Arthi Vendan – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Tue, 11 Nov 2014 16:14:31 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Arthi Vendan – ஓரினம் https://new2.orinam.net 32 32 சிதைக்கப்பட்ட வர்ணங்கள் https://new2.orinam.net/ta/sidaikapatta-varnangal/ https://new2.orinam.net/ta/sidaikapatta-varnangal/#respond Tue, 11 Nov 2014 15:49:30 +0000 https://new2.orinam.net/?p=10841 இந்திய அரசியலமைப்பு புத்தகத்தில் காமம் குறித்து எழுதப்பட்டிருக்கும் சட்ட வரையரைகளின் நகைப்பான விடயம், அவை 1860களுக்கு முன் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவை என்பதும், அதன் அடிப்படைகள் மக்களைக் கொடூரமாக வதைத்த மத நிறுவங்களின் சாரம்சங்களில் இருந்து பெறப்பெற்றவை என்பதும், அந்தச் சட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் அவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார்கள் என்பதும் ஆனால் நாம் அவற்றை இன்னும் நம் அரச கிரீடத்தில் வைத்துப் பாதுகாக்கிறோம் என்பதுமே.

2009 ஜுலை 2 நாள், பதினெட்டு வயதுக்கு மேல், சுய விருப்புடன், தனிமையில் நடந்தேறும் காமம் அரசியல் சட்ட வரம்புகளுக்குள் (unconstitutional) வராது எனும் மனித உரிமை முக்கியத்துவம் கொண்ட ஒரு தீர்ப்பினை அறிவித்தது டெல்லி உயர் நீதி மன்றம். அதாவது ஒப்புதலுடன் நடக்கும் காமம் எந்த வகையானதாகவும் இருக்கலாம் ஆனால் அது தனிமையில் சக மனிதர்களுக்கும் இடையூறில்லாச் செயலாக இருத்தல் வேண்டும். காமம் மனிதர்களின் அடிப்படை உரிமை, அதில் சட்டத் தலையீடுகள் என்பது முற்றிலுமான மனித உரிமை மீறல் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, இதை ஒத்த தீர்ப்பினையே டெல்லி உயர்நீதிமன்றமும் அறிவித்தது. இதன் படி சுய பால் உறவுகள், மற்ற அனைத்துப் பால் உறவுளையும் சரி என்று இந்திய சனநாயகம்ஒத்துக்கொண்டது என்றே நம்பப்பட்டது . ஆனால் 2013ஆம் ஆண்டு திசம்பர் 12 அன்று உலகின் இரண்டாவது பெரிய சனநாயகத்தினுடைய நீதியின் தலைமைபீடம் வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவான 377 குறித்துத் தான் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்றும் மேலும் 377 குறித்தான முடிவினை எடுக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தின் கையில் இருக்கிறது என்றும் முடிவு எடுக்கப்படும் வரை நூற்றாண்டுப் பழமையான சட்டமே செல்லும் என்ற மனிதவுரிமையற்ற ஒரு தீர்ப்பினைக் கொடுத்தது. இந்த தீர்ப்பின் படி பொதுத் தளத்தில் மேலோட்டமாகப் புரிந்துக்கொண்டது இது தான் – சட்டவரையரை 377லின் கீழ் ஓரினச்சேர்கை என்பது குற்றமாகும், ஆண் பெண் கூடல் மட்டுமே சட்டப்படி சரி மற்ற வகையான கூடல்களும் தவறு, அதாவது, இயற்கைக்கு மாறான புணர்தல் குற்றம். இயற்கைக்கு மாறான உடல் உறவு என்பதற்கான விதிமுறை என்ன என்பது குறித்து எந்த விளக்கங்களும் இல்லை. மத நிறுவனங்களின் கூற்றுப்படி பெண்னின் யோனியில் ஆணின் குறி இணைவது மட்டுமே காமம், மற்றவை எல்லாம் இயற்கைக்கு எதிரானது. ஏனெனில் காமம் என்பது மதங்களைப் பொருத்தமட்டில் பிள்ளைப்பேறுக்கான ஒரு செயல் அவ்வளவே.

சட்டபிரிவு 377 உண்மையில் என்ன சொல்கிறது என்ற தெளிவும் புரிதலும் நம்மிடை இல்லை. இயற்கைக்கு மாறான உடல் உறவு, அதாவது ஆண் உறுப்பைப் பெண் உறுப்பில் செலுத்தும் முறையைத் தவிர வேறு எந்த முறையும் குற்றம் என்று சொல்கிறது இந்தச் சட்டம். மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் வயது, ஒப்புதல் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இவர்கள் இயற்கை என்று சொல்லும் ஆண் பெண் கூடலையே இந்த சட்டத்தின்படி குற்றம் என்று சொல்ல முடியும், காரணம் மனிதன் யோனி, குறி கூடலை மட்டும் காமமாகக் கொள்வதில்லை. உண்மையில் சட்டப்பிரிவு 377 யை முழுவதுமாக தெளிவுபடுத்திக் கொண்டால் இது பால் சிறுபான்மைச் சமூகத்தின் பிரச்சனை மட்டுமல்ல, இது ஒரு அனைத்து மனிதர்களுக்குமான அடிப்படை மனித உரிமைப் பிரச்சனை என்ற புரிதல் வரும். ஆனால் எதார்தத்தில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது திருநங்கைகளும், சுயபால் உறவு கொள்பவர்களுமே.

சட்டபிரிவு 377# “377. Unnatural offences.—Whoever voluntarily has carnal intercourse against the order of nature with any man, woman or animal, shall be punished with imprisonment for life, or with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.”

“377. இயற்கைக்கு மாறான குற்றங்கள் – சுய விருப்புடன் இயற்கைக்கு மாறாக எந்த ஒரு பெண்ணுடனோ, ஆணுடனோ, விலங்குகளுடனோ உடல் உறவு கொள்வது குற்றம். குற்றத்தின் தண்டனையாக ஆயுட்காலச் சிறையோ அல்லது 10 வருடங்கள் வரையான சிறைத் தண்டனையுடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும்”

மேலோட்டமாகப் பார்த்தால் 377 குறித்து எந்த ஆபத்தும் இல்லை என்பது போல் தெரியும், காரணம், இயற்கைக்கு மாறான உறவு என்பது குறித்தான விளக்கம் நமக்கு நம் சட்டமும் அரசும் சொல்லவில்லை.‘இயற்கைக்கு மாறான’ என்பதே பல மாற்றுக் கருத்துகளுக்கு உள்ளானது. சாதி மறுப்புத் திருமணம் செய்வது இயற்கைக்கு மாறானது என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதோ அத்தனை அபத்தமானது இயற்கைக்கு மாறான காமம் என்பதும். ஆனால் இயற்கையின்படி காமம் என்பதற்கும், பாலினம் என்பதற்கும் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் பாலினம் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. சுய பால் உறவுகள் மனித சமுகத்தில் மட்டுமில்லாது அத்தனை உயிரினங்களிலும் இருக்கிறது. அமிபா எனும் ஒற்றைச் செல் உயிரினம் பால் தன்மையற்றது, தன்னை தானே புணர்ந்து தன் தலைமுறையை நீடித்துக்கொள்கிறது. நாய்களில் இருக்கும் ஓர் பால் உறவை வீதிகளில் மிக இலகுவாகப் பார்க்கலாம். மேலும் வரலாற்று ரீதியாகவும் பல தகவல்கள் சுயபால் உறவு குறித்து இருக்கின்றன, இதன் மிகச் சிறந்த உதாரணம் இந்தியக் கோவில்கள் எங்கும் நிரம்பியிருக்கும் ஓரினைச் சிற்பங்களே. 377வது சட்டத்தின் மிக முக்கியக் கூறாய் சொல்லப்படும் சுயபால் உறவு பெரும்பான்மைச் சமூகத்தில் புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதை போல் மேற்கின் சாயலோ, இயற்கைக்கு மாறான மனித உருவாக்கமோ அல்ல, அது இயற்கையானது என்பதை மேலே சொன்ன அறிவியல், வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு புரிந்துகொள்ளலாம்.

சட்டப்பிரிவு 377 யின் உண்மையான பலம் மனதில் தோற்றுவிக்கும் பயம் தான். சமீபத்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஓரினையாளர்களின் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. தங்களின் உண்மையான அடையாளத்தை சமூகத்திற்குத் தெரியப்படுத்துவதிலும் குடும்பத்தினர் ஆதரவு தருவதற்கும் இந்தச் சட்டம் பெரிய தடையாக இருக்கிறது. LGBT சமூகத்தினர் பயம் இல்லாமல் வாழ்வதற்கு நூறு ஆண்டுகள் பழமையான இந்தச் சட்டத்தைத் திருத்த வேண்டும். சட்டத்தைத் திருத்தினால் மட்டும் அவர்கள் பயமின்றி வாழ முடியுமா என்றால் அதுவும் நிச்சயம் இல்லை.ஆனால் சட்டரீதியாகச் செயல்படுத்தாமல் முழுமையான தீர்வைப் பெற முடியாது. நாம் போராட வேண்டியது இந்த சட்ட வன்முறைக்கு எதிராக மட்டுமல்ல இந்த வன்முறை ‘சரியானது’ என்று நினைக்கும் சிந்தனைகளுக்கு எதிராகவும் தான்.

“ சுயபால் உறவு ஒரு சமூகக் குற்றம் அதைத் தடுக்க அத்தனை உரிமைகளும் அரசிடம் இருக்கிறது, அது சமூகத்தில் அமைதியை உருவாக்கும். அதுவே இந்தக் கொடூரத்தைத் தடுக்காமல் விட்டால் எயிட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோய்கள் நம் சமூகத்தையே அழித்துவிடும்” 2008ஆம் ஆண்டு இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் பதிவு செய்துள்ள கருத்து, இது தான் நம் சமுகத்தின் புரிதலும் கூட. சட்ட ரீதியான மாற்றங்களைக் கொண்டு வரும் அதே வேளையில் சமூகப் பார்வையிலும் மாற்றம் வர வேண்டும். ஒரு வகையில் சமூகத்தின் சிந்தனைகளின் அடிப்படையில் தான் சட்டமும் செயல்படுகிறது என்பதும் நிதர்சனம். உண்மையில் எதிர்பாலீர்ப்பு உறவு தான் ‘இயற்கையானது’ என்றால் அதைப் பாதுகாக்க எதற்குச் சட்டங்கள் தேவைப்படுகிறது. நாம் சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் சட்டங்கள் தேவைப்படாத போது, இயற்கையான முறையில் உடல் உறவு வைத்துக்கொள்வதற்கு மட்டும் ஏன் சட்டம் நம் மேல் திணிக்கப்படுகிறது?

எதிர்பாலீர்ப்பு உறவு மட்டும்தான் இயற்கையானது என்று உரக்கச் சொல்வது ஒரு ஆணாதிக்கக் கூற்று. ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துவதற்குக் கட்டாயமான எதிர்பாலீர்ப்பு உறவு தேவைப்படுகிறது. இன்றைக்கும் சாதி, மதம், குடும்பம், சொத்து போன்ற எல்லாவற்றுக்கும் பெண்களின் உடலின் மீது கட்டுபாட்டைத் திணிப்பது மூலமே ஆணாதிக்கம் மீண்டும் மீண்டும் நிலை நிறுத்தப்படுகிறது. திருமணம் என்ற பெயரில் நடக்கும் பாலியல் வன்முறை, திருமணத்திற்கு பிறகு பெண்கள் ஆணின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக் கொள்ளுதல், ஆணுக்கு நிகராகச் சொத்தில் பங்கு இல்லாதது போன்ற ஆணாதிக்கக் கூறுகள் எதுவும் உடையாமல் இருப்பதற்கு எதிர்பாலீர்ப்பு உறவு தேவைப்படுகிறது. உடலுறவு, பிள்ளைகளைப் பெற்று எடுப்பதற்கு என்று சொல்லி ஓரினச்சேர்க்கையை எதிர்க்கும் பலர் ஆணுறைகளை பற்றிக் கேள்வி ஏழுப்புவதிலை. 377லின் படி இயற்கைக்கு மாறான எதுவும் குற்றம், ஆணுறை பயன்படுத்துவது கூட.

சுய பால் உறவு விடயத்தில் மருத்தவமும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு ஓரின சேர்கையைக் ‘குணப்படுத்துவதற்கு’ பல மருத்துவர்கள் இயங்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் சுயம் ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக அவர்கள் சுயமே அவர்களுக்கு எதிராக மாற்றபட்டது. ஓரின சேர்கையாளர்களுக்கு ஷாக் ட்ரிட்மெண்ட் தரப்பட்டது. LGBT இயக்கங்களின் எதிர்ப்புக் குரல்களும், போராட்டங்களும் இந்த அபத்தத்தை நிறுத்தியது. மருத்துவம் மதமும் சட்டமும் என்ன சொல்கிறதோ அதைச் சார்ந்தே இயங்குகிறது.

ஓரின சேர்கையாளர்களின் குடும்ப முறை உடைந்து போவதைக் காரணமாகச் சுட்டிக் காட்டுபவர்கள் அவர்களுக்குப் பின்பு இருக்கும் சமூக அழுத்தங்களையும், விளைவுகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். எதிர்பாலீர்ப்பு குடும்பங்கள் எதுவும் உடைந்து போவதில்லையா? பொருளாதாரம் காரணமாக உடைந்து போகும் குடும்பங்கள் ஏராளம், இந்தியாவில் விவாகரத்தின் சதவிகிதம் எவ்வளவு என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும். சட்டம், மதம், சமூகம் என்று அத்தனை திசைகளும் பால் சிறுபான்மையினருக்கு எதிராகவே இயங்குகிறது.

பாலினத்தை, பாலின விருப்பங்களைக் காரணம்காட்டித் தங்க இடம், கல்வி, வேலை வாய்ப்பு மறுக்கப்படும் சூழல் மாறும் வரை சட்டம், மருத்துவம், மதம் என்று எல்லாத் தளங்களிளும் குரலைப் பதிவு செய்வது அவசியமாகிறது. ஒரு துளியினும் மனிதம் இல்லாத 377 சட்டம் முற்றிலும் களையப்பட வேண்டும். காரணம் இந்தச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானது.மேலும் பால் என்பதே இயற்கைக்கு எதிரான மனிதனின் படைப்பு என்று இருக்கும்போது மனிதன் உருவாக்கிய அதற்கான சட்டம் மட்டும் எப்படிச் சரியானதாக இருக்கும்? இந்தப் பிரதியை முடிக்கும் இந்தத் தருணத்தில் இதைச் சொல்லிதான் முடிக்க வேண்டியிருக்கிறது – சுயவிருப்புடன் தேர்வு செய்யும் பால் முறைமைகள் குறித்து இத்தனை சட்டங்களைப் பேசும் அரசுகளும், மதங்களும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த எந்த நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்திய சட்ட நிறுவனங்களின் வாசல்களில் தினமும் ஒரு பாரத மாதா வன்புணர்வு செய்யப்பட்டுவதையும், அரசு நிறுவனங்களாலும் சமூகத்தாலும் ஒரு பால் சிறுபான்மையின மனிதன் தாக்கப்படுவதையும் கறுப்புத் துணி கட்டிய கண்களுடன் நீதி தேவதை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள்.

இந்தக் கட்டுரை முதலில் எனில்.காம்-ல் பிரசுரிக்கப்பட்டது

]]>
https://new2.orinam.net/ta/sidaikapatta-varnangal/feed/ 0