மிரட்டல் மற்றும் பணப்பறிப்பு
நகர்ப்புறங்களிலும் சிறு நகரங்களிலும் வசிக்கும் மாற்றுப் பாலியல் கொண்ட நபர்கள் இணையதளத்தைப் பெரிதும் நம்பியிருக்கிறோம். மாற்றுப் பாலியல் கொண்டோருக்கான உதவிக் குழுக்களைக் கண்டறிந்து அணுகவும், காதல் உறவு மற்றும் உடலுறவுக்கென தங்களது துணைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் இணையதளம் பெரிதும் பயன்படுகிறது. ஆண்-பெண் உறவுகளிலிருந்து மாறுபடும் இந்த விழைவுகளையும் உறவுகளையும் ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கும் பக்குவம் இன்னமும் இல்லாத இச்சமூகத்தில் நம் பாலியல் குறித்த வெளிப்படையான உரையாடல்கள் மிகக் கடினமானவை. ஆனால் இணையதளத்தைப் பயன்படுத்தும் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் பல நேரங்களில் ச்சுறுத்தல்களுக்கும் மிரட்டிப் பணம் பறிக்கும் செயல்பாடுகளுக்கும் ஆளாகின்றனர். சென்னையிலும் மற்ற நகரங்களிலும் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்த சம்பவங்களின் ஒரு மாதிரி:
மற்றவர்களை மிரட்டிப் பணம் பறிக்க முயலும் ஒருவர் இணையதளத்தில் தன்னை ஒருபாலீர்ப்பு கொண்டவராகவோ அல்லது இருபாலீர்ப்பு கொண்டவராகவோ அறிவித்துக் கொண்டு மற்றவர்களை அணுகுகிறார். ஒருவருடன் சிறிது நேரம் உரையாடிய பின்பு, அவரை சந்திக்கத் தன் வீட்டிற்கு அழைக்கிறார். இந்தத் திட்டத்திற்கு இலக்காகிய நபர் அங்கு சென்றதும் பிரச்சனை தொடங்குகிறது. அவர் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறார். அவரிடமிருக்கும் பணம், நகை, கைக் கடிகாரம் ஆகியவை பறிக்கப்படுகின்றன. சில நேரங்களில் திடீரென்று பல கூட்டாளிகள் சூழ்ந்து கொண்டு இந்த நபரை உடல் மற்றும் மன ரீதியான வன்முறைக்கு உட்படுத்துவதும் உண்டு. அவரை அருகில் உள்ள ATM- ற்கு அழைத்துச் சென்று அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து இவர்களிடம் ஒப்படைக்கச் செய்யக் கட்டாயப்படுத்துவதும் உண்டு. தாங்கள் கூறுவதைச் செய்யாவிட்டால் இவரது குடும்பத்திடமும், இவர் பணிபுரியும் இடத்திலும், கல்லூரியிலும் இவரது ஒருபாலீர்ப்பு அல்லது இருபாலீர்ப்பு குறித்து தெரிவித்து விடுவதாக அச்சுறுத்துவதே இத்தகையோரின் முக்கிய ஆயுதம்.
சமூகம், குடும்பம், பணியிடம், கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் மாற்றுப் பாலியல் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் இல்லாமலிருப்பதையும் அத்தகைய சூழ்நிலையில் நம்முடைய பாலியல் வெளிப்பாட்டைக் குறித்த நமது பயத்தையும் இத்தகையோர் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நமது இந்த பயமும் சமூகம் மற்றும் குடும்பங்களின் சகிப்பின்மை குறித்த வேதனையும் தேவைப்படாத ஒரு உலகத்தை நோக்கிச் செல்வதே நமது பணி. எல்லோருக்கும் வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் பாதுகாப்புகளையும் இந்திய அரசு மாற்றுப்பாலியல் கொண்டவர்களுக்கும் வழங்கும் நிலையை விரைவில் கொண்டுவர முயல்வதே நம்முடைய முதன்மைப் பணி. எனினும், அது வரையில், நமக்கு இப்பொழுதுள்ள உரிமைகளையும் நம்வசம் தற்பொழுதுள்ள உதவிகளையும் கொண்டு நம்மைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்.
பலருடைய மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியிருக்கும் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட நபர்கள் பலர் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். சில நேரங்களில் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கச்செய்யும் நிலையிலும் இருந்த திரு. அனிருத்தன் வாசுதேவன், அவரது அனுபவங்களின் பின்னணியில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்.
நீங்கள் இத்தகைய சூழ்நிலையில் இருக்க நேர்ந்தால், கவனத்தில் கொள்ள வேண்டியவை:
- பரிச்சயமில்லாத நபரை முதலில் பொது இடத்தில் சந்தித்து உரையாடுங்கள். அவரைப் பற்றிய நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை குறித்து உங்கள் மனத்தில் எழும் எண்ணங்களை மதித்துக் கேளுங்கள். சிறிதளவும் சந்தேகம் இருப்பின் சந்திப்பை அந்தப் பொது இடத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது.
- பீதிக்கு உள்ளாகாதீர்கள். இணையதளம் மூலமாக வந்திருக்கும் மிரட்டல் எனின் முதலில் அதைப் பொருட்படுத்தாது இருந்து பாருங்கள். மிரட்டல்கள் தொடர்ந்தால் கீழ்கண்டவற்றை நினைவில் கொள்ளுங்கள்.
- இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 384 -ன் கீழ் மிரட்டல் பணப் றிப்பு ஆகியவை தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பதை உங்களை மிரட்டுவோருக்குத் தெரிவியுங்கள். காவல் துறையினரையோ சட்ட ரீதியான உதவியையோ நாட நீங்கள் தயங்கமாட்டீர்கள் என்பதையும் அவர்களிடம் கூறுங்கள்.
- இணையதளத்தில் உங்களுடைய புகைப்படங்களையோ உங்களைப் பற்றிய தகவல்களையோ உங்கள் அனுமதியின்றி வெளியிடுவதாக உங்களை அச்சுறுத்தினால் உங்களுடைய தனிமைக்கான உரிமையை மீறும் என்ற நிலையில் அது குற்றமாகும் என்பதையும் அவர்களுக்குக் கூறுங்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் டி.வி 9 என்ற தொலைகாட்சி நிலையம் இணையதளத்தில் இத்தகைய உரிமை மீறலை மேற்கொண்டதற்காக செய்தி ஒலிபரப்பு அளவுகோல்கள் அமைப்பின் கண்டனத்திற்கு உள்ளானது. அதன் மீது அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐக் கொண்டு மிரட்டுபவர்களுக்கு - பிரிவு 388-ன் கீழ் பத்தாண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும் என்பதையும் மாற்றுப்பாலியல் கொண்டோரை அச்சுறுத்துபவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த மிரட்டல்கள் நேரடியாக நிகழும் சூழ்நிலைகளில் அவர்கள் கேட்பதைத் தராவிடில் வன்முறைக்கு உள்ளாவீர்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், உங்களுடைய பாதுகாப்பையும் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுங்கள். இதற்குப் பின்னும் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதையும் உங்களுக்கு வேண்டிய உதவி கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். உதவிக்கு சென்னை தோஸ்த், சங்கமா – சென்னை, SWAM, சகோதரன் போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இவை மற்றும் இதர குழுக்கள் குறித்த தகவல்களுக்கு: அமைப்புகள் மற்றும் தளங்கள்
எழுத்து: அனிருத்தன் வாசுதேவன்
(c) ஓரினம். எங்கள் காப்புரிமை கொள்கையை படிக்கவும்