ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை

Excerpts from Barkha Dutt’s TV Show : Being Gay : The Parents’ Story. Watch the full video in English on NDTV’s website here .
Our sincere thanks to NDTV and Bharka Dutt for presenting this amazing show.
சித்ரா பாலேகர் : என் பொண்ணு என்கிட்ட தான் ஒரு லெஸ்பியன்னு வெளியே வந்தது 1993 ஆம் ஆண்டு. அவ அப்போதான் காலேஜ் முடிச்சிருந்தா. எனக்கு அவ சொன்னதை கேட்டப்போ, ஆச்சரியமா இருந்தது. பின்னாடி அவளே எனக்கு சொன்ன மாதிரி, அவ எல்லாரையும் போல எதிர்பாலீர்ப்புள்ளவளா தான் இருப்பான்னு எனக்கு நானே முடிவு பண்ணிகிட்டேன். இந்த மாதிரி ஒரு சாத்தியம் இருக்கும்னு கூட நினைக்கலை. மத்தபடி அவ சொன்னப்போ, நான் ஒன்னும் பெரிசா அதிர்ச்சியெல்லாம் அடையலை. அவள என் முழுமனசோட ஏத்துகிட்டேன்.

என்னோட ஆச்சரியத்துக்கு காரணம், எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அதைபத்தி சினிமால, வெளிநாட்டுக்கு போனப்போ, இது மாதிரி நேரத்துல கேட்டிருக்கேன், அவ்ளோதான். மத்தபடி என் வாழ்க்கைல, எனக்கு தெரிஞ்சவங்கள்ல, இது மாதிரி யாரும் இருக்கலை. நான் அவகிட்ட கேட்ட முதல் கேள்வி, “ஏன் இத்தனை நாளா என்கிட்ட இதை நீ சொல்லல? உனக்கு எப்போ இது தெரிஞ்சது”னு தான். அவளுக்கு ஒரு பதிமுணு, பதினாலு வயசுல தான் ஒரு லெஸ்பியன்னுதெரிஞ்சிருக்கு. ஸ்கூல்ல பொண்ணுங்க பசங்கள பத்தி, பசங்க பொண்ணுங்கள பத்தி பேசும்போது, இவளுக்கு அந்த மாதிரி ஒன்னும் பேசவோ, கேக்கவோ விருப்பம் இல்லை. ரொம்ப குழம்பியிருக்கா. அவள சுத்தி எல்லாரும், எல்லாமும் ஆண்-பெண் சமந்தப்பட்ட விஷயங்களா இருந்ததால, அவளோட இந்த ஒருபாலீர்ப்பை நினைச்சு அவ குழம்பியிருக்கா, எல்லாரையும் விட்டு ஒதுக்கப்பட்டவளா பீல் பண்ணியிருக்கா. எங்க குடும்பத்துல நாங்க எல்லாத்தையும் மனம்விட்டு பேசுவோம் , அரசியலோ, சமுதாயமோ எதை பத்தி வேணும்னா பேசுவோம். ஆனா அவ சொன்னா, “அம்மா, நாம எல்லாத்தையும் பத்தி பேசினோம். ஆனா செக்ஸ் பத்தியோ, பாலீர்ப்பு பத்தியோ பேசினதில்லை. அதுனால எனக்கு தயக்கமா இருந்தது, இதை பத்தி பேச பயமா இருந்தது”னு.
அவ ஒரு நல்ல பொண்ணு. எல்லாத்துலயும் முதல்ல வருவா. அவ என் பொண்ணுங்கறதுல எனக்கு ரொம்பவே பெருமை, பெருமிதம். அவ என்கிட்ட லெஸ்பியன்னு வெளிய வந்தப்போ நான் யோசிச்சேன் “இதுனால நம்ம பொண்ணு மேல நமக்கு இருக்கற பாசமும் , அவளால நாம அடைஞ்ச பெருமையும் குறைஞ்சு போகுமா? இல்ல மாறிடுமா?”னு. இல்லையே! உடனடியா என் மனசு திடமாச்சு, நம்ம பொண்ணு இவ. எப்படி இருந்தா என்ன, அப்படின்னு ஒரு தெளிவு.
இது கொஞ்சம் பர்சலனா விஷயம்ங்கறதுனால, சொந்தம் பந்தம், அக்கம் பக்கத்துல, யார்கிட்ட என்ன சொல்லனும்னு, இதெல்லாம் அவ முடிவிக்கே நான் விட்டுட்டேன். அவளும், அவளோட பார்ட்னரும் என்கூட, எங்க வீட்டுலதான் இரண்டு வருஷம் இருந்தாங்க. எங்க நெருங்கின சொந்தக்காரங்க, பிரெண்ட்ஸ் எல்லாம் என் பொண்ணையும், அவளோட பார்ட்னரையும் (பெண்) முழு மனசோட ஏத்துக்கிட்டாங்க.
பிந்துமாதவ் : எனக்கு ஒரு பன்னண்டு பதிமுணு வயசிருக்கும்போது நான் ஒரு “கே”னு எனக்கு தெரியவந்தது. என்னோட வெளிய வந்த கதை ரொம்பவே கஷ்டமான, வேதனையான கதை. என் காலத்துல இப்போ இருக்கற மாதிரி டி.வீ சானல்ஸ், இன்டர்நெட் இதெல்லாம் கிடையாது. நான் காலேஜ் போய், மருத்துவம் சம்மந்தமான புத்தகங்கள படிக்கற வரைக்கும் எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. அந்த வாரத்தையை கூட நான் கேட்டதில்லை. எனக்கு பசங்கமேல ஈர்ப்புனு தெரியும். ஆனா அதுக்கு ஒரு பேரு இருக்கு, என்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்க இதெல்லாம் அப்போ தெரியலை. என்கூட ஸ்கூல்ல படிக்கற பசங்க எல்லாம் பொண்ணுங்கள பத்தி பேசும்போது, எனக்கு அதுல எல்லாம் பெருசா நாட்டம் இல்லை. என்னோட ஒருபாலீர்ப்பை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாததுனால, என்னை நானே ரொம்ப கீழ்த்தரமா நினைச்சேன். நான் ஒரு தரம் கேட்டவன், பாவி, கேவலமானவன் அப்படி எல்லாம் என்னை நானே நினைச்சு வெறுத்திருக்கேன். அதனால என்னோட சுயமரியாதை சுத்தமா அழிஞ்சு போச்சு. இரண்டு மூணு தரவை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணினேன். என்னோட இந்த பாலீர்ப்பை பத்தி என் அம்மாக்கோ, அப்பாக்கோ தெரிஞ்சு போச்சுன்னா, எங்க குடும்ப மானமே போய்டும் அப்படி எல்லாம் நினைச்சு பயந்து நடுங்குவேன். இந்த கவலைகளால படிப்புல நாட்டம் குறைஞ்சது. இன்ஜினியரிங் மூணாவது வருஷத்துல ஒரு பேப்பர் தவிர, மீதி எல்லாத்துலயும் பெயில் ஆனேன். வேலைக்கு போனபிறகு எங்க வீட்டுல கல்யாணத்துக்காக ரொம்பவே நிர்பந்தம். வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன். கல்யாணம் தோல்வியில முடிஞ்சது. ஒரே வருஷத்துல விவாகரத்து. ரொம்பவே விவகாரமான விவாகரத்து. எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே மனகஷ்டம். அப்போ கூட எங்க அப்பா அம்மாகிட்ட நான் ஒரு “கே”, எனக்கு பசங்க மேல ஈர்ப்பு, இதெல்லாம் பேசமுடியலை. அப்புறம் நான் வேலை மாறி அமெரிக்கா போன பிறகு, அங்க இருக்கற என்னை போன்றவர்களுக்கான ஆதரவு நிறுவனமான “த்ரிகொன்” மூலமா என்னை மாதிரி இருக்கற பிற இந்தியர்கள சந்திச்ச அப்பறம்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்கையை பத்தி புரிய ஆரம்பிச்சது.என்னை நானே புரிஞ்சு, ஏத்துகிட்டேன். முதல்ல அமெரிக்காலேயே செட்டில் ஆய்டலாம்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சப்போ, இந்த மாதிரி பயந்து, குடும்பத்தை விட்டும், நாட்டை விட்டும் ஏன் தள்ளி இருக்கணும்னு தோணிச்சு. அதனால தைரியமா இந்தியாவுக்கு திரும்பினேன்.

பிந்துமாதவின் அம்மா : மாதவ் வெளியே வந்தப்போ, அவன் ஒரு “கே”, அவனுக்கு பசங்க மேல தான் ஈர்ப்புனு சொன்னப்போ, எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. நான் உடனடியா அவன ஒரு சாமியார்கிட்ட கூட்டிகிட்டு போய் பரிகாரம் கேட்டேன். ஒண்னும் பலனில்லை. அப்புறம் ஒரு மருத்துவர போய் பாத்தோம். அவர் தெளிவா எனக்கு சொன்னாரு, ஒருபாலீர்ப்புனா என்ன, அதுக்கு என்ன அர்த்தம், அதை மாத்த முடியாதுனு எல்லாம் விவரமா சொன்னாரு. உன் பையன் மாறவேண்டியதில்லம்மா, நீதான் உன் மனச மாத்திகிட்டு அவன புரிஞ்சிக்கனும்னு சொன்னாரு. நான் கொஞ்சம், கொஞ்சமா மனசு மாறினேன். ஒருபாலீர்ப்பு பத்தின படங்களை பாத்தேன் (“மை ப்ரதர் நிகில்”,”பிலடெல்பியா”). இவனை மாதிரி நிறைய பேரு இருக்காங்கனு புரிஞ்சது.
எனக்கு மாதவ தவிர ஒரு பொண்ணும் இருக்கா. அவ கல்யாணம் முடியற வரைக்கும் யார்கிட்டயும் இதை பத்தி சொல்ல வேண்டாம், கொஞ்சம் அமைதியா இருன்னு நான் மாதவ்கிட்ட கேட்டுகிட்டேன். அதுக்கப்புரம், மாதவே எங்க குடும்பத்துல மத்த எல்லார்கிட்டயும் இத பத்தி சொன்னான். இன்னிக்கும் என்னால தைரியமா என் சொந்தகாரங்க கிட்ட இதை பத்தி பேசமுடியலைங்கறது தான் உண்மை.
பஞ்சாபி பாட்டி : இதபாருங்க, என் பேரன் “கே” தான். அவன் அப்படிதான், அவன் வாழ்க்கை அப்படிதான். இதை எதிர்கரவங்க, முதல்ல

என்கிட்ட மோதட்டும், அப்புறம் என் பேரன்கிட்ட மோதலாம். அவங்க அவங்க வாழ்க்கைல ஆயிரம் ஓட்டை இருக்கு, அதை கவனிக்காம , அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி என்ன பேச்சு? அந்தகாலத்துலையே சுயம்வரம்ங்கர பேருல எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அதிகாரம் குடுத்தாங்க. ஆதி காலத்துலேயே அது சாத்தியம்னா, இப்போ ஏன் கூடாது? சட்டம் எழுதறவங்களுக்கு என்ன தெரியும், ஒரு அம்மா, ஒரு பாட்டிக்கு என்ன உணர்ச்சி இருக்குனு? எனக்கு என் பேரன் முக்கியம். என் பேரன் அவன் இஷ்டப்படி அவன் வாழ்க்கையை வாழனும். யாரு அதுக்கு தடை போடுவாங்க, பாப்போம். அட, இதோ ஜப்பான்ல பூகம்பத்துல ஊரே அடிச்சிகிட்டு போச்சு, ஒரு நொடில வாழ்கையே மாறி போச்சு. அங்க போன உசிருல “கே” பசங்க, மத்தவங்கன்னு எதுவும் வித்தியாசம் இருக்கா? இருக்கற வரைக்கும், மனுஷங்களா அவங்க இஷ்ட்டப்படி வாழ விடுங்க! உலகத்துல எல்லாருக்கும் அவங்க இஷடப்படி வாழ உரிமை இருக்கறப்போ, என் பேரனுக்கோ, அவனை மாதிரி இருக்கற மத்த பசங்களுக்கோ மட்டும் அந்த சுதந்திரம் இருக்க கூடாதா? பையனோ, பொண்ணோ, யார அவங்க விரும்பராங்களோ அவங்களோட சந்தோஷமா இருக்கட்டுமே. அதுல தலையிட நீங்க யாரு, கேக்கறேன்!

நிதினின் அம்மா : சின்ன வயசுலேர்ந்தே என் பையன் வித்தியாசமா தான் இருந்தான். பொண்ணுங்களோட தான் விளையாடுவான், பசங்க கூட விளையாட மாட்டான். எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது. அவன் கடைசியா என்கிட்ட அவன் ஒரு “கே”னு சொன்னப்போ, எனக்கு அதிர்ச்சி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு தெரியும்னு சொன்னேன். உன் வாழ்க்கை, உன் இஷ்டப்படி இருப்பானு சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை. அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என்ன சொல்லும்னெல்லாம் நான் கவலையே படலை. இப்போகூட எல்லார்கிட்டயும் நானே சொல்றேன், ஆமாம் என் பையன் ஒரு “கே” தான், அப்படின்னு. அப்புறம் என்னால முடிச்சவரை, அவங்களுக்கு இதபத்தி புரியவைக்கறேன். என்னதான் ஆனாலும், அவங்க நம்ம குழந்தைங்க, நம்மாளோட அன்பும் ஆதரவும் அவங்களுக்கு தேவை.
Image Source : NDTV.com
எல்லா பெற்றோருக்கும், முக்கியமாக பஞ்சாபி பாட்டிக்கும் என் கரகோஷன்கள்!!!! பலே பலே!!! 🙂