மேனன் வெளியே வந்த கதை
என் உணர்வுகளை வெளிப்படுத்துவது எப்பொழுதும் எனக்கு எளிதாகயிருந்ததில்லை. குழந்தை பருவத்திலிருந்தே எல்லோரையும் விட்டு சற்று தள்ளியே இருப்பேன் நான். யாரும் என்னை அரவணைப்பதோ, அன்பைப் பொழிவதோ எனக்கு பிடித்ததில்லை. என் எண்ணங்களை நான் வெளிபடுத்தவும் விரும்பியதில்லை. இதெல்லாம் போதாது என்று நான் வித்தியாசமானவள் என்பதையும் நான் உணர்ந்தேன். அதனால் என்னை நானே கேள்விகள்கேட்டு ஆராய்வதை விட்டு நான் நாவல்களையும் மற்ற புத்தகங்களையும் படிப்பதில் மூழ்கிக்கொண்டேன். அவற்றிலிருந்து பெண்களின் புகைப்படங்களை சேகரிப்பது என்னுடைய ரகசிய போழுதுபோக்காயிற்று. அவ்வப்பொழுது ஆண்களின் புகைப்படங்களும் எனது சேகரிப்பில் இடம் பெற்றதால்…. நான் தன்பால் ஈர்ப்புடயவள் அல்ல என்று எண்ணிக்கொள்வேன். அப்போது எனக்கு தெரிந்ததெல்லாம் ஒன்று எதிர்பால் ஈர்ப்பு இன்னொன்று தன்பால் ஈர்ப்பு.
பின்பு கல்லூரி நாட்களில் ஒரு பெண்ணை சந்தித்து, அவள் மேல் காதல் வர, அவளும் அதை எதிரொலிக்க…நட்பையும் காதலையும் தாண்டிய உணர்வு அது. என்னை நானே அறியவைத்தவள் அவள். அப்பொழுது எனக்கு புரிந்தது நான் இருபால் ஈர்ப்புள்ளவள் என்று ( “அட ச்சே இது தெரியலையே உனக்கு ” என்று என்னை நானே நொந்து கொண்டேன் ) .
புதிதாய் பதினெட்டு, காதல் பித்து – இருந்தாலும் என்னால் என் பரவசத்தை பகிர்ந்துகொள்ள முடியவில்லை. எனது இந்த உணர்வுகளை அறிந்து கொண்டதால் வந்த பயம், குழப்பம். வழக்கம்போல என்னக்குள் என்னை பூட்டிக்கொண்டேன், என் உணர்வுகளை அடக்கினேன்….. என் தலை பாரம் தாங்காமல் வெடித்துவிடும் போலிருந்தது. நான் வாடி வதங்கினேன், என்னை சுற்றி இருந்தவர்களிடமிருந்து விலகினேன். இதை கண்டு அம்மா பயந்துபோனாள். வழக்கம் போல் ஏதோ என்னை தொந்தரவு செய்கிறது, நான் அதை பற்றி பேசாமல் ஓடி ஒளிகிறேன் என்பது அவளுக்கு தெரிந்துவிட்டது. எதுவானாலும் சொல்லு என்று என்னை பல முறை கேட்டுப்பார்த்தாள், நான் மறுத்தேன்.
ஒரு நாள் இரவு என் தங்கை தூங்கிய பிறகு என்னை கூப்பிட்டாள். (என் அப்பா ஆர்மி ஆபிசர் , வடகிழக்கில் வேலை அவருக்கு ). என்னை டைனிங் டேபிளில் அமர்த்தி, உடைந்து அழ தொடங்கினாள். ” உனக்கு என்னை பிரச்னை… தயவுசெய்து சொல்லு.. என்கிட்டே சொல்லலைனாலும் பரவாயில்லை … அப்பாகிட்ட சொல்லு.. யார்கிட்டயாவது மனம் திறந்து பேசு.. நீ இப்படி உனக்குள்ளே எல்லாத்தையும் அடக்கிகிட்டு சித்ரவதை படரத என்னால சகிச்சுக்கமுடியல”. இயலாமையில் அம்மா கதறி அழுவதை பார்த்து என்னால் பேசாமலிருக்கமுடியவில்லை.
இதுவரை யார் முன்னாலும் ஒரு கண்ணீர் சிந்தாத நான் (பெற்றோர் முன் கூட) உடைந்து அழத்தொடங்கினேன், அம்மாவிடம் என்னைப் பற்றி சொன்னேன். நான் அழுவதைக் கண்டு அம்மா அரண்டு போனாள். என்னை கட்டி அணைத்து தேற்றினாள். நான் மனதில் இருப்பதை கொட்டினேன்…. எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தேன். ஒரு பெண்ணின் மேல் எனக்கு காதல் என்பதையும் சொன்னேன். அம்மா என்னை அணைத்து சொன்னாள்…
” எல்லாம் சரியாயிடும், நீ கவலைப்படாத…என்னவானாலும் நீ என் பொண்ணு….”. பெரிய சுமையை இறக்கி வைத்தது போல லேசானது என் மனம்.
தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு அம்மா சொன்னாள்
” இது ஒன்னும் புதிசில்ல…..வளர்ற வயசுல சில குழந்தைகளுக்கு இந்த மாதிரி உணர்வுகள் இருக்கும். எல்லாம் சரியாயிடும்.. கொஞ்ச நாளுக்கு பொண்ணுங்க பக்கதுல உக்காறாதே … அவங்க கைய பிடிச்சிகிட்டு நடக்காத. வண்டில லிப்ட் குடுக்காத ….எல்லாம் தானே சரியாயிடும்.அப்பொறம் முக்கியமா கல்யாணத்துக்கப்பறம் உன் புருஷன்கிட்ட இதபத்தி சொல்லாதே..ஆம்பளைங்க இந்த மாதிரி விஷயங்கள லேசா எடுத்துக்கமாட்டாங்க ”
என்னால் என் காதையே நம்பமுடியவில்லை. நான் மனம் திறந்து அம்மாவிடம் பேசினதில் எந்த பிரயோசனமும் இல்லை. அன்று நான் தளர்ந்து போயிருந்தேன். உடம்பிலோ மனதிலோ அதற்கு மேல் போராட சக்தியில்லை. சிறிது நேரம் எனக்குள்ளே தேம்பிவிட்டு கண்ணசர்ந்தேன்.
இப்பொழுது யோசித்து பார்த்தால் என்னுடைய அந்த வெளியே வருதலுக்கு, கொஞ்சம் பிரயோசனம் இருந்திருக்கிறது. என்னவானாலும் நான் அம்மாவின் பெண்ணாக இருந்தேன். இன்றும் என் அம்மாவால் பெண்களின் மேல் எனக்கு இருக்கும் ஈர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அவளால் ஏற்றுக்கொள்ள முடியாத இன்னொரு விஷயம் – என் காதலி. பல வருடங்களாய் சுற்றிவளைத்து கொண்டிருந்தவள்….கடைசியாய் இந்த வருடம் நான் ஹைடரபாதில் உள்ள என் காதலி வீட்டிற்கு கிளம்பியபோழுது அதை பற்றி பேசினாள். கடிதத்தில் இருவரும் மனம் திறந்தோம். கோபம், பயம், கெஞ்சல் என்று எல்லா உணர்ச்சிகளும் இரண்டு புறமும் ஓடின. அம்மா எழுதினாள் ” நீ அந்த பொண்ணு ( கவனிக்கவும் – காதலி என்றோ அல்லது பெயர் சொல்லியோ அவளை அழைக்கவில்லை ) வீட்டுக்கு போனேனா ….. உடல் ரீதியா எந்த உறவும் வெச்சுக்காத”
நான் பதிலடி கொடுத்தேன் ” என் படுக்கை அறையில் வேற யாருக்கும் வேலையில்லை, அது என் தனிப்பட்ட விஷயம்” .
அதற்குபிறகு அம்மா பேசவில்லை. பல நாட்கள் என்னிடம் பேசாமலேயே இருந்தவள், இப்பொழுது பரவாயில்லை. பெரியதாய் மாற்றமில்லை என்றாலும், அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் தானே.
அப்பறம் என் தங்கை.. அவளிடமும் வெளி வரவேண்டும் என்று நினைத்தேன். நான் ரொம்ப சங்கோஜி அதனால் எனக்கு நண்பர்களில்லை என்று கவலைப்பட்டு கொண்டிருந்தாள் என் தங்கை. அவளை என்னால் நேரில் பார்கமுடியாததல் , யாஹூ மெசஞ்சர் மூலம் அவளிடம் சொன்னேன்.
(நான் டெல்லியில் வேலை செய்கிறேன் .. அவள் ஹைடராபாடில் படிக்கிறாள் )
நான்: உன்கிட்ட ஒரு அந்தரங்கமான விஷயம் சொல்லணும்
தங்கை :சொல்லு
நான்: நீ எப்பவும் என்னை டேட்டுக்கு போ….. பசங்கள மீட் பண்ணு.. அப்போதான் உன் லைப் ல காதல் உள்ள வரும்னு சொல்லுவேல..
தங்கை :ஆமாம்
நான்: உன்கிட்ட சொல்ல தைரியம் வரலை.. நான் முக்கால்வாசி பொண்ணுங்கள தான் டேட் பண்றேன்
தங்கை :நல்லதுதான் … பொண்ணுங்களோட போனா சில பசங்களுக்கு பிடிக்கும்
நான்: நான் சொன்னத நீ சரியாய் புரிஞ்சுகல.. நான் பொண்ணுங்கள டேட் பன்றேனு சொன்னேன்
தங்கை :என்னது !!!!
நான்: ஆமாம் …..
தங்கை :நீ லெஸ்பியன் ஆ? (தன்பால் ஈர்ப்பு கொண்ட – பெண் )
நான்: நான் பைஸெஷுஅல் ( இருபால் ஈர்ப்புள்ளவள் )
தங்கை :ஹ்ம்ம். நீ ஸ்ட்ரைட் இல்லைன்னு எனக்கு தெரியும்
நான்: சும்மா கதை விடாத
தங்கை :ஹே நெஜமா… நான் உன்ன பாத்துக்கிட்டுதானே இருக்கேன்
( நிறையவிஷயங்கள் பேசினோம் .. அது இங்க வேண்டாமே )
தங்கை :உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா…… குடும்பவாசியாக முடியுமா
நான்: ஹ்ம்ம்…எனக்கு பசங்களையும் பிடிக்கும்.. அதனால நான் கல்யாணம் பண்ணிகிட்டா..என்னால குடும்பம் நடத்தமுடியும். அதபத்தி இப்போ என்ன…இப்போதைக்கு உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.. பரவாயில்லை நீ நல்லாவே எடுத்துகிட்ட
தங்கை :நான் ஒன்னும் குழந்தை இல்ல.. எனக்கும் மாற்று பாலுணர்வு உள்ள நண்பர்கள் இருகாங்க..நீ என்ன சகிச்சுக்கறனு எனக்கு தெரியும்”
அன்றிலிருந்து என் தங்கை எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறாள் என்பதில் எனக்கு மிகபெரிய சந்தோசம். அப்பறம் அப்பா… அப்பாவிடம் வெளி வரவேண்டும். அப்பாவுக்கும் தெரியும் என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகம் (அம்மா மூலமாக). அப்பா ஒரு தரம் என்னிடம் கேட்டார் ” ஹொவ் இஸ் லைப் விதௌட் எ ஒஇய்ப் ” . அப்பாவுக்கு தெரிந்திருக்கும் என்பது என் நப்பாசயாக கூட இருக்கலாம் , அப்படியானால் வெளியே வரும் வேலை இல்லையே !
தன் மூத்தமகள் ஒரு மாறுபட்ட பால் உணர்வுள்ளவள் என்ற செய்தி அப்பாவை சிதரவைக்கும். (நான் அம்மாவின் கர்ப்பத்திலிருந்த பொழுது , அப்பா கோவில் கோவிலாக சென்று மூத்தது பெண்ணாக இருக்க வேண்டும் என்று வேண்டினாராம்) . அப்பாவிடம் இந்த விஷயத்தை சொல்ல நிறையவே சக்தி வேண்டும். எப்பொழுது அது நடக்குமோ ..கூடிய சீக்கிரம் நடக்கலாம்.
எங்கேயோ படித்திருக்கிறேன் ….. வெளியே வருதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும் ஒரு பயணம் அதற்கு முடிவே கிடையாது என்று. என் நண்பர்கள் எல்லோருக்கும் என்னை பற்றி சொல்லியிருக்கிறேன். புதிதாய் சந்திக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் பழகிய பிறகு.. மெல்ல என்னை பற்றி, என்னுடைய மாறுபட்ட பாலுணர்வை பற்றி சொல்வேன். வெளிய வருதல் ஒரு பெரிய சுதந்திரமான உணர்வு. நான் நானாக இருப்பது எனக்கு இப்பொழுது ரொம்பவே பிடித்திருக்கிறது.எப்பொழுதும் எல்லோரும் இதை புரிந்துகொள்வதோ , ஏற்றுகொள்வதோ இல்லை. நான் அதை சட்டை செய்வது இல்லை. நான் நானாக இருக்கிறேன்,அப்படியே என்னால் முடிந்த வரை என் நண்பர்களுக்கு மாறுபட்ட பாலுணர்வை பற்றி எடுத்து சொல்கிறேன்.