திருமண சம உரிமை: தமிழ்நாடு LGBTQIA+ சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கை
Click here for English
மே 3, 2023
பெறுநர்: தமிழ்நாடு அரசு
பொருள்: தமிழ்நாடு மாற்று பால்-பாலின-பாலீர்ப்பு (LGBTQIA+) சமூக மக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான “திருமண சம உரிமை” அறிக்கை
இந்திய உச்ச நீதிமன்றத்தில் திருமண சம உரிமை மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்று வரும் தருணத்தில், கடந்த ஏப்ரல் 23. 2023 அன்று சென்னையில் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் LGBTQIA+ சமூக மக்களுக்காகச் செயல்படும் குழுக்களான கட்டியக்காரி, Queerbatore, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், திருநர் உணவுக் கூடம் (சென்னை), தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தனிநபர் சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மனநல நிபுணர்கள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழ்நாடு வானவில் கூட்டமைப்பின் அங்கமாவர். 2009-ஆம் ஆண்டு சென்னை வானவில் கூட்டமைப்பு என ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைசாரா அமைப்பு தற்போது தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவுகளை அரசின் பார்வைக்குச் சமர்பிக்கிறோம். திருமண சம உரிமை வழக்கு விசாரணையில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தனது பதில் மனுவைத் தாக்கல் செய்யும்போது இதில் உள்ள கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
- அறிமுகம்
- திருமணமும் அதன் பலன்களும் – LGBTQIA+ சமூக மக்கள் தங்கள் திருமணத்திற்குச் சமூகப் பாதுகாப்பு கோருவது ஏன்?
- LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது இருக்கும் தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?
- சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல்
- தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை
அறிமுகம்:
1.1 தமிழ்நாடு அரசு திருநர் மக்களைச் சட்டரீதியாக அங்கீகரித்ததுடன் அவர்களுக்கான நலவாரியத்தையும் 2008-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது. நால்சா (NALS) vs ஒன்றிய அரசு வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாடு இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், அருண் குமார் மற்றும் பிறர் vs பதிவுத்துறை தலைவர் மற்றும் பிறர் வழக்கில் திருநங்கைக்கும் ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லுபடியாகும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எஸ். சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் LGBTQIA+ சமூக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்ததுடன், அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களையும் வழங்கியது.
1.2 கொள்கை மாற்றம், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் மூலம் LGBTQIA+ சமூக மக்களை அங்கீகரித்து, ஆதரித்து வரும் மாநிலம் என்ற முறையில் மற்றும் சுய மரியாதை/சீர்த்திருத்தத் திருமணத்தை இந்து திருமணச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 1968-ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த மாநிலம் என்ற முறையில், திருமண சம உரிமை விவகாரத்திலும், பாலின பாகுபாடின்றி (ஆண், பெண், திருநர்) LGBTQIA+ சமூக மக்கள் அதிகாரப்பூர்வமாகத் திருமணம் செய்து கொள்வதற்கான உரிமையை வழங்கும் விவகாரத்திலும் தமிழ்நாடு அரசு LGBTQIA+ மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
1.3 இந்திய உச்ச நீதிமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பட்டுள்ள மனுக்கள் (இனி முதல் “திருமண சம உரிமை மனுக்கள்” எனக் குறிப்பிடப்படும்) மீதான விசாரணையின்போது, சிறப்புத் திருமணச் சட்டம் (Special Marriage Act) மற்றும் மத ரீதியான தனிப்பட்டச் சட்டங்களின் (Religious Personal Laws) கீழ் LGBTQIA+ மக்கள் திருமணம் செய்து கொள்வதற்குத் தமிழ்நாடு அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
2. திருமணமும் அதன் பலன்களும்
2.1 திருமணம் என்பது பெரும்பான்மை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வயது வந்த இருவருக்கு இடையேயான சமூக ஒன்றிணைவு ஆகும். திருமண சம உரிமை மனுக்களிலும் இது குறித்து மனுதாரர்களால் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2.2 திருமணத்தின் மூலம் கிடைக்கும் சமூக பாதுகாப்பைத் தமிழ்நாடு அங்கீகரித்துள்ளது. இதன் காரணமாகவே ஏழைப் பெற்றோரின் பெண் பிள்ளைகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவைகள், விதவைகளின் மகள்கள், சாதி மறுப்பு/கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் ஆகியோருக்கு உதவும் வகையில் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம், அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம், டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
.2.3 திருமணம் என்பது LGBTQIA+ சமூகத்தினருக்குத் தேவையானதோ முக்கியமானதோ இல்லை, திருமணம் செய்து கொள்ளாததால் அவர்களின் அடிப்படை உரிமைகள் எதுவும் மறுக்கப்படவில்லை என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் தற்போது இருக்கும் திருமணச் சட்ட கட்டமைப்பில் உள்ள தடைகளையும் எடுத்துக் காட்டியுள்ளது. ஒன்றிய அரசின் வாதம் பின்வருமாறு – “அவர்கள் இந்த நாட்டில் வாழலாம், ஆனால் தற்போதைய சட்டக் கட்டமைப்பின் கீழ் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இவ்வாறு திருமணம் செய்துகொள்ள முடியாத நிலை காணப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதாக அமையாது.” சட்டத்தையும், LGBTQIA+ சமூக மக்களின் தேவைகளையும் ஒன்றிய அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. தங்கள் இருப்பின் காரணமாக தொடர்ந்து ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படும் LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் குடும்பங்களை விட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர். தங்களுக்கான இடத்தை இந்தச் சமூகத்தில் அடைய LGBTQIA+ மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். குடும்பங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தங்களுக்கான குடும்பங்களை சுயமாகத் தாங்களே தேர்ந்தெடுத்து (Chosen Family) தங்களுக்கான சமூகத்தையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது திருமண உறவு அளிக்கும் உரிமைகளை வழங்குவது இல்லை. டி. வேலுச்சாமி vs டி. பச்சையம்மாள் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ஜோடிகளின் உறவின் தன்மை “திருமணத்தை ஒத்து இருந்தால்” மட்டுமே பெண்கள் குடும்ப வன்முறைப் பாதுகாப்புச் சட்டம், 2005-இன் கீழ்
2.4 திருமணத்தின் அடிப்படையில் கிடைக்கும் பல்வேறு பலன்களுக்கு அடிப்படையாக இருக்கும் சட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் தற்போதைய திருமணக் கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிய அரசு முயல்வது, எதிர்பாலீர்ப்பு கொண்டவர்களுக்குக் கிடைக்கும் உரிமைகளை ஏற்கெனவே இந்தியச் சமூகத்தில் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ மக்களுக்கு வேண்டுமென்றே கிடைக்கவிடாமல் செய்வதற்குச் சமமானது.
2.5 சமூக அமைப்பு என்ற முறையில் திருமணமானது பல்வேறு பலன்கள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றுக்கு முக்கியக் காரணியாக உள்ளது. இந்தியச் சட்டக் கட்டமைப்பு மற்றும் இந்தியக் கலாச்சாரச் சூழலில் திருமணத்தின் மூலம் கிடைக்கும் அந்தஸ்தானது திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் வேறு எந்த உறவின் மூலமும் கிடைக்காது. திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறித்த சிறிய பட்டியல் பின்வருமாறு (இவை மட்டுமே அல்ல):
திருமணத்தின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு
- திருமண பந்தத்தில் உள்ள இருவர் அல்லது இருவரில் ஒருவர் மட்டுமே தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்ள முடியும், வேறு யாரும் இதைச் செய்ய முடியாது. LGBTQIA+ மக்களின் உறவானது அவர்களது பெற்றோரால் தொடர்ந்து பிரிக்கப்பட்டு வருவதால் இந்த அம்சம் அவர்களுக்கு மிக முக்கியமானது மற்றும் மிகுந்த பலனளிக்கக்கூடியது ஆகும்.
- இந்தியாவில் தற்போது திருமண ஆகாத ஜோடிகளை விடத் திருமணமானவர்களுக்கு எளிதில் வாடகைக்கு வீடு கிடைக்கிறது. தங்கள் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படும் LGBTQIA+ சமூக மக்கள், தங்களின் கல்விச் சான்றுகள், அடையாள ஆவணங்களை வீட்டில் இருந்து உடனடியாக எடுத்துச் செல்ல முடியாது என்பதாலும், வேலைக்காக வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் தங்குவதற்கான இடத்தைக் கண்டறிந்து பெற திருமண உரிமை அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- கூட்டு வங்கிக் கணக்கு தொடங்குதல், ஆயுள் காப்பீடுகளில் இணையரைப் பலனாளியாகச் சேர்த்தல் போன்ற பலன்கள் LGBTQIA+ சமூகத்தினருக்கும் கிடைக்கும்.
- தங்கள் இணையரின் உடல் நலம் தொடர்பான முடிவுகளை எடுத்தல், அவசரக் காலங்களில் இணையரின் பிரதிநிதியாகச் செயல்படுதல் போன்ற உரிமைகள் LGBTQIA+ சமூக மக்களுக்குத் திருமணம் மூலம் கிடைக்கும். உயிர் காக்கும் சிகிச்சைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றை மேற்கொள்ள உறவினர்கள் அல்லது இணையரின் கையொப்ப ஒப்புதலை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோருகின்றனர். தற்போதைய சூழலில் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த மிக முக்கியமான உரிமை கிடைப்பதில்லை. பெரும்பாலான LGBTQIA+ சமூக மக்கள் தங்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களின் காரணமாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அவர்களின் சார்பாக இந்த முடிவுகளை எடுக்க அவர்களின் இணையருக்குத் திருமண உரிமை உதவிகரமாக இருக்கும்.
- திருமணமானது ஒரு தம்பதியின் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பை வழங்குவதுடன், இணையரின் இறப்பின்போது அவரின் உடலைப் பெறுவதற்கான உரிமை, இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு வாரிசுதாரர் சான்றைப் பெறுதல், உயிலைச் செயல்படுத்துதல், கருணையின் அடிப்படையில் பணி பெறுதல் போன்ற உரிமைகளையும் வழங்குகிறது.
3. LGBTQIA+ சமூக மக்களை உள்ளடக்கும் வகையில் தற்போது உள்ள தனிப்பட்ட சட்டங்களில் (Personal laws) மாற்றங்கள் செய்ய முடியுமா?
3.1 இந்து திருமணச் சட்டத்தில் “மணமகள்”, “மணமகன்” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. சிறப்புத் திருமணச் சட்டத்தில் “நபர்கள்”, “தரப்பினர்” ஆகிய வார்த்தைகளும், அதன் பிரகடனத்தில் “கணவன் மற்றும் மனைவி” என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ திருமணச் சட்டத்தில் “நபர்கள்” எனும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மணமகன், மணமகள், கணவன், மனைவி ஆகிய வார்த்தைகளுக்குப் பதிலாக நபர்கள், இணையர்கள் எனும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம் பாலினம் அடிப்படையிலான வார்த்தைகளினால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
3.2 குடும்பத்திற்குள்ளான திருமணங்கள் குறித்த ஒன்றிய அரசின் கவலையைத் தீர்க்கும் பொருட்டு, தடைசெய்யப்பட்ட உறவுமுறைகள் குறித்த பட்டியலை இணைத்து ஒரு ஒருங்கிணைந்த பட்டியலை உருவாக்க வேண்டும்.
3.3 திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயதை 18-ஆக மாற்ற வேண்டும். LGBTQIA+ மக்களின் பால்-பாலின-பாலீர்ப்பு அடையாளங்களை அவர்களின் பெற்றோர்கள் சிறிய வயதில் கண்டறிந்தால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக முடிந்தவரை விரைவாகத் திருமணம் செய்து வைக்க முடியும் என்பதால் இந்த மாற்றம் LGBTQIA+ மக்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
4. சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழான அறிவிப்புக் கால முறையை மாற்றுதல்
4.1 தற்போதைய சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் “அறிவிப்புக் காலம்” எனும் சட்டத்திற்கு முரணான நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் படி, திருமணம் செய்து கொள்பவர்கள் குறித்த விவரம் அவர்கள் மாவட்டத்தின் பதிவாளர் அலுவலகத்தில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தங்கள் வீட்டை விட்டு வெளியேறிய மற்றும் சிறைப்படுத்துதல், கட்டாய அடையாள மாற்றத்திற்கு உட்படுத்துதல், ஆணவக் கொலை போன்ற அபயாங்களை எதிர்கொள்ளும் LGBTQIA+ மக்களுக்கு இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். “மறுப்புத் தெரிவித்தல்” என்பது முறையாக வரையறுக்கப்படாததால் இந்த 30 நாள் அறிவிப்புக் காலத்தில் யார் வேண்டுமானாலும் மறுப்பு தெரிவிக்கும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் LGBTQIA+ சமூக மக்களுக்கு இந்த அறிவிப்புக் காலம் கூடுதல் சிக்கலை ஏற்படுத்தும்.
4.2 எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 சட்டத்திற்கு முரணானவை என அறிவிப்பதற்குத் தமிழக அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும். 30 நாள் அறிவிப்புக் காலம் நடைமுறையில் இருக்கும் வரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் LGBTQIA+ சமூக மக்களுக்கு வழங்கப்படும் திருமணம் தொடர்பான உரிமைகளை அமல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
5. தனிப்பட்ட சட்டங்களை மேம்படுத்துவதற்கான அடுத்த படி – சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்திற்கான உரிமை
5.1 LGBTQIA+ மக்களுக்கான திருமண உரிமை அவர்களின் வாழ்க்கையை நிச்சயமாக மேம்படுத்தும். ஆனால் தங்களுக்கான குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை LGBTQIA+ மக்களுக்கு வழங்குவதன் மூலம் மட்டுமே அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்திட முடியும். பலமான குடும்ப மற்றும் சமூக உறவு பிணைப்பைக் கொண்ட ஆதிக்க பாலினத்தைச் சேர்ந்த எதிர்பாலீர்ப்பு உடையவர்களைப் போல் அல்லாமல் LGBTQIA+ சமூக மக்கள் தாங்கள் பிறந்த குடும்பத்தையும் தங்களின் சொந்த ஊர்/சமூகத்தையும் விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுகின்றனர் அல்லது வெளியேற்றப்படுகின்றனர்.
5.2 குடும்ப அட்டை வழங்குதல், ஒரே முகவரியில் அனைவருக்கும் அடையாள ஆவணம் வழங்குதல் போன்றவற்றின் மூலம் சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும். பிறந்த குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜோடிகளுக்குப் பாதுகாப்பு அளித்தல், குழந்தைகளைப் பராமரிப்பதற்கான உரிமை, சொத்துரிமை, சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் மருத்துவ முடிவுகளை எடுப்பதற்கான உரிமை, காப்பீடு பெறுதல் ஆகியவை வழங்கப்பட வேண்டும். மேலும் பிற குடும்ப அமைப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று சுயமாகத் தேர்ந்தெடுத்த குடும்பங்களுக்கும் அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் அளிக்கப்பட வேண்டும்.
5.3 LGBTQIA+ சமூக மக்கள் ஆபத்துக் காலங்களில் உதவிக்காக நாடிச் செல்லும் சட்ட அமலாக்கத் துறையினர் மற்றும் பிற துறையினருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லையெனில் சட்டம் அல்லது கொள்கையில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் பலனளிக்காது. எனவே சுஷ்மா vs காவல்துறை ஆணையர் வழக்கில் 07-06-2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி, காவல் துறையினர், சிறைத் துறையினர், மாவட்ட மற்றும் மாநிலச் சட்டச் சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் மற்றும் அடிமட்டத்தில் பணியாற்றும் சமூகத் தலைவர்கள் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான உதவியை வழங்குவோம் எனும் உறுதியை தமிழ்நாடு அரசிற்கு அளிக்கிறோம்.
நன்றி,
கட்டியக்காரி, நிறங்கள் சாரிட்டபிள் டிரஸ்ட், ஓரினம், சாத்தி (SAATHII), சகோதரன், தமிழ்நாடு LGBTIQ இயக்கம், தோழி, டிரான்ஸ் ரைட்ஸ் நவ் பிரதிநிதிகள் மற்றும் தனிநபர் சமூகச் செயற்பாட்டாளர்கள்
Click here for English
Translation credits: Anish Anto
Image credits: Gokul