நங்கை பாடும் தாலாட்டு (Lesbian Lullaby)
(நங்கை = லெஸ்பியன்)
பாசமலர் படத்தில் வரும் மலர்ந்தும் மலராத பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பாடலை ஒருமுறை கேட்டுவிட்டு படியுங்களேன்!
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே
வண்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விளைந்த கலையன்னமே
நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த இளம்தென்றலே
வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே..
மாதங்கள் பத்து ஒருத்தி மடியிலே சுமக்க, மற்றவள் மனதிலே சுமக்க
மாதாக்கள் இருவரின் மனம் மகிழ மண்ணில் பிறந்தாயடி
பேதங்கள் போற்றும் இவ்வுலகில் அனவைரும் சமமென்று
நியாயங்கள் செய்யும் நீதியின் வடிவாக நிமிர்ந்து திகழ்வாயடி
(நதியில் விளையாடி..)
அம்மையும் அப்பனுமாக, நானும் அவளும் உன்னை காப்போம் கண்ணே
அதற்கு மேல் சொந்தங்கள் எங்கே என்றால் என்ன சொல்வேன் பெண்ணே?
சிறகில் எனை மூடி அருமை மகளாக வளர்த்த கதை சொல்லவா – மங்கை நான் நங்கை என்றறிந்ததும்
கனவில் நினையாத காழ்ப்பு கொண்டு தவிர்த்த கதை சொல்லவா? குடும்பம் என்னை தவிர்த்த கதை சொல்லவா?
தங்க கடியாரம் வைர மணியாரம் தந்து பெயர் சூட்டுவார், தாத்தா வந்து பெயர் சூட்டுவார் – கண்கள்
பொங்க பேத்தி நீ பெரும்பாக்கியம் என்று பாட்டி தாலாட்டுவார், தொட்டிலில் தாலாட்டுவார்
மடியில் உனைவைத்து மருமகள் என்று மாமன் மார்தட்டுவார், மகிழ்ந்து மார்தட்டுவார் – நீ பிறந்த
நொடியில் ஓடி வந்து சித்தி சீராட்டுவார், சின்னவள் உன்னை சித்தி சீராட்டுவார்
(நதியில் விளையாடி..)
சொந்தங்கள் இப்படிச் சேர்த்துக்கொள்ளும் என்று சொல்ல இதயம் துடிக்குதடி
பந்தங்கள் உன்னை பார்த்து பூரிக்கும் என்று சொல்ல எந்தன் உள்ளம் தயங்குதடி
மணவாளனுக்கு பிறந்திருந்தால் மறுத்திருக்க மாட்டோம் என்று வாதாடுவார்கள்
மகளின் மனைவிக்கு பிறந்ததால் நீ உறவல்ல என்று வேற்றுமை பாராட்டுவார்கள்
கண்ணில் மணி போல, மணியின் நிழல் போல கலந்து வளர்ந்தோமடி – இந்த
மண்ணும் கடல் வானும் மறைந்தாலும் மறக்க முடியாது என்று மயங்கி கிடந்தேனடி
சிறகில் எனை மூடி அருமை மகளாக வளர்த்த கதை சொல்லவா – மங்கை நான் நங்கை என்றறிந்ததும்
கனவில் நினையாத காழ்ப்பு கொண்டு தவிர்த்த கதை சொல்லவா? குடும்பம் என்னை தவிர்த்த கதை சொல்லவா?
மாதங்கள் பத்து ஒருத்தி மடியிலே சுமக்க, மற்றவள் மனதிலே சுமக்க
மாதாக்கள் இருவரின் மனம் மகிழ மண்ணில் பிறந்தாயடி
பேதங்கள் போற்றும் இவ்வுலகில் அனவைரும் சமமென்று
நியாயங்கள் செய்யும் நீதியின் வடிவாக நிமிர்ந்து திகழ்வாயடி
(நதியில் விளையாடி)
very good lyrics