கிருஷ்ணரைப் போல் என் மகன்!
சென்னை வெய்யில் மத்தியான வேளையில் அதிகமாகவே கொளுத்திக் கொண்டு இருக்கிறது. என் மன நிலையும் அதே பொலக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனது பெரிய பையன், தான் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்றான். ஏன் என்று கேட்டதற்கு தன் ‘பாலியல்’ பற்றி ஏதேதோ சொல்கிறான். டிவி-ஐ போட்டேன். மனம் மாறுதலுக்காகவா இல்லை என்னை மறக்கவா என்று எனக்கேத் தெரியவில்லை…ஏதோ பட்டி மன்றம் நடந்து கொண்டு இருந்தது. ‘அன்பில் உயர்ந்தது, ராமனிடத்தில், அயோத்தியர் வைத்த அன்பா, அல்லது கிருஷ்ணனிடத்தில் ஆயர் பாடியர் கொண்டிருந்த அன்பா?’ என்பது பற்றி. என் மனம் மறுபடி என் மகன் பிரச்னைக்கே சென்றது….
தான் பதினைந்து வயதாகி இருந்த போதே இது தனக்கு தெரிய வந்தது என்றும், தான் மற்ற ஆண் பிள்ளைகளைப் போல் பெண்களால் ஈர்க்கப் படாமல் ஆண்களாலேயே ஈர்க்கப் பட்டதாகவும், முதலில் குழம்பிப் போனவன், பிறகு பயந்தும் போய் இருக்கிறான். பிறகு தான் நிறைய புத்தகங்களைப் படித்ததாகவும் அவை எல்லாம் இந்த மாற்றங்களைப் பற்றி அவனுக்கு புரிய வைத்ததாகவும் சொன்னான்.
நானும் அவன் தந்தையும் அவனிடம் உட்கார்ந்து பேசிப் பார்த்தோம். அவன் அப்பா, எங்கள் ஆசைக்காக நீ திருமணம் செய்து கொண்டு மறைவில் என்னவோ பண்ணித் தொலை என்று சொல்கிற அளவு போய் விட்டார். கொதித்து போய் விட்டான் என் மகன். என்னால் என்னுடைய வாழ்க்கைத் துணைக்கு அப்படிப்பட்ட துரோகத்தை பண்ண முடியாது என்று ஆக்ரோஷமாக கூறி வெளியே சென்றவன் இன்னும் வரவில்லை. மனம் கனத்தது. இவரும் ஷர்ட்டை மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார்.
ஃபோன் ஒலித்தது. மகன் பேசுகிறான். “எப்படிம்மா?, இந்த அளவு கீழ்த்தரமாக உங்களால் நினைக்க முடியறது? அப்பா அப்படி யாரோடயாவது தொடர்பு வச்சிருந்தா நீ சகஜமா எடுத்துப்பியா?” என்றான்.
“இப்போ எதுக்குடா எங்க வாழ்க்கயைப் பத்தியெல்லாம் பேசற? நாங்க கல்யாணம் பண்ணிண்டு முப்பது வருஷம் ஆச்சு. உன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுடான்னா…” என்று இழுத்தேன்.
“நீங்க என்னோட கல்யாணத்தைப் பத்தி உங்க எதிர்பார்ப்பை மட்டும் நினைச்சுண்டு பேசறேளே தவிர, எனக்கு அது சந்தோஷம் தருமாங்கறதைப் பத்தி யெல்லாம் உங்களுக்கு அக்கரையில்லை..”
இடைமறித்தேன், நான். “அக்கரை இல்லாமத்தான் உங்கிட்டெ மன்னாடிண்டு இருக்கோமா? என்னப் பேச்சு பேசற?” சொல்லும் போதே அழுகை வந்தது எனக்கு.
“ஆமா. நீ இப்பொ அழறதுக்காக, நான் கல்யாணம் பண்ணிண்டு வாழ்க்கையெல்லாம் அழணும் இல்லெ? அதுதான் உனக்கு சந்தோஷம். அப்போதான் உன்னோட இந்த அழுகை நிக்கும்னா நீ நன்னாவே அழும்மா.” முரட்டுத்தனமான கோபத்துடன் பேசி வைத்து விட்டான்.
எனக்குத் தெரியும். அவனுக்கு எங்களை மனம் நோக அடித்து விட்டோமே என்ற கவலை. ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம். எல்லாம் சேர்ந்துதான் இந்த கோபம். பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளையின் உணர்வுகள். சட்டென்று என் மனம் ஒரு நிமிடம் யோசிப்பதை நிறுத்தி எதோ இடறுவதை புரிந்து கொண்டேன். அப்போ… இவன் கூறுவதை, இவன் உணர்வுகளை இப்பொழுது என்னால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?.. தலை சுற்றியது. பதில் தெரியாமல்..
டிவியின், பலத்த கைதட்டல் என் கவனத்தை கலைத்தது….
கிருஷ்ணரைப் பற்றிக் கூறி கொண்டு இருந்தவர், ‘ஏலாப் பொய்கள் உரைப்பான் என்று ஆண்டாள் பாசுரம். வெண்ணை திருடியது எல்லோருக்கும் தெரியும்.. கிருஷ்ணன் காணோம் என்றால் எங்கே தேடலாம் என்றால் ஆய்ச்சியர் புடவை கொசுவத்தில் தேடலாம் என்பது ஆழ்வார் பாசுரம்… இது எல்லாம் அவனுடைய குறைகளாக ஆயர் பாடியருக்குத் தெரியவில்லை. அவன், நான் நானாகத்தான் இருப்பேன். உங்களுக்கு என் மேல் பிரியம் இருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான்.
ராமன் அப்படி இல்லை.தன்னை ஒருவர் விரும்ப, எப்படி எல்லாம் நடக்க வேண்டுமோ, அப்படி எல்லாம் நடந்து அன்பை பெற்றார். தன் பெயரைக் காத்துக் கொள்ள, ராமன், பரதனைவிட்டுக்கொடுக்கவில்லையா….மனைவியையே கர்ப்பம் என்றும் பாராமல் தவிக்கச் செய்யவில்லையா.. மறைந்து நின்று வாலியை வதம் செய்யவில்லையா…ஆனால் கிருஷ்ணனனோ மனைவிமார் பல்லாயிரமாயிரமானவரும் சந்தோஷமாக இருக்கத்தான் வைத்துக் கொண்டார்…தன் விரதமன, ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’, என்பதைக்கூட, தன் அன்பரான, பீஷ்மருடைய விரதமான, ‘கிருஷ்ணரை ஆயுதம் எடுக்க வைப்பேன்’ என்பதை, தான் தோற்று நிலை நாட்டினார் அல்லவா…அதுதான் உண்மயான அன்பு. தன்னை நம்பி வந்தவர்களுக்கு, அறிந்து மட்டுமல்ல, அறியாமல் கூடத் தவறு இழைக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு…..’ என்று கூறி கொண்டு இருந்தார்.
என் மனம் மறுபடி என் மகனைப் பற்றி சிந்தித்தது. அவனும் இதைத்தானே கூறுகிறான். அவனுடைய, வாழ்க்கைத் துணக்குத் தான் உண்மையானவனாக இருக்க வேண்டும் என்கிறான். இது சரிதானே…ஆயர்பாடியருக்கு கிருஷ்ணன் மேல் இருந்த அன்பு போல் எனக்கும் அன்பு இருந்தால், நான் என் மகனை, அப்படியே, புரிந்து கொண்டுதானே நடக்க வேண்டும்..
உண்மையில், அவன் தன்னை நம்பி வரும் துணைக்கு சந்தோஷம் தருவதில், கிருஷ்ணனைப் போலவும், தன் துணைக்கு உண்மையானவனாக் இருப்பதில் ராமனாகவும் இருக்க நினைக்கிறான். அவன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்றால் ஏன் மறுக்க வேண்டும்? அவன் அழுவதை, அவன் குழந்தையாக இருந்த போதே தாங்காத என் மனம் இப்பொழுது தாங்குமா?…
அவன் வாழ்வில் அவன் சந்தோஷமாக இருக்கத்தானே கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறோம். அந்த கோணத்தில் பார்த்தால் இந்த திருமணம் அர்த்தமற்றது. அவனுக்கும் சரி, அந்த பெண்ணிற்கும் சரி, பெற்றவர்கள்ளாகிய எங்களூக்கும் சரி, யாருக்குமே சந்தோஷம் தர முடியாத இந்த திருமணம் மூன்று நாட்கள்,…இல்லை இப்பொழுதெல்லாம் இரண்டு நாட்கள் உறவினருடன் கூத்தடிக்க மட்டுமே….
டிவியில் நடுவர், ஆயர் பாடியர் கிருஷ்ணன் மேல் கொண்டிருந்த அன்பே சிறந்தது… ஏன் எனில் அது கட்டுத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறி முடித்தார்.
நானும், என் கவலைகளுக்கு, மகனை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்ப்பக் மனதிற்குள் கூறி, எழுந்து காஃபி போட நடந்தேன்.
கிருஷ்ணரைப் போல் என் மகன்!
ராமனும் கிருஷ்ணனும் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் எந்தன்னயோ. பெற்றுடுத்த அன்னைக்கு கற்றுத்தந்த பாடம் வருங்காலத்துக்கும் உதவிகரமாக இருக்கும். இதனை புரிந்துகொண்ட அன்னை போல் எல்லா பெற்றோர்களும் இருந்தால் நம் வாழ்கை நிம்மதியாக இருக்கும். வழக்கை என்பது மற்றவர்களை மகிழ்விப்பதற்காக அல்ல, நமது மகிழ்ச்சியும் நமது மனநிம்மதியும் மிகவும் முக்கியம்.
i am very happy