இதுவா சுதந்திரம்!?
இந்தியா சுதந்திரம் பெற்று 68 வருடம் முழுமையடைகிறதாம். எத்தனையோ ஆண்களும் பெண்களும் பிறந்து அரசின் வெவ்வேறு நிலைகளில் பணியாற்றி உழைத்து ஓய்வு பெற்றிருப்பார்கள். ஆனால், இதுகாறும் ஒரு திருநம்பிக்கோ, திருநங்கைக்கோ இந்த சுதந்திர நாட்டில் ஒரேயொரு அரசு வேலையேனும் கொடுக்கப்படவில்லை எனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
இந்தியநாட்டில் பிறந்ததால் இந்தியப் பிரஜைகளானோம். ஆனால், எந்த இந்திய பிரஜைக்குரிய குறைந்தபட்ச உரிமைகளும் கிடைக்கப்பெறாத தாய்நாட்டின் அகதிகளாய்தான் வாழவேண்டுமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
தமிழகத்தில் ஒரு சில திருநங்கைகள் விடாப்பிடியாக போராடியதன் பிறகு சில நல்லுல்லம் கொண்ட அதிகாரிகளால் பணி நிரந்தம் செய்யப்படாத சிறு சிறு பணிகள் கிடைத்துள்ளது. முறையான பணிநிரந்தரமற்ற, ஓரிரு பணியிடங்களை கொண்டே திருப்தியடைய வேண்டுமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
தகுதியுடைய ஒரு இந்திய பிரஜை அரசு காவல்துறை பணிக்கு தேர்வெழுத வழக்கு பதிவு செய்துதான் எழுதவேண்டுமெனில், தேர்வில் தேர்வாகியும் உடற்தகுதி தேர்வுக்கு மறுக்கப்பட்டு பின் மீண்டும் வழக்கு பதிவுசெய்து, அதில் வென்றபின்பும் இறுதி நேரத்தில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, பலவித மனஉலைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு, அதையும் தாண்டி, அனைத்து போட்டிகளிலும் வென்றபின்பும், வெளிப்படையாக மதிப்பெண்களை வெளியிடாமல் பலமணிநேர காத்திருப்பிற்கு பிறகு, ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி நேரம் அதிகமாகிவிட்டது எனக்கூறி வெளியேற்றப்படுவாரானால் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
உலகம் முழுவதிலும் திருநங்கைகள் தெருவில் பிச்சை எடுப்பவர்களாக இருக்கும் ஒரே நாடு என்னும் பெருமை மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை மட்டுமே சாரும். மதத்தின் பெயரால், கடவுளர்களின் அவதாரம் என்ற அங்கீகாரத்துடன் ஆசிர்வாதம் வழங்குபவர்களாக மட்டுமே இந்த மதசார்பற்ற நாடு திருநங்கைகளை வைத்திருக்குமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
கண்ணியமான வாழ்க்கைக்கு வழி மறுக்கப்பட்டு, சுயதொழில் செய்து வாழவும் போதுமான ஆதரவுவின்றி எது இருந்தாலும், இல்லையெனிலும் பசிக்கும் வயிற்றிற்க்காக தன் உடலை மூலதனமாகக் கொண்டு பாலியல் தொழில் செய்யும் சகோதரிகளுக்கு சட்டம்-ஒழுங்கு என்னும் போர்வையில் தண்டனைகளை தரும் பொறுப்பான இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
இந்திய பிரஜைக்கான சமூக, பொருளாதார, கலச்சார உரிமையும், பாதுகாப்பும் முழுமுற்றாக மறுக்கப்பட்டு ஆனால் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடைவரை அனைத்திற்கும் வரியை மட்டும் இந்த இந்த தாய்நாட்டு அகதிகளான பிச்சைக்காரிகளிடமிருந்து தவறாமல் பிடிங்கிக்கொள்ளுமெனில் இந்த சுதந்திரத்தால் எங்களுக்கு என்ன பயன்?
இப்படிக்கு,
லிவிங் ஸ்மைல் வித்யா
தாய்நாட்டு அகதி,
சென்னை, தமிழ்நாடு,
இந்தியா