நவம்பர் 20: திருனர்கள் நினைவு தினம்
[ தமிழாக்கம் : ஸ்ரீதர் சதாசிவன் ]
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 20 தேதி திருனர்கள் நினைவு தினம் (Transgender Day of Remembrance) அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் இயற்கை அல்லாத பிற வழிகளில் உயிரிழந்த நம் திருனர் சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள். 1998 ஆம் ஆண்டு ரீடா ஹெஸ்தர் ஒரு மெழுகுவர்த்தி அஞ்சலியாக துவங்கிய இந்த நாள், இன்று உலகில் பல நகரங்களில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, நண்பர்களுடன் ஒரு பாட்லக் நிகழ்ச்சி, உடைகள் பரிமாறும் நிகழ்ச்சி மற்றும் என் நண்பர் பால் (Paul) ஏற்பாடு செய்திருக்கும் ஒரு திறந்த மேடை நிகழ்ச்சி என்று நான் இந்த நாளை கழிக்கப்போகிறேன். சில ஆண்டுகளாக, இது போன்ற நிகழ்ச்சிகளில் திருனர்களின் பெற்றோர்களும் பங்குகொண்டு, தங்களது குழந்தைகள் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள், இந்த சமுதாயத்தில் நடக்கவேண்டிய மாற்றங்கள் பற்றி பேசுவதை பார்த்திருக்கிறேன். அவர்களின் வருகை, அவர்கள் தங்கள் குழந்தைகள் மேல் காட்டும் அக்கறைக்கும், ஆதரவிற்கும் ஒரு அடையாளம்.
எனக்கு இந்த நாள் ஒரு உணர்ச்சிகரமான நாள். இந்த சமுதாயத்தின் கொடுமைகளுக்கு பலியாகி, ஈனர்களால் கொலை செய்யப்பட்டு நம்மை விட்டு பிரிந்த உயிர்களையும், மற்றும் இந்து சமுதாயம் அவர்கள் மீது காட்டும் வேற்றுமையையும், வெறுப்பையும் தாங்கமுடியாமல் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்ட உயிர்களையும் நினைவுகூரும்போழுது என் மனம் கனக்கிறது. அவர்களின் இறப்பின் பொழுது கூட, ஊடகங்களும், சட்ட ஒழுங்கு அதிகாரிகளும் திருனர்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்கள் விரும்பி ஏற்கும் பாலடையாளத்தை சட்டை செய்யாமல், தவறான பாலை பயன்படுத்துவதை கண்டால் என்னால் கோபப்படாமல் இருக்கமுடியவில்லை. (அதாவது திருநங்கைகளை ஆண் என்றும், திருநம்பிகளை பெண் என்றும் தவறாக அடையாளப்படுத்துவது)
இறப்பில் கூட இந்த உயிர்களுக்கு மதிப்போ, மரியாதையோ கிடைப்பதில்லை. இத்தனை உயிர்கள் இறந்தாலும், இந்த சமுதாயம் திருனர்களை புரிந்துகொள்வதில்லை. இந்த சோகம் ஒருபுறம் இருந்தாலும், எதோ இன்று நான் உயிருடன் இருக்கிறேன் என்பதில் ஒரு சந்தோஷம். வாழக்கையில் பல தருணங்களில் நான் என் உயிரை துறக்கும் முடிவிற்கு வந்திருக்கிறேன். நல்லவேளை அதை செயல்படுத்தவில்லை. என்னுள் இருக்கும் மனவலிமைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அந்த விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி.
இந்த ஆண்டு மிகவும் கடுமையாக இருந்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் தலை நகரான வாஷிங்க்டன் டீ.சீ யில் திருனர்களுக்கு எதிராக பல சம்பவங்கள், தொடர் கொலைகள், அதுவும் குறிப்பாக வெள்ளையர் அற்ற பிற சமூகங்களில்! இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். மெக்டோனல்ட் கடையில் ஒரு திருநங்கை, பணியாளர்களால் கண்மூடித்தனமாக அடிக்கப்பட்டார். கடையில் இருந்தவர்களும், பிற பணியாளர்களும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டும், நடந்ததை வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள். என்ன கொடுமை! அதேபோல, நான் வசிக்கும் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில், எனது இல்லத்திற்கு அருகாமையில் ஒரு திருநங்கை ஈனர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார தாமதத்திற்கு பிறகு கடைசியாக போலீஸ் அதை “ஹேட் கிரைம்ஸ்” (Hate crimes) என்று பதிவுசெய்தார்கள். இதுபோல கவனத்திற்கு வராத, தாக்குதல் நிகழ்வுகள் ஏராளம். கவனத்திற்கு கொண்டுவரப்பட்டால், அதை பதிவு செய்து, உடனடியாக நடவடிக்கை எடுப்பதும் வெகு அபூர்வம் எனபது சோகமான உண்மை.
படம்: கடந்து மூன்று வருடத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட திருனர் கொலைகள் (Click to enlarge)
இணைப்புகள்: