சிறுகதை: கட்டிப்பிடி வைத்தியம்
இன்னைக்கும் கட்டிப்புடி வைத்தியம் பண்ண வருவான்ல, எப்படியாச்சும் இன்னைக்கு அவண்ட்ட சொல்லிடனும்… ஸ்டீபன் பள்ளி வளாகத்தில் கடந்த 30 நிமிடங்களாக காத்திருக்கிறான் செந்திலின் வருகைக்காக! அவர்கள் இருவரும் அமர்ந்து மதிய உணவு உண்ணும் பூவரச மர நிழலில் காத்திருக்கிறான். விடுமுறை நாள் என்ற போதும் ஸ்டீபனும் செந்திலும் இன்று சந்திப்பதாக முன்னரே பேசி வைத்திருந்தனர்.
ஸ்டீபன் – செந்தில் இருவரும் 6ஆம் வகுப்பில் இருந்து ஒன்றாக படித்து வருகின்றனர். இந்த வருடம் 10ஆம் வகுப்பு, முதல் பொதுத் தேர்வு. அவர்கள் படிக்கும் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமையும் கூட 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு இருக்கும். இந்த வாரம் மட்டும் அதிசயமாக விடுமுறை விட்டிருந்தனர்.
அது அவர்கள் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம்…..
டேய் ஸ்டீபன், நேத்து சாய்ங்காலம் சன் டிவில புது படம் வசூல் ராஜா MBBS போட்டாங்கல, பாத்தியாடா?..
ஆமாடா பாத்தேன்.. ஏன் கேக்குற??
இல்ல அதுல ஹீரோ கமல் கட்டிப்புடி வைத்தியம் செய்வாருல..
ஆமா…
எனக்கு இப்ப டென்சனா இருக்கு.. நாம கட்டிப்புடி வைத்தியம் செஞ்சுகலமா???
தாராளமாடா?? கட்டிப்புடி வைத்தியம் செஞ்சிகிறது என்ன தப்பு?? அது நல்லது தானே??
அன்றிலிருந்து அவர்களின் கட்டிப்புடி வைத்தியம் தினந்தோறும் தொடர்ந்தது..
6ஆம் வகுப்பிலிருந்து இணைப்பிரியா நண்பர்களாக இருக்கும் ஸ்டீபனும் செந்திலும் செய்யும் அலப்பறைகள் இருக்கிறதே!! அதற்கு அளவே இருக்காது. ஒரு நாள் செந்தில் ஜனனியை காதலிக்கிறேன் என்று இவனிடன் சொன்னப் போது, போட்டியாக இவனும் தான் ரோசியை காதலிப்பதாக சொல்ல, வகுப்பில் இருந்த கருப்பு ஆடு ஒன்று கடைசியில் வகுப்பு ஆசிரியரிடம் போட்டுக் கொடுத்து விட, “ஏண்டா ஏழாங்கிளாசு படிக்கிற ஒங்களுக்கு லவ்வு கேக்குதோ” என்று சொல்லிக்கொண்டே பிரம்படி அபிசேகம் செய்ய, அது ஒரு சோக கதையாக முடிந்தது. இதில் கொடுமை என்னவென்றால் இருவருமே காதலிக்கவில்லை.. போட்டிக்கு போட்டியாக நடந்த வினையாய் முடிந்த விளையாட்டு அது.
வளர் இளம் பருவத்திற்கே உண்டான தடுமாற்றங்கள் இருவரிடமும் தென்படத் தொடங்கியத் தருணம். மஞ்சள் பத்திரிக்கைகளை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக படிப்பது, காதல் பாடல்களையும், இரவு நேர பாடல்களையும் இரசிப்பது, யாருக்கும் தெரியாமல், வீட்டில் யாருமில்லா சமயங்களில் ஃபேஷன் டிவி பார்ப்பது என்று சென்றுக் கொண்டிருந்தது அவர்கள் வாழ்க்கை. நாளாக நாளாக ஸ்டீபன் செந்தில் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள ஆரம்பித்தான்; அவனோடு அதிக நேரம் செலவிட விரும்பினான்; அவனுக்காக நிறைய செலவு செய்யத் தொடங்கினான். எப்போதும் அவனோடே இருக்க வேண்டும் என்று ஸ்டீபனுக்குத் தோன்றியது. ஒவ்வொரு முறை கட்டிப்புடி வைத்தியம் செய்யும் போது ஓர் இனம் புரியாத ஆனந்தம் ஸ்டீபன் மனதில் தோன்றியது. இதே தான் செந்திலுக்கும் தோன்றியதா என்றால் அதற்கான பதில் ஸ்டீபனிடம் இல்லை. ஆனால் செந்தில் எப்போதும் ஸ்டீபனுடனே இருந்தான்; கட்டிப்புடி வைத்தியத்தை ஸ்டீபனுக்கு தவறாமல் கொடுத்து வந்தான்.
இதோ தூரத்தில் செந்தில் வந்துக் கொண்டிருக்கிறான்.
வாரான் பாரு.. எப்ப வரச்சொன்ன எப்ப வாரான் பாரு.. வாடா ஒனக்கு இப்ப தான் 10 மணி ஆகுதா? ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தெரியுமா??
சரி சரி கோவப்படாத ஸ்டீபன்.. வீட்டுல அப்பாக்கு ஏதோ டிரான்பர் வந்திருக்காம்; அதப் பத்தி பேசிட்டு இருந்தாங்க; எங்கிட்ட இப்போ வேற ஸ்கூல் மாத்தி விட்டா நல்லாப் படிப்பியானு கேட்டாங்க, நான் மாட்டேன் இங்கயே இந்த ஸ்கூல்ல தான் படிப்பேன்னு சண்டப் போட்டேன்.. எப்படியோ என்னனமோ பேசி என்ன சம்மதிக்க வச்சுட்டாங்க.. அதான் லேட்டாயிருச்சு, நானே எவ்ளோ கடுப்புல இருக்கேனு தெரியுமா????
என்னடா இப்படி சொல்ற.. கிளாஸ் ஆரம்பிச்சி ஒரு மாசம் ஆவுது… வேற ஸ்கூல்ல இப்போ சேத்துப்பாங்கலா?? நீ பொய் தானே சொல்ற??
நான் ஏண்டா பொய் சொல்லப் போறேன்..ஏதோ அறந்தாங்கி ஸ்கூல் HM எங்க அப்பாக்கு தெரிஞ்சவராம், அவரு ஓக்கே சொல்லிட்டாராம். சொல்ல முடியாது இன்னும் ஒரு வாராத்துல கெளம்பிடுவோம்.
ஓ அப்டியா!! என்னனு தெரியல மனசு ஒரு மாதிரி இருக்கு செந்தில்…..
ஸ்டீபன் மனசு ஒரு மாதிரி இருந்தா என்னப் பண்ணனும்??…..
என்னப் பண்ணனும்?? கட்டிப்புடி வைத்தியம் பண்ணனும்..
,,,,,,…….,,,,,,,
செந்தில் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்…
என்னடா சொல்லு…
போன வாரம் தினத்தந்தி ஞாயிறு மலர்ல ஒரு செய்தி படிச்சேன்.. அமெரிக்காவுல ஆம்பளயும் ஆம்பளயும் கல்யாணம் பண்ணிக்கலாமாம்; தப்பில்லையாம். நாமளும் அந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்கிடலாமா டா?? என்ன சொல்ற??
போடா…லூசு…என்னமோ சொல்ற எனக்கு ஒன்னும் புரியல… சரி சரி எனக்கு டைம் ஆச்சு நான் கெளம்புறேன்.. பை பை….
என்றுக் கூறிய செந்தில் மீண்டும் ஒருமுறை கட்டிப்பிடி வைத்தியம் செய்து விட்டுச் சென்றான். தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக, அந்த வார இறுதியில் ஸ்டீபனுக்கு உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்கு வராத நாளில் செந்தில் மாற்றுச் சான்றிதழை வாங்கிக்கொண்டு பள்ளியை விட்டும் ஊரை விட்டும் சென்றிருந்தான்.
திங்கள் கிழமை பள்ளிக்கு வந்த ஸ்டீபன், செந்தில் பள்ளியை விட்டு சென்றதை அறிந்து, எதுவும் புரியாமல் அவர்கள் மதிய உண்ணும் பூவரச மரத்தடியில் அவர்களின் கட்டிப்பிடி வைத்திய நினைவுகளை நினைத்துக் கொண்டிருந்தான்.
இந்த சிறுகதையை முதன்முதலில் பிரான்சிஸ் ஓரினம் ஏற்பாடு செய்த ஜூன் 2019 ‘குயில்ட்’ நிகழ்ச்சியில் படித்தார்