மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களின் கடிதம்
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களான** நாங்கள் வலுவான எதிர்ப்பு மற்றும் ஒதுக்கபடுதலுக்கு இடையில், அறியாமையை விவரங்களோடும், வெறுப்பை அன்பு மற்றும் பொறுமையுடனும் எதிர்கொள்ள விரும்புகிறோம். ஆண்-பெண் உறவுகளை மட்டுமே அங்கீகரித்து அவற்றோடு இசைந்திராதவர்களை மன, உடல் மற்றும் ஆன்மீக ரீதியாக வெகுவாகத் துன்புறுத்தும் பண்பாட்டு வழக்கங்களுக்கு எதிராக நாங்கள் இணைந்து நிற்கிறோம்.
தம் அறியாமையினால் பலர் எங்களை மன நலம் பிறழ்ந்தவர்கள் என்றும், நம் நாட்டின் பாலியல் அறங்களை சீர்குலைக்க வந்தவர்கள் என்றும் குடும்பப் பண்பாடுகளின் எதிரிகள் என்றும் எண்ணுகின்றனர். இவை மிகத் தவறான புரிதல்கள். இன்று இதுதான் விதிமுறை என்பது போல செயல்படும் ஆண்-பெண் விழைவுகள், பாலின அடையாளங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு வெளியில் எங்கள் காதல்களும் அடையாளங்களும் நிற்கின்றன. எனவே அவை இயற்கைக்கு மாறானவையாகவும் வெளி நாடுகளிலிருந்து உட்புகுந்தவையாகவும் கருதப்பட்டு வெறுக்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் இந்த காதல்களும் அடையாளங்களும் எங்களுக்கு மிக இயற்கையானவை. இவை நமது கலாச்சாரங்களில் தொன்றுதொட்டு வழங்கிவருவதற்கான சான்றுகளும் உண்டு.
இன்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் பாலின மற்றும் பாலியல் வெளிப்படுகளுக்குள் எங்கள் வாழ்க்கைகள் அடங்கவில்லை என்பதால் நாங்கள் நோயாளிகள் என்றோ, பண்பாட்டுச் சீரழிவுகள் என்றோ சம மனித உரிமைகள் பெற தகுதியற்றவர்கள் என்றோ அர்த்தமாகாது.
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டிருப்பது எங்களது குடும்பங்களிடமிருந்தே எங்களைத் தனிமைப்படுத்துகிறது. எங்கள் குடும்பங்களுக்குள் நாங்கள் சிறுபான்மையினராகிறோம். மேலும், காதல்களும், பாலியல் உணர்வுகளும், பாலின வெளிப்பாடுகளும் நம் அனைவரது வாழ்க்கைகளிலும் முக்கிய இடம் வகிப்பதால் இவை சாதி, வர்க்க, மத, மற்றும் இதர கொள்கைவாத அடையாளங்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஒருவரது பின்னணி எதுவாயினும், அவரது பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் வழக்கத்திற்கு மாறானதா இருக்கும் பொழுது அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் தனிமையும் மன உலைச்சலும் மிகக் கடினமானவை. ஒதுக்குதலும், வசைமொழிகளும் வன்முறையும் அரங்கேறும் களங்களாக எங்களது வாழ்க்கைகள் மாறிவிட நாங்கள் விரும்பவில்லை. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் குறித்த புரிதலும் விவாதங்களும் விரிவடைந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில்,
எங்கள் குடும்பங்கள் மற்றும் நண்பர்களிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் இவை:
- மற்ற நண்பர்களுக்கும் குடும்பத்தின் மற்ற அங்கத்தினருக்கும் வழங்கப்படும் அதே மதிப்பையும் புரிதலையும் எங்களுக்கும் வழங்க முன்வரவும்
- எங்களுடைய விழைவுகளை இயற்கையானவை என்று கருத முயலுங்கள். அவற்றை அவமதிப்பதம் மூலமும், நகைப்புக்குள்ளக்குவதம் மூலமும் எங்களைப் வேற்றுமைபடுத்த வேண்டாம்.
- பால் சமந்தப்பட்ட ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் எங்களைப் பார்க்காமால், முழுமையான மனிதர்களாய் நாங்கள் செயல்படுவதைக் காண முயலுங்கள்
- நடை, உடை, நண்பர்கள், காதலர்கள், வாழ்க்கைத் துணை ஆகியவற்றைத் தேர்வு செய்யும் சுதந்திரத்தைப் பறிக்காதீர்கள்
- எங்களுடைய விருப்பங்களுக்கு மாறாக ஆண்-பெண் திருமண வாழ்வில் ஈடுபட எங்களை வற்புறுத்த வேண்டாம்
- உங்களுடைய மதம், பண்பாடு, அரசியல் கொள்கைகள் அல்லது தனிப்பட்ட நம்பிக்கை நிலைகளையும் கடந்து எங்களை சமமானவர்களைக் காண முயலுங்கள்
உடல் மற்றும் மன நல நிபுணர்களிடம் எங்களுடைய வேண்டுகோள்கள் இவ்வாறு:
- மாற்று சிகிச்சைகளின் மூலம் எங்களது பாலியல் நிலைகளையும் பாலின அடையாளங்களையும் மாற்றியமைக்க முயல வேண்டாம். எங்களது இயற்கையான விழைவுகளை ஆண்-பெண் பாலியல் உறவு முறையில் வற்புறுத்தி மாற்றியமைக்க மேற்கொள்ளப்படும் இம்முயற்சிகள் எங்கள் மன நலனை தீவிரமாக பாதிக்கின்றன
- முறையான மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கும் உங்களது நற்பணியில் உங்களுடைய தனிப்பட்ட நம்பிக்கைகளும் தீர்மானங்களும் குறுக்கிட அனுமதிக்காதீர்கள்
- பால் மாற்று அறுவை சிச்சை வேண்டும் நபர்களுக்கு சிகிச்சையளிக்கும் பொழுது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சைத் தர நிர்ணயங்களைப் பின்பற்றவும்
- உடல் மற்றும் மனநல சேவைகள் வழங்கும் அமைப்புகளில் மாற்றுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் நல்ல முறையில் நடத்தப்ப வேண்டும்.
- உங்களை அணுகும் நோயாளிகள் மட்டுமன்றி உங்களுடன் பணிபுரிபவர்களும் மாற்றுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களாக இருக்கலாம்.
- உடல் மற்றும் மன நல மருத்துவத் துறை பயிற்சித் திட்டங்களில் மாற்றுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் குறித்த விவரங்களையும் சேர்க்கவும்.
- மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களுக்கு எதிரான வெறுப்பை ஒருபொழுதும் அனுமதிக்காத நிலையை நோக்கி உங்களது நற்பணியை ஆற்றவும்
ஊடகங்கள் மற்றும் திரைப்படத் துறையினரிடம் எங்களுடைய வேண்டுகோள்கள்:
- எங்களைப் பற்றிய அல்லது எங்களைப் போன்றோருடைய சித்தரிப்புகளை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், தெளிவான தகவல்களுடனும், பாரபட்சமின்றியும் வழங்குங்கள்
- எங்கள் வாழ்வு குறித்த பழக்கப்பட்ட வகைமாதிரிகளையும், கற்பிதங்களையும், தவறான மற்றும் கிளர்ச்சியூட்டும் தகவல்களையும் தவிர்க்கவும்
- எங்களுடைய உண்மையான பிரச்சனைகளை வெளிக்கொணர்வதில் மௌனம் சாதித்து எங்களைக் குரலற்ற சிறுபான்மையினராய் ஆக்காதீர்கள்
கல்வி நிலையங்களையும் திட்ட நிபுணர்களையும் நாங்கள் கேட்டுக்கொள்வது:
- மாற்றுப் பாலியல் கொண்ட நபர்களைப் வேற்றுமைபடுதுதலுக்கு உட்படுத்தாத சூழலை உறுதி செய்யவும்
- மாணவ மாணவியர் தமது பாலினம் (Gender), பாலின அடையாளம் (Gender Identity), பாலீர்ப்பு (Sexuality) ஆகியவை காரணமாகக் கல்வி நிலையங்களில் பாலியல் வன்முறைக்கும் மன ரீதியான துன்புறுத்துதலுக்கும் ஆளாகாமல் பாதுக்காக்கும் பொறுப்பு உங்களுடையது
- பாதுகாப்பான உடலுறவு குறித்த கல்வி மாணவர்களுக்கு அவசியம்.மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் குறித்த தெளிவான, விருப்பு வெறுப்புகள் கடந்த விவாதங்களும் அதில் இடம்பெற வேண்டும்
அலுவலகங்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் எங்களது வேண்டுகோள்கள்:
- அலுவலகச் சூழல், நிர்வாகம், பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் நன்மைகள், சலுகைகள் ஆகியவை அனைவருக்கும் சமமானவையாய் இருக்க வேண்டும்.
- பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளில் ஒவ்வொருவருடைய மாறுபட்டப் பின்னணிகளையும் அடையாளங்களையும் மதிக்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட வேண்டும்.
- மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்களை வேற்றுமைபடுத்தும் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
Note **
ஒருபாலீர்ப்பு or தன்பாலீர்ப்பு – Homosexuality
இருபாலீர்ப்பு – Bisexuality
நம்பிகள் – Gays
நங்கைகள் – Lesbians
ஈரர் – Bisexuals
திருநங்கைகள் – MTF Transgenders
திருநம்பிகள் – FTM Transgenders
மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பால் அடையாளம் கொண்டவர்கள் – LGBT
ஆங்கில மூலம் கீழே. பக்கத்தின் இறுதியில் உள்ள படிவத்தில் கையெழுத்திடவும். எங்கள் மனமார்ந்த நன்றி!