தமிழ்நாடு வானவில் கூட்டணி, பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்தும் பேரணி
பாலியல் சிறுபானமையினரின் உரிமைகளை காக்கக் கோரி ஜனவரி 11 ( 3-430 PM) அன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் பேரணி.
தமிழகமெங்கும் மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்கள் (Lesbians, Gays, Bisexuals, Transgenders), மற்றும் எல்லா சமூகங்ககளை சார்ந்தவர்களின் மனித உரிமைகள், சுகாதாரம் தொடர்பான துறைகளில் பணியாற்றும் அமைப்புகள் ஒன்றாக இணைந்து அமைத்துள்ள கூட்டணி, தமிழ்நாடு வானவில் கூட்டணி.
டிசம்பர் 11, 2013 அன்று மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்திற்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில், 377 சட்டப்பிரிவை நிலைநிறுத்தி, இந்திய உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வழங்கி சரியாக ஒரு மாதமான இன்று, இந்தியாவெங்கிலும் தீர்ப்பை எதிர்த்து போராட்டங்களும், பேரணிகளும் நடைபெறுகின்றன. தமிழ்நாடு வானவில் கூட்டணி இந்த போராட்டங்களில் இணைகிறது.
1975 ல் அவசர நிலையை அங்கீகரித்ததும், 1979 ல் (மதுரா வழக்கில்) பாலியல் பலாத்காரத்தை நியாப்படுத்தியதும், பெருமை வாய்ந்த இந்திய உச்ச நீதி மன்றத்தின் வரலாற்றின் மீது படிந்திருக்கும், அழிக்க முடியாத கரைகள். அந்த வரிசையில் டிசம்பர் 11, 2013 அன்று வழங்கிய 377 தீர்ப்பும் இடம்பெறும்.
இந்த பின்னடைவு எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், இந்திய அரசு சமர்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பமும், மற்றும் நாடெங்கிலும் எங்களை ஆதரித்து எழும்பியுள்ள முற்போக்கான குரல்களும், எங்களுக்கு ஊக்கத்தை அளிக்கின்றன. இன்றைய பேரணியில் தமிழ்நாடு வானவில் கூட்டணி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறது:
- மாநில அளவில் 377 பிரிவில் சட்ட திருத்தம் கொண்டுவந்து, 18 வயதிற்கு மேல் உள்ள இருவரின் பரஸ்பர சம்மதத்துடன் தனிமையில் நடக்கும் எந்த பால் சம்மந்தமான உறவையும், குற்றமாக்காமல் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம். 1967 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்து திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தது போன்ற பல முற்போக்கான மாற்றங்களை பாரம்பரியமாக கொண்ட நம் தமிழ் நாட்டில், இந்த 377 சட்ட திருத்தம் இன்னொரு பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படும் என்பது மறுக்க முடியாதது.
- தேசிய அளவில், இந்திய அரசாங்கம், நாஸ் பவுண்டேஷன், வாய்சஸ் அகைன்ச்ட் 377, ஆகிய அமைப்புகள் சமர்ப்பித்துள்ள மறுபரிசீலனை விண்ணப்பங்களை, சாதகமாக பரிசீலித்து, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் கண்ணியத்தை காக்குமாறு உச்ச நீதி மன்றத்தை கேட்டுக் கொள்கிறோம்.
- சம உரிமைகள் கொண்ட முழு குடிமக்களாக எங்களை நடத்துமாறு எங்கள் குடும்பங்கள், கல்வி நிலையங்கள், பணி இடங்கள், அரசாங்கம், நம் தாய்நாடு, மற்றும் நம் சமுதாயம், ஆகியோரை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதீத வெறுப்பினாலும், அறியாமையாலும் எங்கள் மேல் தவறான அபிப்பராயங்களை கொண்டவர்களை, அவற்றைக் களைந்து, திறந்த மனத்துடன், சொந்த குடும்பத்திற்குள்ளேயே சிறுபான்மையான எங்கள் வாழ்வுகளையும், போராட்டங்களையும், புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும், பெண்கள் அமைப்புகள், தலித் அமைப்புகள், பாலியல் தொழிலாளர் அமைப்புகள் ஆகியபல முற்போக்கான அமைப்புகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த அமைப்புகளுடன், எங்களுக்கு பொதுவாக அமைந்துள்ள சவால்களையும், உரிமை போராட்டங்களையும் நாங்கள் நன்கு உணர்வோம். இவர்களுடன் இணைந்து, எல்லோருடைய சமூக நீதிக்கும், சமத்துவத்திற்குமான எங்கள் போராட்டம், பன்மடங்கு உறுதியுடன் தொடரும், என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம்.
I wish to include myself to this rainbow…. Can you please tell me the procedure….