பாலின சிறுபான்மையினரும் இந்திய நிறுவனங்களும்
மனிதனுடைய அன்றாட தேவைகளை சமாளிக்க பணம் வேண்டும். பணம் சம்பாதிக்க மனிதன் தேர்ந்தெடுத்தது வியாபாரம் செய்வது அல்லது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணி செய்வது. இன்றைய உலகில் மனிதன் பலருடன் போட்டி போட்டு தன் திறமையை நிருபித்து வேலை பார்க்க வேண்டியுள்ளது. ஆண், பெண், எதிர்பாலீர்ப்பாளர்கள் என்று பெரும்பான்மையாக காணப்படும் பாலியல் அடையாளங்களையும் தாண்டி பாலின சிறுபான்மையினராக உள்ள நங்கை, நம்பி, ஈரர், திருனர் (LGBT) போன்றவர்கள் சமுதாயத்தில் தங்களின் வாழ்வுரிமையை, வாழ்வாதார நிலையை மேன்படுத்திக்கொள்ள, நிலைநிறுத்திக்கொள்ள கண்டிப்பாக வேலை தேவைப்படுகிறது. பாலின சிறுபான்மையின மக்கள் பலர் நல்ல கல்வி அறிவு இருந்தும், நல்ல திறமைகள் இருந்தும் பாலடையாளம் அல்லது பாலீர்ப்பு காரணமாக நிறுவனங்களில் வேலை மறுக்கப்படுகின்றனர். வளர்ந்த நாடுகளில் உள்ள பாலின சிறுபான்மையின மக்களுக்கு வேலை நிறுவனங்கள் ஆரோக்கியாமான அலுவலக சூழலை ஏற்படுத்தி, சமஉரிமைகளை வழங்குகின்றன.
அத்தகைய சூழலை இந்தியாவிலும் பல நிறுவனங்கள் செயல்படுத்த முன்வரவேண்டும். அமெரிக்காவில் வெளிவரும் பார்ச்யூன் (FORTUNE) இதழ் ஓவ்வொரு ஆண்டும் உலகில் பணிசெய்ய சிறந்த நூறு நிறுவனங்களை தேர்ந்தெடுக்கிறது. வேலை செய்ய ஏற்புடைய பல்வேறு சாதகமான காரணிகளை ஆராய்ந்து இந்த தர வரிசை தீர்மாணிக்கப்படுகிறது. உலகில் முதல் பத்து பணிசெய்ய சிறந்த நிறுவனங்கள் பாலின சிறுபான்மையின மக்களை பணியில் அமர்த்தி, அவர்களுக்கு சம உரிமையும் பாதுகாப்பும் அளித்து அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அந்த பத்து நிறுவனங்களில் ஒன்பது நிறுவனங்கள் பாலியல் அடிப்படையில் பாகுபாடு போன்றவற்றை தடை செய்துள்ளன. ஆறு நிறுவனங்கள் இனம் அடிப்படையில் பாகுபாட்டைத் தடை செய்துள்ளன. கூகிள், பி.சி.ஜி நிறுவனம், ஸ்.ஏ.ஸ் (SAS) என்று உலகில் தலைசிறந்த நிறுவனங்கள் பாலின சிறுபான்மையின மக்களுக்கு பணிகள் வழங்கி அவர்களின் வாழ்வாதார நிலையை முன்னேற்ற உதவி மற்ற நிறுவங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
பாலின சிறுபான்மையினர் பலர் இந்தியாவில் இருந்தும், அவர்கள் தங்களின் பாலடையாளம் அல்லது பாலீர்ப்பு நிலையை மூடி மறைத்து பணி செய்யவேண்டியுள்ளது. அவர்களில் பலர் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கும், சமூகத்திற்கும் பயந்து பயந்து வேலை பார்கிறார்கள். இந்திய நிறுவனங்கள் பாலின சிறுபான்மையின மக்களை பணியில் அமர்த்தி தங்களின் வேறுபாடுகளை விரிவுப்படுத்த முன்வர வேண்டும். தங்களுடைய பாலடையாளம் அல்லது பாலீர்ப்பு நிலையை சுதந்திரமாக வெளிப்படுத்துவதன் மூலமாகவே, தங்களுடன் பணி செய்யும் சக ஊழியர்களுடன் திறந்தமனதுடன், ஊழியர்கள் பழக முடியும். அதன் விளைவாக உற்சாகத்துடன் உற்பத்திதிறன் மிக்கவராக பணியிடங்களில் செயல்ப்பட முடியும்.
தங்களின் பாலின அடையாளத்தை மறைத்து பணி செய்யும் ஊழியர்கள் அலுவலகத்தில் பாரபட்சமாக நடத்தபடுவதற்க்கும், பாலியல் துன்புறுத்தல், சுய மரியாதை இழப்பது, உற்சாகமின்மை, மன அழுத்தம், கவலை போன்றவைகளால் அதிகளவில் பாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாதிப்புகளால் அந்த ஊழியர்கள் வேலையில் விரக்தி, கவனமின்மை, கடமையில் இருந்து விலகல் போன்ற சிரமங்களுக்குள் சிக்க வாய்ப்பு உள்ளது. இந்திய நிறுவனங்களின் மேலாண்மை அதிகாரிகள் பாலின சிறுபான்மையின மக்களின் நிலையை கவனத்தில் கொண்டு, அவர்கள் திறம்பட வேலை செய்ய நல்ல சாதகமான சூழலை அமைத்துத்தர முன்வர வேண்டும். வளரும் நாடாக மாற உள்ள இந்தியா பாலின சிறுபான்மையின மக்களை கருத்தில் கொள்ளவில்லை என்றால் அதற்கு என்றும் வளர்ந்த நாடாக மாற வாய்ப்பு கிடைக்காது. பிற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை போல இந்தியாவில் உள்ள நிறுவனங்களும் பாலின சிறுபான்மையின மக்களை பணிகளில் அமர்த்த ஆர்வம் காட்ட வேண்டும். பணியிடங்களில் பாலின பாகுபாடுகள் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும்.
தங்களின் கருத்தில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை ஆயிஷா.
பதிவை படித்து தங்களின் கருத்தை வழங்கியதற்கு மிக்க நன்றி தோழி
உண்மை நிலையை தெளிவாக விளக்கயுள்ளிர்கள் அக்கா