வாரமலர் ஆசிரியருக்கு ஒரு கடிதம்
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு,
உங்கள் வாரமலர் இணையதளத்தில் 12 ஜூன் 2009 அன்று வெளியாகியுள்ள “அன்புடன் அந்தரங்கம்” பகுதியில் எழுத்தாளர் அனுராதா ரமணன் ஒருபாலீர்ப்பு பற்றிய தன்னுடைய அறியாமையை பிரகடனப் படுத்தியுள்ளார். மனநல அறிவுரை வழங்க இவரைப்போன்ற முற்றிலும் பயிற்சியும் தேர்சசியும் அற்றவர்கள் முனைவது கண்டிக்கத்தக்கது. மாற்றுப்பாலியல் பற்றி Dr.விஜய் நாகசாமி போன்ற மனநல நிபுணர்களும் Dr. நாராயண ரெட்டி போன்ற பாலியல் நிபுணர்களும் தெளிவாகப் பேசியும் எழுதியும் வருவதை அனுராதா ரமணன் அறிய வேண்டும். உலகெங்கிலும் மட்டுமன்றி இந்தியாவிலும் மாற்றுப் பாலியல் கொண்டவர்களின் குரல்கள் பொதுத் தளங்களில் இன்று ஒலித்துக் கொண்டிருப்பதை அவர் அறியாமலிருப்பதும், பால் விழைவு பற்றிய எத்தகையத் தெளிவுமின்றி மற்றொருவருக்கு அறிவுரை வழங்க அவர் முன்வருவதையும் நாங்கள் கண்டிக்கிறோம். வெறும் பெயரும் விற்பனையும் கருதி வாரமலர் இதுபோன்ற கற்பிதங்களைப் பிரசுரிப்பதைக் கைவிட வேண்டும். பாலியல் போன்ற நுண்ணுணர்வு மிக்க கேள்விகளுக்கு நீங்கள் தெளிவுடன் பதிலளிக்க விரும்பினால், உங்கள் வாசகர்களின் நலனை நீங்கள் உண்மையிலேயே கருத்தில் கொண்டிருப்பின், தேர்ந்த மனநல நிபுணரை அணுகித் தெளிவு பெறவும்.
இப்படிக்கு,
அனிருத்தன் வாசுதேவன்