காத்திருப்பு
உணவையும் குருதியையும்
அன்புடன் ஊட்டி,
பல்லக்கு போலே
நாட்கள் பல
இடங்கள் சுற்றி,
சொற்கள் தீர்ந்து
மௌனத்தைப் பேருவகையுடன் பேசி,
தன் அருகாமையின்
வெம்மையுடனும் வாசத்துடனும்
ஏந்தியிருந்த தாய்
குழந்தையை நழுவ விடுகிறாள்.
வலிக்கட்டும் என்றா?
பிடிக்கவில்லை என்றா?
எதிர்காலத்தில் அறியநேரும் பிரிவுகளுக்கு
தொடக்கமாக இருக்கட்டும் என்றா?
மற்றொரு பொருத்தமான தாய்
ஏந்திக்கொள்வாள் என்றா?
குழந்தை பிடிவாதமாக
மண்ணில் விழவேயில்லை.
முடிவிலா பேரிருள் குழியில்
தாயை நோக்கி கைநீட்டியபடி
பயணித்துக்கொண்டிருக்கிறது.
இக்கவிதை மிகவும் நெருக்கமாக இருந்த இருநபர்களின் தொலைந்த உறவைப் பற்றியது. இதிலுள்ள அம்மாவும் குழந்தையும் அந்நபர்களின் குறியீடுகள். இக்கவிதை வாசகர்களிடம் பின்வரும் கேள்விகளைப் பற்றி யோசிக்கக் கோருகிறது: எதற்காக ஒருவர் ஓர் உறவை முறிக்கவேண்டும்? எதற்காக ஒருவர் தொலைந்த உறவு மறுபடியும் நிகழ முடிவில்லாமல் காத்திருக்கவேண்டும்?