முகூர்த்த நேரம்
இன்று:
“சித்தப்பா லேட் ஆச்சி, சீக்கிரமா கிளம்பு” என்றாள் மீனா குட்டி.
“நீ போய் வண்டிய ஸ்டார்ட் பண்ணு, நான் வந்துட்டேன்” என்று சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு, திலீப் ஷு லேசை அவசரமாய்க் கட்டினான்.
பட்டன் ஸ்டார்ட் வண்டியை தயக்கமின்றி விர்ரென எழுப்பினாள் மீனா.
“தம்பி வரும்போது இன்னைக்கு மறக்காம வெளிய சாப்பிட்டு வந்துடுங்க. நாங்க எல்லாம் செங்கல்பட்டு போறோம்” என்று சொல்லி முடிக்கும் முன் “டேய் அடி வாங்க போற” என்று அதட்டி மீனாவின் முன்று வயதுத் தம்பியை அடக்க முயன்றாள் மீனாவின் அம்மா.
அதற்குள் வண்டி வேகம் பிடிக்கவே, “சரி அண்ணி” என்று உரக்கக் கத்தி விட்டுச் சூடு பிடிக்கப் பறந்தான் திலீப்.
அன்று:
“சார் சார், ப்ளீஸ் கொஞ்சம் வண்டிய நிறுத்துங்க” என்று குரல் கேட்டது. சாதரணமாய் வண்டியை நிறுத்த மாட்டான் திலீப் என்றாலும், அதைச் சொன்ன கண்களுக்கு அடிபணிவதை விட அவனுக்கு வேறு வழி தெரியவில்லை. கூர்மையான பார்வை, அதை விட கூர்மையான மீசை, உறுதியான இரும்பு எலும்புகளின் மேல் இறுக்கமாய் போர்த்திய கருப்புத் தோலின் மீது ஆழுக்குச் சட்டை.
“பிச்சைக்காரனா?” என்று திலீப் வியந்திருக்கையில், “சார் சார், நீங்க பாம்பு ஹௌசு பக்கம் போறதா இருந்தா, என்னை கொஞ்சம் ட்ராப் பண்ணிட்டு போங்க சார். பஸ் மிஸ் ஆயிடிச்சி. லேட்டா போனா முதலாளி என்ன வேலைய வுட்டு தூக்கிருவாறு சார். என்னைக்காவது உங்க பைக்கு ரிப்பேர் ஆனா, என்ன கூப்பிடுங்க, ப்ரீயா பண்ணித் தர்றேன் சார்” என்று முத்து சொன்ன பண்ட மாற்றை விட, அவன் கண்களுக்கு மீண்டும் அடி பணிந்தான் திலீப்.
இன்று:
“மிஸ்டர் திலீப், உங்க எக்ஸ்ப்ளனேஷனேல்லாம் சரிதான். இந்த ‘பக்கி’ சாப்ட்வேர நாம கிளையண்டுக்கு அனுப்பினா, அடுத்த டேர்முக்கு நமக்கு ப்ராஜெக்ட் கிடைக்கிற சன்செஸ் ரொம்பக் கம்மி” – இது மேனேஜர்.
“சார், பர்ஸ்ட் இது நம்ம ப்ராஜெக்டே இல்லை. சிங்கப்பூர் ஆபிஸ் இதை தெரியாத்தனமா சைன் பண்ணி, எக்குத்தப்பா மாட்டிக்கிட்டதால, நைசா நம்ம தலைல கட்டிட்டாங்க. அவங்க கேக்கர அவுட்புட் வேணும்னா, இன்னும் ஆறு மாசமாவது ஆகும். ஒரு வாரத்துலல எல்லாம் முடிக்க முடியாது சார்” என்று உறுதியாகச் சொன்னான் திலீப்.
“சரி இன்னைக்கு எப். சி. ஆர். டாகுமெண்டையாவது முடிச்சி குடுத்துட்டுப் போங்க” என்றார் மேனஜர்.
“சார் மண்டே வந்து உங்களுக்கு என்ன வேணும்னாலும் செஞ்சு குடுக்கறேன். இன்னைக்கு அஞ்சு மணிக்கு நான் கிளம்பியே ஆகணும்” என்று திலீப் முடிவாகச் சொன்னான்
“என்ன வீகெண்ட் பெங்க்ளூருக்குப் போய் பொறுக்கப் போறியா? செய் செய் உனக்கு என்ன பிள்ளையா குட்டியா” என் சலித்துக் கொண்டார் மேனேஜர்.
அன்று:
“சார், சைலன்சரக் கழட்டி, கலர் கலரா லைட்டுப் போட்டு, சைரன் சவுண்டு எல்லாம் வரணும்னா, அதுக்கு ரொம்பச் செலவாகும்” என்று முத்து சொல்லி முடிக்கும் முன், அவன் வாயை தனது வாயால் மூடி, ஐந்து நிமிட இறுக்கத்திற்கு பிறகு திலீப் சொன்னான் “பாதி பேமண்ட் குடுத்தாச்சு, மீதிய ராத்திரி குடுக்கறேன்”
முத்துவை அவன் குறும்பு, இல்லை, குத்தும் பார்வை பார்த்தான்.
“இந்த ஸ்டைலெல்லாம் நல்லாத்தான் இருக்கு, இன்னைக்கு ராத்திரி என்னை மரியாதையா கொண்டு போய் மெட்ராஸ்ல விடு, நாளைக்கு நான் வேலை பாக்கணும்” என்றான் முத்து.
“சண்டே கூட வேலையா? என்னோட இருக்ககூடாதா” என்று திலீப் சிணுங்கினான்.
“உனக்கு என்ன நீ சாப்ட்வேர் இஞ்சினீயர், உக்காந்து தேய்க்கர வேலை, வீக்கென்ட் எல்லாம் ‘ப்ரீ’தான். நான் உடம்பு வளைச்சு உழைச்சாத்தான், என் குடிகார அப்பன் வெச்ச கடனையும், என் வாழாவெட்டி தங்கச்சிக்கும், அவ பிள்ளைக்கும் ஒரு வழியைச் செய்ய முடியும்” என்று முடித்தான் முத்து.
“உடம்ப ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத, அது எனக்குச் சொந்தம்” என்று திலீப் கூலாகச் சொன்னான்.
இன்று:
திலீப் சாப்பிட்டுக் கொண்டே அம்மாவிடம் போனில், “இதுக்கெல்லாம் ஏம்மா டென்ஷன் ஆகுற, அண்ணி அண்ணா கல்யாணம் ஆகி 12 வருஷம் ஆச்சு, இன்னும் நீ என்னவோ புது சம்மந்தி மாதிரி அவங்க அத கண்டுக்கல, இத மதிக்கலன்னு அலட்டிக்காம , பேரன் பேத்தியோட போய் சேரு. ஐ மீன், செங்கல்பட்டுக்கு” என்றான்.
“ஏன்டா சுடுகாட்டுக்குன்னு சொல்லேன். அதுக்குதான் காத்துக்கிட்டு இருக்கேன். உங்க அண்ணன் தலையணை மந்திரத்துக்கு மயங்கி, அவளோட தலையாட்டி பொம்மையா மாறிட்டான். நீயாவது வீட்ட மதிக்கரவளா ஒருத்திய கட்டுவன்னு பர்த்தா, ஒரு வழிக்கும் வர மாட்டேங்கற. உங்க அப்பா அவர் பாட்டுக்கு என்னை நிர்கதியா உங்க தலைல கட்டிட்டு, நிம்மதியா போய் சேந்துட்டாரு. என் தலைல அவ்ளோதான் எழுதி இருக்கு” என்று திட்டித் தீர்த்தாள்.
திலிப்பிற்கு உணவை முடிக்கும் முன்பே, வயிறு நிறைந்து விட்டது.
அன்று:
“நமக்குப் பொண்ணு பொறந்தா அது உன்னை மாதிரிதான் இருக்கணும்” என்றான் தீலிப் .
இடைமறித்து “ஒண்ணும் வேணாம். நானே கருப்பு, அப்புறம் அவள எவனும் கட்ட மாட்டான்” என்றான் முத்து.
“கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்று பாடி நகைத்த திலீப் “பாத்தியா பாத்தியா, உனக்கு ஏன் இந்த இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்? நீ மட்டும் வெள்ளையா இருந்தா, நான் உன்னை அன்னைக்கு பைக்ல ஏத்தி இருக்கவே மாட்டேன்” என்றான்.
“உனக்குப் பிடிச்சிருந்தா சரிதான். இப்படி வாய்ப்பேச்சுலயும், கனவிலேயும் தான் நாம குடும்பம் நடத்தி குழந்தையெல்லாம் பெத்துக்க முடியும். மத்தவங்களப் பொறுத்த வரைக்கும் நான் உனக்கு வெறும் ப்ரெண்டு. அன்னிக்கு உன்னோட அபீஸ் ‘ட்ரிப்பு’ன்னு வயநாடு போனப்ப உன்னோட கலீக்ஸ் கிட்ட எல்லாம் நான் யாரு, உனக்கு எப்படி பிரண்டுன்னு புளுகித் தள்ளி, சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடிச்சி. உங்க வீட்டுக்கு வந்தா, உங்க அம்மா, இந்த மேக்கனிக்கு பயலோட உனக்கு என்ன சகவாசம்னு கேக்கறாங்க” என்று முத்து தன் நிலைமையை வெளிப்படுத்தினான்.
சற்று நேரம் யோசித்த திலீப் “சரி வா ஓடிப்போய் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்” என்றான்.
“இன்னைக்கு நீ அடிச்சா ஜோக்குல மட்டமான ஜோக் இதுதான்” என்று சிரித்தான் முத்து.
“இல்லடா ஸீரியஸா” என்று பதில் சொன்னான் திலீப்.
இன்று:
திலீப்பின் செல் போன் ஒலித்தது. அவன் அண்ணாவிடமிருந்து. “டேய் திலீப், உடனே கோயம்பேடு பஸ்டாண்டுக்குப் போய் அம்மாவ கூட்டிட்டு வந்து வீட்ல ட்ராப் பண்ணு” என்றது அண்ணாவின் குரல்.
“ஏன்ணா? அம்மா அண்ணியோட செங்கல்பட்டுக்குல போயிருக்கணும். என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று குழம்பினான் திலீப்.
“ஆமாம்டா. நேரம் காலம் தெரியாம அம்மா உன் அண்ணி கிட்ட சம்மந்தி வீட்டுப் பிரச்சனைய ஆரம்பிச்சிருக்கா. பதிலுக்கு உன் அண்ணியும் ‘சுருக்’குன்னு ஏதோ கேட்டுட்டா. அம்மா வீம்பா அவங்க வீட்டுப் பக்கம் தலை வெச்சி கூடப் படுக்க மாட்டேன். செங்கல்பட்டுக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டா. உங்க அண்ணி எவ்வளவோ சொல்லியும் கேக்கல, அவளும் கெளம்பிட்டா” என்று புலம்பித் தீர்த்தான் அண்ணன்.
“ச்சே என்ன நான்சென்ஸ், நான் அத்தனை சொல்லியும் அம்மா இப்படி பண்ணிட்டாங்களே. சரி, ஒரு ஆட்டோ புடிச்சி அம்மாவ நீ வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கக் கூடாதா” என திலீப் கேட்டான்.
“அது எனக்குத் தெரியாதா? அம்மா அப்செட் ஆகி அழுதுட்டு உட்கார்ந்திருக்காங்க. இப்ப நம்ம யாராவது போனாதான் அவங்க கொஞ்சம் சமாதானமாவாங்க. அதுவும் அவங்க செல்லப் புள்ள நீ போனீன்னா அவங்க மனசு கொஞ்சம் ரிலாக்சாகும்” அண்ணன் அவனை விடுவதாக இல்லை.
“அது இல்லண்ணா, எனக்கு 6.30 மணிக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீ போய்க் கூட்டிட்டு வாண்ணா, ப்ளீஸ்” என்று திலீப் மீண்டும் தப்பிக்கப் பார்த்தான்.
“இத பாரு இன்னைக்கு பேங்க்ல இயர்லி ஆடிட். லாக்கர் ரூமத் திறந்து உள்ள உட்கார்ந்திருக்கோம். மிட்நைட் குள்ள நான் முடிச்சி வெளிய வந்ததாலேப் பெரிய விஷயம். நீ போய்த்தான் ஆகணும், ஃப்ரைடே ஈவனிங் நீ என்ன வெட்டி முறிப்பன்னு எனக்குத் தெரியும்” என்று அண்ணன் கறாராய்ப் பேசினான்.
“அது இல்லண்ணா …” என்று திலீப் மீண்டும் பேச ஆரமிப்க்க, “ஜஸ்ட் டூ இட்” என்று சொல்லி அண்ணன் போனைக் கட் செய்தான்.
இதை முத்துவிடம் எப்படி விளக்குவது என்று திலீப் குழம்பி இருக்கையில், முத்துவிடமிருந்து வந்த எஸ்.எம்.எஸ். “யே குருவி, சிட்டுக் குருவி” என்ற மெட்டு ஒலித்தது.
“Konjam late aagum inga periya problem” என்ற எஸ்.எம்.எஸ்சை கண்டபோது, வேதனைப்படுவதா, ஆறுதல் அடைவதா எனக் குழம்பினான்.
சுதாரித்தவன் “sari enakkum personal problem, 7.25 kku vantha pothum. manage pannalam” என பதில் எஸ்.எம்.எஸ். கொடுத்து விட்டு, அம்மாவை அழைத்து வரக் கிளம்பினான்.
கோபம் நிறைய இருந்தது. அத்தனைக் கூட்டம் மிக்க பேருந்து நிலையத்தில் அம்மாவைச் ‘சட்’டெனக் கண்டுபிடித்து “ஏறும்மா” என்றான். அம்மாவை வீட்டில் இறக்கி விட்ட போது மணி 6.57. வண்டியை விட்டு இறங்காமல் வாசலில் இருந்தே கிளம்பி விடலாம் என முடிவு செய்து இருந்த போதிலும், சிறுநீர் நிரம்பி வயிறு சிதறும் நிலையில் இருந்ததால், சற்றே உள்ளே சென்று விட்டு வரலாம் என்று முடிவை மாற்றிக் கொண்டான். கையை அலம்பி விட்டு, அதைத் துடைக்காமலேயே கிளம்ப இருந் திலீப்பை அம்மா மறித்து “சட்டுன்னு ஒரு உப்புமா பண்ணித் தரேன், சாப்பிட்டுப் போ” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம், எனக்கு அவசரமா வேலை இருக்கு, நான் போகணும்” என்று சொல்லிக் கொண்டு வாசலுக்கு விரைந்த திலீப், ப்ரேக் அடித்தாற்போல் வேகம் குறைந்துத் திரும்ப வீட்டிற்குள் நுழைந்தான்.
“என்னடா ஏதாவது மறந்துட்டியா?” என்று அம்மா கேட்டாள் .
“என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா” என்று அம்மா காலில் விழுந்தான் திலீப்.
“உனக்கு ஒரு குறையும் வராது, நீ தீர்க்காயுசா இருப்ப. நல்லா இருடா கண்ணா” என்று வியப்புக் கலந்த புன்னகையுடன் வாழ்த்தினாள் அம்மா.
மாலை நேரச் சாலை வெள்ளத்தில் எதிர் நீச்சல் செய்து வடபழனி வந்து சேருவதற்குள் மணி 7.50 ஆகி விட்டது. வண்டியை நிறுத்தி, முத்துவுக்கு செல் போனில் கால் அடிதான் திலீப். முத்து எடுக்கவில்லை. ஐந்து நிமிடம் கழித்து “owner paduthal. innum 15 min. apparam kilambiduven” என்று எஸ்.எம்.எஸ் வந்தது முத்துவிடமிருந்து.
“9o clock temple will be closed soon. pls hurry” என்று பதில் அனுப்பினான் திலீப். மணி ஆக ஆக, நெஞ்சை அடைத்தது திலீப்பிற்கு.
எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒவ்வொரு கணமும், யுகமாய் நீண்டது. சுற்றும் முற்றும் பார்த்தான் திலீப். பரபரப்பாய் கோவிலுக்குள் அலை மோதிய வண்ணம் பல்லாயிரம் ஜனங்கள். பிச்சை, பூ வியாபாரம், செருப்புக் காவல் எனக் கோவில் சார்ந்த வர்த்தகம் புரியும் சிறு நிலை முனைவர்கள், கூலிகள், கோவிலின் மணியோசை, அதன் பெருஞ்சுவர் மேல் முடுக்கப் பட்டிருந்த ஸ்பீக்கரின் சத்தமான பக்திப் பாடல்கள், உயர்ந்த கோபுரம், அதன் மீது வண்ண மின் விளக்குகள், அதன் பிரகாசத்தையும் பொருட்படுத்தாது மீறி ஒளிர்ந்த ஒன்றிரண்டு வின்மீன்கள் – அனைத்தும் சேர்ந்து அலை அலையாய் அடிப்பது போலவும், அலைகளை தாங்கும் ஒரு சிறிய தீவாய்ச் தான் சிதறாமல் நிற்பது போலவும் தோன்றியது திலீப்பிற்கு.
நேரம் ஆக, புயல்கள் தணிந்தன. அலைகள் ஓய்ந்தன. ஆனால் தனித்தீவில் பூகம்ப நிலை உருவாகிக் கொண்டிருந்தது.
8.37 க்கு ஒரு கை திலீப்பின் தோள்களை தட்டியது. “சாரிடா லேட் ஆயிடிச்சி” என்ற முத்து குரல் கேட்ட போது, அடக்கி வைத்திருந்த மூச்சு எரிமலையின் அனல் குழம்பாய் வெளியேறித் தணிந்தது திலீப்பிற்கு.
“புது சட்டையைக் குடு, ரெண்டு நிமிஷத்துல மாத்திட்டு வந்திடறேன்” என்றான் முத்து.
“அதுக்கெல்லாம் நேரம் இல்லை, வாப் போகலாம்” என்று அவசரப்படுத்தினான் திலீப்.
கோவிலுக்குள் அப்போது கூட்டம் அதிகம் இல்லை. தீபங்கள் எண்ணெய் தீர்ந்து அணையும் தருவாயில் இருந்தன. அர்ச்சனைகளும், ஸ்பீக்கரின் கர்ஜனைகளூம் நின்று போயிருந்தன. ஆண்டவன் சன்னிதானத்தில், ‘அவனும் அவனும்’ கைகூப்பிக் கும்பிட்டு விட்டு, மெல்லிய இரு தங்கச் சங்கிலிகளை ஒருவர் கழுத்தில் ஒருவர் மாட்டி, அதற்குள் ஈரமாகி விட்டிருந்த கண்களொடுக் கண்கள் பிணைத்துச் செய்தார்கள் ஒரு பிரமாணம்.
அது அவர்களின் முகூர்த்த நேரம்.
Such a cute story! Thanks for this Isaiswasan 🙂
I felt teary eyed after reading. Indha kanavum oru naal ninaivaagum
அருமை! ஒவ்வொரு வரியையும் ரசித்து படித்தேன். காத்திருக்கிறேன் என் திலிப்புக்காக.
kathal matmtan valkaiyai niraivu seium, waiting for my man.
idhu paaraatta koodiya vishayam, gay marriage ellorum accept panna vendum.
Super story
Semaya irunthuchu