Shankar G – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sun, 29 Mar 2015 06:03:59 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Shankar G – ஓரினம் https://new2.orinam.net 32 32 என் பயணங்கள் https://new2.orinam.net/ta/en_payanangal/ https://new2.orinam.net/ta/en_payanangal/#comments Wed, 22 Oct 2014 06:33:18 +0000 https://new2.orinam.net/?p=10798 இடம்: புரசைவாக்கம் கெல்லீஸ் பஸ் நிறுத்தம். எனது பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். பயிலரங்கு ஒன்றுக்கு போவதற்காக பஸ்ஸுக்கு காத்திருந்தேன். எனக்கு மிக அருகே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது.  சற்றே அதிர்ந்து விலகத் துவங்கிய என்னை கை காட்டி அழைத்தார் அந்த ஸ்கூட்டரில் வந்தவர். டி ஷர்ட், கூலிங் கிளாஸ் போட்டிருந்தார். அவரது வெள்ளை லுங்கியில் சாம்பல் நிறத்தில் பெரிய கட்டம் போட்டிருந்ததுகூட இன்னிக்கும் நன்றாக நினைவிருக்கிறது.

“வா, வண்டியில ஏறிக்கோ.   அண்ணா நகருக்குத்தான போற? டிராப் பண்றேன்” என்றார்.  எனக்கு அப்போது இப்படி ஒரு அனுபவம் புதிது! வாகனப் பயணம் என்றால்  கொள்ளை ஆசை. ஆனால் இவர் ஏன் என்னை அழைத்துக்கொண்டு போக முன்வர வேண்டும் எனப் புரியாமல் விழித்தேன். என் தயக்கத்தைப் பார்த்த அவர், “என்னைத் தெரியலையா? நானும் நீ இருக்கிற அதே காலனிதான். உன்னை அடிக்கடி பாத்துருக்கேன்.  நானும் அந்தப் பக்கம்தான் போறேன், சும்மா வாடா” என்றார். பஸ் இன்னும் வந்தபாடில்லை, பேசாமல் ஸ்கூட்டரில் ஏறி ஜிங்கென்று (வாகனப் பயணத்தை அப்போது அப்படித்தான் சொல்வார்கள்) இறங்கினால் எப்படி இருக்கும்?

15 வயதுக்குமேல் ஆகியிருந்ததால், ஏதோ ஒரு தைரியம். என்னைக் கடத்திப் போகவா போகிறார்? என்ற எண்ணத்தில் ஏறினேன்.

“என் தோளப் புடிச்சுக்க!” வற்புறுத்திச் சொன்னார். அவ்வாரே ஒரு கையால் பிடித்தவாறு உட்கார்ந்தேன். இன்னொரு கையை அவரே இழுத்துப் பிடித்து தன் வயிற்றில் வைத்துக்கொண்டு, “நல்லா இறுக்கி பிடி” என்றார்.  “வேண்டாங்க நான் எங்க அண்ணங்க கூட பைக்கில போயியிருக்கேன்.  நா ஒண்ணும் விழுந்திட மாட்டேன்” – இது நான்.

ஸ்கூட்டர் வேறு மிகவும் மெதுவாக போய்க்கொண்டிருந்தது. “என்னைப் பிடிச்சுக்க அச்சமா இருக்கா?” என்றார். “அச்சமா?” அந்த வார்த்தையை பேச்சு வழக்கில் பயன்படுத்தி அப்போதுதான் கேட்டேன். “ஓ பயமா?”  யோசனையில் இருந்த என்னிடமிருந்து வலது கையை அவர் கை இழுத்துத் தன் தொடையில் வைத்துப் “பிடியை விட்ராத” என்றார். கொஞ்ச நேரம் அவர் சொன்னதுக்காக, கையை எடுக்காமல் வைத்திருந்தேன். “எங்க வீட்டு அட்ரஸ் தர்றேன். லீவு நாள்ல வாயேன். நாம ஜாலியா மகாபலிபுரம் போலாமா?” என்றார்.  எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாததால், முழித்தேன். என் மவுனம் அவருக்கு எரிச்சலைத் தூண்டியிருக்கவேண்டும், “என்ன எதுவுமே சொல்ல மாட்டேங்கிற. ஏன் கையை எடுத்திட்ட? அச்சப்படாத! சரியா?” என்றவாறு என் கையைத் தன் பிறப்புறுப்புப் பக்கம் மீண்டும் இழுத்துச் சென்றபோதுதான் எனக்கு பயம் ஏற்பட்டது. “இல்ல.. வேண்டாம். எதுக்கு…?” வார்த்தைகள் ஒவ்வொன்றாய் என்னிடமிருந்து வெளி வந்து விழுகிறது. கையை இழுத்துக்கொண்டு அமைதியாகி விடுகிறேன். யோசிக்கத் தொடங்குகிறேன். பேசாமல் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கி விடலாமா? யோசித்துக்கொண்டு இருக்கும்போதே ஸ்கூட்டரை டெயிலர்ஸ் ரோடில் திரும்பிவிடுகிறார். அதன் மறுமுனை வரை பஸ் வராது. என்ன செய்வது? அவஸ்தையாய் உணர்கிறேன்.

“ஏன் கையை இழுத்துக்கிற? என்ன பிடிக்கலையா?” முதல் முறையாக அதட்டுகிறார்.  பின் என்ன தோன்றியதோ. வண்டியை நிறுத்தி, “நான் வேறு பக்கம் போகவேண்டியிருக்கு, இறங்கு” என இறக்கிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் போய்விடுகிறார்.  இது தேராது என்ற முடிவுக்கு வந்திருப்பார் போல. என்னைத் தெரியும் என்று சொன்னதெல்லாம் பொய்யோ? என தோன்றியது. நல்ல வேளை. இத்தோடு விட்டாரே என்ற நிம்மதி “சே. அடுத்த பஸ் ஸ்டாப்பிலயாவது விட்டிருக்கலாம்” என்றுகூட எனக்கு ஒரு நினைப்பு வந்தது வினோதம்தான்! நடையைக் கட்டினேன்.

அத்தகைய அனுபவங்கள் தொடரப்போவதை நான் அன்று உணர்ந்திருக்கவில்லை.  நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு. நான் என்.ஐ.ஐ.டியில் (NIIT) ஒரு டிப்ளோமா செய்துகொண்டிருந்த சமையம்.  நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் முன் இருந்த பஸ் நிறுத்தம் நோக்கி போய்க்கொண்டிருந்தேன். சைக்கிளில் வெண்தாடியுடன் ஒருவர் உட்கார்ந்தபடி என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். பதிலுக்குப் புன்னகைத்தபடி நடந்த என்னைக் கடந்து சென்று நின்றது அந்த சைக்கிள். மீண்டும் அதே பெரியவர். அதே புன்னகை.  தொடர்ந்து நடந்தேன். மூன்றாம் முறை சைக்கிள் என்னைக் கடந்து நின்றபோது, என்ன? என்றேன். “எனக்கு எல்லாம் தெரியும். வா! காரியர்ல உக்காரு” என்றார்.  தலையசைத்து மறுத்து வேகத்துடன் நடக்கத் துவங்கினேன். இம்முறை முந்தைய ஸ்கூட்டர் அனுபவம் சட்டென்று நினைவுக்கு வந்து தொலைத்தது. ஓட்டமெடுத்தேன். ஏதோ ஒரு பஸ் ஸ்டாண்டை நோக்கி போய்க்கொண்டிருக்க, எந்த ரூட் என்றுகூட பார்க்காமல் ஓடி அதில் ஏறி உட்கார்ந்துவிட்டேன். நெஞ்சில் படபடப்பாய் இருந்தது. அடுத்த பல நாட்கள் அந்த சாலையில் வெவ்வேறு ரூட்களில் நடக்க ஆரம்பித்தேன். எங்காவது அந்த கிழவர் வந்துவிடப் போகிறாரே என்று பயப்படுவேன்.

அப்புறம் வந்த வருடங்களில் இத்தகைய அனுபவங்களில்தான் எத்தனை வெரைட்டி?

பாரீஸ் முனையில் புத்தகங்கள் விற்கும் தெரு எது என்று சரியாக தெரியாமல், உயர் நீதிமன்றக் கட்டிடத்தின் பக்கம் உலாத்திக் கொண்டிருந்தேன்.  இந்த முறை வாகனம் ஆட்டோ. ஆட்டோக்காரர், “பீச்சுக்குத்தான? வா, கொண்டு விடறேன்” என்றார்.  அது பகல் வேளை ஆகையால் இப்போதுபோய் யார் பீச்சுக்குப் போவார்கள் என்ற எண்ணம்தான் வந்தது. “இல்லங்க நான் வரல” என்றேன். “காசு நீ கொடுக்க வேண்டாம். சும்மா டிராப் பண்றேன்” . எனக்கு ஆச்சரியம்! இது நடந்தபோது கல்லூரி ஆசிரியர் வேலையில் இருந்தேன். அடிக்கடி ஆட்டோ பயண அனுபவம் இருந்தது. எனக்குத் தெரிந்த தருமமிகு சென்னையில், காசு வாங்காமல் சவாரி ஏற்றும் ஆட்டோக்காரரை நான் உள்ளபடியே பார்த்ததில்லை.  ஆர்வம் தாங்காமல் கேட்டுவிட்டேன். “நீங்க ஏன் காசு வாங்காம என்னை பீச்சுக்குக் கொண்டுபோய்விடணும்? அதுவும் இந்த நேரத்தில் நான் கேட்காமலேயே?”

வந்த பதில் என்னை உச்ச கட்ட அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. “நீ கொடுக்க வேணாம், பீச்சுல ‘பார்ட்டிங்க’ பணம் கொடுப்பாங்க நம்ம ரெண்டு பேத்துக்கும்” என்றார் அந்த ஆட்டோக்காரர்.   அப்படியென்றால்,  அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து கொண்டிருந்த என்னை, வாடிக்கையாளரை எதிர் நோக்கும் ஒரு பாலியல் தொழிலாளியாகவே நினைத்து விட்டிருக்கிறார் அவர் என புரிந்தது.  ஒரு நிமிடத்தில் எனக்குள் அதுவரை இருந்த ‘பேராசிரியர்’ என்கிற சுய பிம்பம் (இமேஜ்) சுக்கல் நூறாக நொறுங்கிவிட்டது. “வேண்டாங்க” ஒற்றை வார்த்தையுடன் இடத்தைவிட்டு அகன்றேன் உடனே.

பிறகு, ஆட்டோக்கள் சிலவற்றின் ஓட்டுனர்கள் போக்கு எனக்கு அத்துப்படி ஆனது. ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக பாலியல் அழைப்புக்கள் விடுக்கிறார்கள். சிலர் வண்டியை நிறுத்தி, சிறு நீர் கழிக்கப் போய்வருவார்கள். வந்ததும், தமக்கு ‘அந்தப் பிரதேசத்தில்’ ஏற்படும் தவிப்புக்கள் பற்றிப் பேசத் தொடங்குவார்கள். வீட்டில் மனைவியுடன் தனக்கு திருப்தி இல்லை என ரகசியக் குரலில் தன் அந்தரங்கக் கதைகளை முன்பின் தெரியாத என்னிடம் விவரிக்கும்போது, எனக்குள் ஆயாசம் தலைதூக்கும்.  ஏன் என்றால், இவர்கள் அப்படி இப்படி என்று எங்கு வருகிறார்கள் என்பதுதான் எனக்கு நன்றாய் தெரியுமே!  லைப்ரரிகள் போகும்போதும், நட்சத்திர ஹோட்டல்கள் போகும்போதும், “நீங்க இப்படித்தானா எப்பவும். ஜாலியா..? வேலக்குப் போறதில்லயா?” என்று கேட்டவர்கள் உண்டு. பலரிடமிருந்து, ” உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா” என்ற கேள்வி வரும். நான் உஷாராகிவிடுவேன். ஏன் கேட்டீங்க? என்பேன்.  “இல்ல… உன்ன பாத்தா கேக்கணும்னு தோணுச்சு” என்பார்கள். சிலர் எனக்கு டீ வாங்கித்தர முன்வருவார்கள். நான் மறுப்பேன்.  இறங்கும்போது, “அவ்வளவுதானா? வேற ஒண்ணும் இல்லியா? எப்ப பாக்கலாம்?. வீட்டுக்குக் கூப்பிட மாட்டியா? என் ரூமுக்கு வந்திட்டுப் போறியா?, இந்த ரூட்டுலதான் தெனம் வருவியா? தெனமும் என்ன சாப்புடுவ? உன்னத் தொட்டுப் பாக்கணும்போல தோணுது? நீங்க டான்சரா? விசுவரூபம் படத்துல கமல் ஆடுற டான்ஸ் பாத்திருக்கீங்களா?” இப்படி கிரக்கத்துடன் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஒரே அடி நாதம் தான் இருக்கும் – காமம்!.

இப்போதெல்லாம், சாலையில் நடக்கும்போது ஏதாவது ஒரு கார் என் அருகே வேகம் குறைத்து நகர்ந்தாலோ, நின்றாலோ, சினிமாவில் வரும் கிண்டல் பாட்டுப் பாடினாலோ,  யாராவது வழிப்போக்கர்கள் டைம் கேட்டாலோ, சம்மந்தமில்லாமல் அரசியல் பேசினாலொ, எனக்கு உள்ளூர பரபரப்பு தொற்றிக்கொள்ளும். முதல் முறை ஸ்கூட்டர்காரரிடம் ஏற்படாத ‘அச்சம்’ இப்போது ஆட்டோ ஸ்டார்ட் ஆகிவிடும்.

இதையெல்லாம் எப்படிச் சமாளிக்கிறேன்? என்று கேட்டால் அது ஒரு சுவாரசியமான தனிக் கதை. மதர் தெரசாவிலிருந்து மலாலா வரை பலரது மலர்ந்த முகங்களை நினைவு கூரவேண்டியது. அவர்களைப் போல கனிவான பார்வை, தூய புன்னகை, மருந்து தரும் நர்ஸ் போன்ற தண்மையான குரல் ஆகியவற்றை வரவழைத்துக் கொள்வது மிகவும் அவசியம்!.  போதாக்குறைக்கு வாயிலிருந்து உதிர்ப்பதற்காகவே சில தத்துவ முத்துக்களையும் தயாராக துணைக்கு வைத்துக்கொள்கிறேன். மாதிரிக்கு ஒன்றிரண்டு: “உடம்பு சுகம் எல்லாம் நிலையா? இன்னிக்கு இருக்கறவுங்க நாளைக்கு இருப்போமா?” -இப்படியெல்லாம் மெய் ஞானம் மணக்க மணக்க பேசினால் அவர்கள் ‘இவன் வேலைக்கு ஆக மாட்டான்’ அப்படீன்னு தானாக அமைதியாகி விடுகிறார்கள்.   அப்புறம் என்ன? பேச்சால் அவரைத் திசை திருப்பி, போய்ச்சேரும் இடம் வந்ததும், வண்டியை விட்டிறங்கித் திரும்பிப் பார்க்காமல் நடைபோடவேண்டியதுதான்.

“ஸ்கூல்ல நாம் ஒண்ணா படிச்சோமே – மறந்துட்டீங்களா?” என்றபடி வீட்டுக்கு அழைத்தார் அக்கம்பக்கத்தில் வசிப்பவர். போனால், “வைஃப் ஊருக்குப் போயிருச்சு. அதனாலதான் உங்களைக் கூப்புட்டேன். பேசிக்கலாம்னு” என்றார். அப்படின்னா, மனைவி இருந்தா பேசியிருக்க முடியாதா? என் எண்ணம் ஓடியது. வீடு இருளாக இருந்தது. உக்காரச் சொல்லிவிட்டு, “அப்புறம்?” என்றார். இப்போதான் எனக்கு உள்ளுணர்வு அதிகமாச்சே!  உடனே கேட்டேன், “என்ன வேணும் உங்களுக்கு?” என.  பட்டென்று பதில் தந்தார், “செக்ஸ்தான்”.

“முதலில் ரொம்ப சாரி. என்னால் உங்க விருப்பத்தை நிறைவேற்ற முடியாது. எனக்குப் பழக்கமில்லை. அதுசரி, எப்படி என்னை இதுக்காக வரவழைச்சீங்க?” என்றேன்.

“உங்களைப் பார்த்தால் ஆசையா இருந்தது. உங்களுக்கும் விருப்பம் இருக்கும் என்று நினைச்சேன். என் மனைவிக்கு என் வேகத்துக்கும் தேவைக்கும் ஈடு கொடுக்க முடியல. அதான்..” பேச்சை நிறுத்தினார்.  அழுதுவிடுவார் போல இருந்தது. பேச்சை மாற்றினேன். “என்ன வேலை செய்யறீங்க?” என்றேன். சினிமா துறையாம். வட இந்தியாவில் ஏதோ ஒரு ஊர்க்காரராம்.  இந்த ஊரில் மதம் கடந்து காதல் திருமணம் செய்தவர். இரண்டு பெண் குழந்தைகள்! ஸ்கூல் படிக்கிறார்கள். படப்பிடிப்பின் இடையே ஒரு முறை திருநங்கை ஒருவரிடம் பாலுறவு வைத்திருக்கிறார். அதை மேலும் தொடர வேறு ஆளைத் தேடிவ்ருகிறார்.

நான் கேட்டேன். “உங்கள் மனைவி இல்லாததால் அழைத்தேன் என்கிறீர்கள். நாளைக்கு யாருக்காவது உங்கள் நடவடிக்கைகள் தெரிந்தால்?

“ஐயய்யோ. என் லைஃப் அம்பேல்தான்” என்றார்.

சரி. உங்கள் வீட்டைப் பார்த்தால் நீங்கள் மத நம்பிக்கை அதிகம் உள்ளவர்போலிருக்கு. நீங்கள் கோரும் இன்பமும் உங்கள் நம்பிக்கையும், மனைவி மீதான பாசமும் முரண் ஆகிவிடாதா? என்றேன்.

“அது வேற. இது வேற. என்ன செய்யுறது சொல்லுங்க? சிலதை சில சமயம் விட்டுக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கு” என்றார். இது அவர் பக்கத்தின் நியாயம்.

எனக்கு நானே வக்கீலாகிப் பேசினேன். “நான் வாழ்க்கை முழுவதும் சிக்கலில்லாமல் பாலியல் துறவில் கழித்துவிட்டேன். ஒரு வாதத்துக்காக உங்கள் விருப்பத்துக்காக இப்போது இணங்குறேன்னு வெச்சுக்குங்க.  ஒருவேளை எனக்கும் இந்த உறவு பிடிச்சுப் போகுதுன்னு வெச்சிக்குவோம். அப்புறம் நாளைக்கு எனக்கு உடல் தேவை ஏற்பட்டுச்சுன்னா? நேரே உங்க வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அழுத்தி உங்களை அணுக முடியுங்களா?” என்றேன். அரண்டுபோனமாதிரி அமைதியானார்.

சற்று நேரம் கழித்து, ” நான் அதையெல்லாம் யோசிக்கவே இல்ல. மன்னிச்சுக்குங்க” என்றார்.

புதுமையான இந்த உரையாடலுக்கு வழிவகுத்ததுக்காக ஒரு டீ வாங்கித் தந்தேன். நண்பராக ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டோம்.  நடைப்பயணம் முடிந்து வீடு திரும்பியதும், கேட்டேன், “இன்னிக்கு என்னை வரவழைச்சப்ப, நம்ம சந்திப்பு இப்படி நட்பாக முடியும் என நினைச்சீங்களா?”

“இல்லவே இல்ல. ஆனா இதுவும் சந்தோஷமாதான் இருக்கு” என்றார்.  என்னிடமிருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.

]]>
https://new2.orinam.net/ta/en_payanangal/feed/ 1