வேன், இந்த இரவு தான் என்னை எனக்கு காட்டிய இரவு என்று. ஆம், பீட்டருடன் இருக்கும் இந்த இரவு தான் என்னைப் பற்றிய ஒரு தெளிவான புரிதலை எனக்கு கொடுத்துள்ளது. ஆம் நானும் ஒரு தன்பால் ஈர்ப்பாளன் தான். இது நாள் வரையிலும் இந்த சமூகம் உருவாக்கி வைத்திருந்த ஆண் என்ற பிம்பத்தை, கர்வத்தை நம்பி என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். பீட்டர்தான் என்னை முழுமையாக்கி, என்னை எனக்கே காட்டியவன்.
அதற்கு அடுத்து வந்த நாட்கள் எனக்கு குழப்பத்தின் நாட்களாக அமைந்தது. இந்த சமூக அமைப்பை எதிர்க்கும் துணிவு என்னிடம் சுத்தமாக இல்லை. என் மனைவியை விட நான் பீட்டரை அதிகம் நேசித்தாலும் எனது மனைவியையும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. அவள் மூலம் கிடைத்திருக்கும் இந்த சமூக அங்கீகாரம் அவள் என் மீது வைத்திருக்கும் காதலையும் மரியாதையையும் விட பெரியது. அதை இழந்து நிற்கும் தைரியம் இல்லை. அதே நேரத்தில் பீட்டரையும் என்னால் விட முடியாது. அவனை நான் மனப்பூர்வமாக காதலிக்கிறேன்.என் இரகசிய காதலன் அவன். என்னதான் நடக்கிறது பார்ப்போமே என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் ஒரு வாரம் கழித்து பீட்டரிடம் எனது காதலைத் தெரிவித்தேன்.
சில சமயங்களில் நாம் எவ்வளவு தான் தெளிவாக இருந்தாலும், நாம் செய்வது நெறிமுறை அளவில் தவறு என்று நமது மனசாட்சி தடுத்தாலும், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி, உணர்ச்சிகளின் போக்கில் சில செயல்களை செய்து விடுவோம். அத்தகைய ஒரு செயல் தான் நான் பீட்டரை காதலித்தது. பீட்டருக்கோ இருதலை கொள்ளி எறும்பின் நிலை. ஒரு பக்கம் நெறிமுறை/ ஒழுக்க மதிப்பீட்டு அளவில் தவறான ஒரு செயல். மறுபக்கம் தனிமையும் காதலின் ஏக்கமும் சூழ் வாழ்வில் ஒழுக்க மதிப்பீடுகளுக்கு முரணாக வந்துள்ள காதல் அழைப்பு.
கிட்டத்தட்ட ஒரு மாத கால அளவில் எங்களுக்குள் தர்க்க ரீதியான, சமூக ஒழுக்க அளவீடுகள் ரீதியான விவாதங்களே தொடர்ந்தன. இன்னொருவரின் இணையர் உன்னை எப்படி என் காதலனாக ஏற்றுக் கொள்வது? இது பீட்டரின் முறைப்பாடு. என்னுள் இருந்த காதல் உணர்வு உன் மூலமாக மட்டுமே தூண்டப் பட்டதற்கும் என்னை நானே கண்டடைந்ததும் உன் மூலமாக நடந்ததற்கு நான் என்னச் செய்வது? இது எனது தன்னிலை விளக்கம். உன் மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன் காதலை என்னிடம் சொல் – இது பீட்டர். திருமணம் எனும் சமூக அங்கீகாரத்தை இழக்க நான் தயாரில்லை – இது நான். இப்படி ஆரம்பித்த தர்க்கங்கள், இவ்வாறாக முடிவுப் பெற்றது.
மனைவியுடன் இருந்தாலும் நான் தான் உன் முதல் காதலெனச் சொல் – இது பீட்டர்.
மனைவியுடன் இருந்தாலும் நீயே என் உயிரானவன், என் காதலன்- இது நான்.
இந்த தர்க்கங்களின் முடிவில் உணர்ச்சிகளே வென்றது. ஏனெனில் எங்கள் இருவருக்கும் தெரியும், எங்களால் ஒருவரைப் பிரிந்து ஒருவர் வாழ்வது கடினம் என. எனவே எங்களின் இந்த இரகசிய உறவை தொடர்வோம் என்ற நிலைக்கு வந்தோம்.
நீங்கள் நினைப்பது சரிதான், எங்கள் வாழ்வில் நாங்கள் செய்த சிறுமைகள் இவை. எங்களுக்கும் அந்தந்த நேரத்து நியாயங்கள் இருந்தன. அடுத்த மூன்று மாதங்கள் எங்களின் காதல் தேனிலவு மாதங்களாக இருந்தன. திருப்பூரும் கோயம்புத்தூரும் எங்கள் காதலின் சாட்சியங்களை பதிவு செய்து வந்தன. வாழ்வில் முதல் காதலை சுவைக்கும் எங்கள் இருவருக்கும் அந்த மூன்று மாதங்கள் இன்பத்தின் மாதங்களாகத் தெரிந்தது.
அதே வருடம் டிசம்பர் மாத ஒரு ஞாயிற்றுக்கிழமையில், இந்த கதையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது போல் நான் என் மனதுடன் போராடிக் கொண்டிருந்த போது, எனது மனைவிக்கு எங்களின் இந்த இரகசிய உறவு நிலை பற்றி எனது கைப்பேசி உரையாடல்கள் மூலம் தெரிய வந்தது.
உறவினர்கள், பெரியவர்களின் முன்னிலையில் பஞ்சாயத்து ஏற்பாடானது. மனைவியா, இரகசிய காதலனா என முடிவெடுக்க வேண்டிய தருணம். மனைவிக்காக இரகசிய காதலனை கைவிட்டு விட்டு மனைவியுடன் வாழ நினைத்தேன். என் காதலனும் எல்லா பழியையும் தன் மேல் ஏற்றுக்கொண்டு, என்னை நிராபராதியாக்கப் போராடிக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் என் மனைவியும் உறவினர்களும் என் காதலனை தாக்கவும் செய்தனர். அப்போது அவன் என்னை பார்த்த ஒரு பார்வை, கூறிய ஒரு வார்த்தை என்னை கொடும் நெருப்பாய் சுட்டெரித்தது. என்னைக் காதலித்ததைத் தவிர வேறொரு தவறும் இழைக்காத என் காதலன் என்னை நிராபராதி கூண்டில் ஏற்றி விட்டு குற்றவாளியாய் நிற்கிறான். முன்னை விட்ட என் மனசாட்சி என்னை அதிகம் குத்தியது, கேள்வி கேட்டது.
அப்போது நான் ஒரு உரக்கக் கத்தி கூறிய ஒரு சொல், ஒரு செயல் அந்த இடத்தில் ஒரு மயான அமைதியைக் கொண்டு வந்து இருந்தது.
கண்ணீரை அடக்க முடியாமல், ஓடிச்சென்று என் காதலனின் இதழில் இதழ் பதித்தேன். நானும் குற்றவாளிதான், என் மனைவியை விவாகரத்து செய்கிறான் என்று நான் உரக்க கத்தியதில் பஞ்சாயத்தில் சடுதியில் ஒரு மயான அமைதி தோன்றியது. ஆம், திருமணமானவன் என சமூகம் கொடுக்கும் அங்கீகாரத்தை விட என் காதல் எனக்கு கொடுக்கும் காதலன் என்கிற அங்கீகாரமே பெரிது. விவாகரத்து ஒன்றே நான் இதுவரை ஏமாற்றிய என் மனைவிக்கு செய்யும் பரிகாரம். என் காதலுக்கு நான் செய்யும் நியாயம். இம்முறை என் மனசாட்சி உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் என்னைக் காப்பாற்றியது. என் மனைவிக்கு இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது தான். ஆனால், அவளுக்கு கடைசி 3 மாதங்களாக நான் செய்த துரோகம் போதும். என்னாலும் பொய்யாய் இரட்டை வாழ்க்கை வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என் காதலனின் ஒரு தீர்க்கமான பார்வை என் வாழ்வை இப்படி தலைகீழாக மாற்றும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
பஞ்சாயத்து முடிந்த அந்த நாளில், என் இரகசிய சிநேகிதனாய் இருந்த பீட்டர் என் கைகளைக் கோர்த்துக்கொண்டு என் காதலனாக, நானும் அவனும் அந்த அறையை விட்டு வெளியேறினோம், எதிர்வரும் இடர்களையும் பிரச்சனைகளையும் ஒன்றாக சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன்.
The image was generated using AI.