பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது
பிப்ரவரி 7, 2011 : ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக ஆக்கியது. ஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான அறிவியல் ரீதியான புரிதல் இல்லாதவர்கள், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை அறிந்திராத பலர், இந்த தீர்ப்பு அபாயகரமானது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம், இந்த தீர்ப்பு குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்பதாகும்.
அர்த்தமில்லாத, தவறான, குழப்பம் விளைவிக்ககூடிய இந்த எதிர்ப்பிற்கு சவாலாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஒருமித்த குரல் ஒன்று எழும்பி உள்ளது . அந்த குரல், பெற்றோர்களுடையது. ஆம்! ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட பெற்றோர்களின் குரல் அது. இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த பெற்றோர்கள் வேற்றுமைபடுத்தக்கூடிய, பிரிவினையை வளர்க்கக்கூடிய, கொடுமையான 377 போன்ற சட்டங்கள்தான் குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்று வாதாடுகிறார்கள். தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். “377 சட்டம் தான் குடும்பங்களுக்கு கேடு விளைவிக்கிறது. தனிமனித உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் இந்த சட்டப்பிரிவினால் , அரசாங்கத்திற்கு தனிமனித வாழ்வில் தலை இடுகிற, நியாயமற்ற, அபாயகரமான சக்தி இருக்கிறது. ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட குடும்பங்களுக்கு இதனால் பெரிய ஆபத்து. தேவையற்ற மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் எங்கள் குழந்தைகள் ஆட்படுத்தப்படுவதால், எங்கள் குடும்பங்களும் காயப்படுத்தப் படுகின்றன. எங்களை போன்ற குடும்பங்களின் மரியாதைக்கும், மனநிம்மதிக்கும் நேரடியாக பங்கம் விளைவிக்கிறது இந்த சட்டம்” என்கிறார்கள் இந்த பெற்றோர்கள்.
நிஷித் சரணின் தாயார் திருமதி.மின்னா சரண், இந்த குழுவிற்க்கு தலைமை வகிக்கிறார். இவரது மகன் நிஷித் திறமைவாய்ந்த ஒரு பட இயக்குனர். நிஷித் துயரகரமான ஒரு சாலை விபத்தில் இளவயதில் இறந்து போனார். ஒருபாலீர்ப்பாளரான நிஷித், தனது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்து, அதை ஏற்றுக்கொள்ள எப்படியெல்லாம் மனப்போரட்டம் மேற்க்கொள்ளவேண்டியிருந்தது என்பதை படமாக பதிவு செய்து இருந்தார். குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் தான் வெறுக்கப்படுவோமே என்ற பயமும், கவலையும் அவரை ஒவ்வொரு நாளும் வாட்டி எடுத்தது. அவரது தாயாரோ அவரை புரிந்துகொண்டு , அவருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தார். “அடுத்தவர் என்ன சொல்லுவார்” என்று கவலைப்படாமல், இந்த சமூகத்தின் எதிர்ப்பிற்கு அஞ்சாமல், தன் மகனை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட ஒரு உன்னத தாய் திருமதி.மின்னா சரண். நிஷித்தின் மறைவிற்க்கு பிறகு, அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து, மாறுப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட குழந்தைகளுக்கும் , அவரது பெற்றோர்களுக்கும் இடையே ஒரு பாலமாக, அன்பை வளர்க்கும் அன்னையாக அரிய பணியாற்றிவருகிறார் திருமதி.மின்னா சரண்.
வீணாவின் தாயார் திருமதி.முனித்தாயம்மா இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இன்னொரு தாய். வீணா ஒரு திருநங்கை. ஆணாக பிறந்த இவர், சிறுவயது முதல் தன்னை பெண்ணாக கருதியவர். பெண் குழந்தைகளை போல தன்னை அழகு படுத்திகொள்வதிலும், உடைகள் அணிவதிலும் இவருக்கு சிறுவயதிலிருந்தே இயற்கையான நாட்டம் இருந்தது. சரியான புரிதல் இல்லாததாலும், ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தாலும், முனித்தாயம்மா தனது மகனை கண்டித்து, பல சமயங்களில் அடித்து துன்புறுத்தியுமிருக்கிறார். விவரம் தெரியாத வயதிலிருந்தே இயற்கையாக தனக்கு தோன்றிய விதத்தில் நடந்து கொண்ட குழந்தையை, புரிந்து கொள்ளமால் கண்டித்ததை மிகுந்த மனவருத்தத்துடன் இந்த தாய் நினைவுகூருகிறார். தன்னை போல் இல்லாமல், பிற பெற்றோர்கள் தங்கள் திருநங்கை (மற்றும் திருநம்பி ) (Transgender) குழந்தைகளை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிற முனித்தாயம்மா, 377 சட்டப்பிரிவு அத்தகைய மனமாற்றங்களுக்கு பெரிய முட்டுக்கட்டை என்கிறார்.
திருமதி. சித்ரா பாலேகர் ஒரு விருது பெற்ற நாடக நடிகர், இயக்குனர் மற்றும் படத் தயாரிப்பாளர். இவரது மகள் ஷாமலி பாலேகர் ஒரு லெஸ்பியன். இந்த மனுவில் சித்ரா தான் ஒரு லெஸ்பியனின் தாயாக இருப்பதால், எப்படி இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உணர்கிறார் என்று விவரிக்கிறார். 377 போன்ற சட்டங்களால், இவரை போன்ற பெற்றோர்கள், மனம் திறந்து மற்றவர்களுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூட முடிவதில்லை என்பதையும், இவர் மாறுபட்ட பாலீர்ப்பை பற்றி தகவல் அறிய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதையும் பற்றியும் சொல்கிறார் இவர்.
மாற்றுப் பாலியல் குறித்த புரிதலைப் புத்தகங்கள் மூலமும் பலரை சந்திப்பதன் மூலமும் தான் பெற்றிருப்பதாகவும், இது போன்ற வாய்ப்புகள் எல்லா பெற்றோர்களுக்கும் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். சமூகத்தில் இது குறித்து நிலவும் தவறான கருத்துக்கள் அவர்களை அத்தகைய முயற்சிகளிலிருந்து தடுக்கிறது என்றும் கூறுகிறார் திருமதி. சித்ரா பாலேக்கர்.
இந்த மூன்று தாய்மார்களும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கிய பத்தொன்பது பெற்றோர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த பத்தொன்பது பெற்றோர்களும் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, பல வாழ்க்கை முறைகளிலிருந்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள், தபால் துறை பணியாளர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இந்த பெறோர்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த குழு, தீர்ப்பை எதிர்ப்பவர்களின் இன்னொரு குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்குகிறது. அது “ஒருபாலீர்ப்பு ஒரு மேலை நாட்டு இறக்குமதி, நாகரிக விரும்பிகளின் வாழ்க்கை நெறி” என்ற குற்றச்சாட்டு. தங்கள் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான 377 சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சராசரி, சாதாரண இந்தியர்கள் இந்த பெற்றோர்கள்.
மேலும் விவரங்களுக்கு: விக்ரம் டாக்டர் 98213-29037