நட்பும் சுற்றமும் மனப்பகிர்வு – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sun, 07 Apr 2013 03:55:46 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png நட்பும் சுற்றமும் மனப்பகிர்வு – ஓரினம் https://new2.orinam.net 32 32 கிருஷ்ணரைப் போல் என் மகன்! https://new2.orinam.net/ta/my-son-is-like-krishna-ta/ https://new2.orinam.net/ta/my-son-is-like-krishna-ta/#comments Sat, 03 Mar 2012 16:07:47 +0000 https://new2.orinam.net/?p=6091
Image Source: http://www.flickr.com/photos/anndewig/ (Thanks: Womesweb.in)

 

சென்னை வெய்யில் மத்தியான வேளையில் அதிகமாகவே கொளுத்திக் கொண்டு இருக்கிறது. என் மன நிலையும் அதே பொலக் கொதித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனது பெரிய பையன், தான் ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது என்றான். ஏன் என்று கேட்டதற்கு தன் ‘பாலியல்’ பற்றி ஏதேதோ சொல்கிறான். டிவி-ஐ போட்டேன். மனம் மாறுதலுக்காகவா இல்லை என்னை மறக்கவா என்று எனக்கேத் தெரியவில்லை…ஏதோ பட்டி மன்றம் நடந்து கொண்டு இருந்தது. ‘அன்பில் உயர்ந்தது, ராமனிடத்தில், அயோத்தியர் வைத்த அன்பா, அல்லது கிருஷ்ணனிடத்தில் ஆயர் பாடியர் கொண்டிருந்த அன்பா?’ என்பது பற்றி. என் மனம் மறுபடி என் மகன் பிரச்னைக்கே சென்றது….

தான் பதினைந்து வயதாகி இருந்த போதே இது தனக்கு தெரிய வந்தது என்றும், தான் மற்ற ஆண் பிள்ளைகளைப் போல் பெண்களால் ஈர்க்கப் படாமல் ஆண்களாலேயே ஈர்க்கப் பட்டதாகவும், முதலில் குழம்பிப் போனவன், பிறகு பயந்தும் போய் இருக்கிறான். பிறகு தான் நிறைய புத்தகங்களைப் படித்ததாகவும் அவை எல்லாம் இந்த மாற்றங்களைப் பற்றி அவனுக்கு புரிய வைத்ததாகவும் சொன்னான்.

நானும் அவன் தந்தையும் அவனிடம் உட்கார்ந்து பேசிப் பார்த்தோம். அவன் அப்பா, எங்கள் ஆசைக்காக நீ திருமணம் செய்து கொண்டு மறைவில் என்னவோ பண்ணித் தொலை என்று சொல்கிற அளவு போய் விட்டார். கொதித்து போய் விட்டான் என் மகன். என்னால் என்னுடைய வாழ்க்கைத் துணைக்கு அப்படிப்பட்ட துரோகத்தை பண்ண முடியாது என்று ஆக்ரோஷமாக கூறி வெளியே சென்றவன் இன்னும் வரவில்லை. மனம் கனத்தது. இவரும் ஷர்ட்டை மாட்டிக் கொண்டு வெளியே சென்று விட்டார்.

ஃபோன் ஒலித்தது. மகன் பேசுகிறான். “எப்படிம்மா?, இந்த அளவு கீழ்த்தரமாக உங்களால் நினைக்க முடியறது? அப்பா அப்படி யாரோடயாவது தொடர்பு வச்சிருந்தா நீ சகஜமா எடுத்துப்பியா?” என்றான்.

“இப்போ எதுக்குடா எங்க வாழ்க்கயைப் பத்தியெல்லாம் பேசற? நாங்க கல்யாணம் பண்ணிண்டு முப்பது வருஷம் ஆச்சு. உன்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுடான்னா…” என்று இழுத்தேன்.

“நீங்க என்னோட கல்யாணத்தைப் பத்தி உங்க எதிர்பார்ப்பை மட்டும் நினைச்சுண்டு பேசறேளே தவிர, எனக்கு அது சந்தோஷம் தருமாங்கறதைப் பத்தி யெல்லாம் உங்களுக்கு அக்கரையில்லை..”

இடைமறித்தேன், நான். “அக்கரை இல்லாமத்தான் உங்கிட்டெ மன்னாடிண்டு இருக்கோமா? என்னப் பேச்சு பேசற?” சொல்லும் போதே அழுகை வந்தது எனக்கு.

“ஆமா. நீ இப்பொ அழறதுக்காக, நான் கல்யாணம் பண்ணிண்டு வாழ்க்கையெல்லாம் அழணும் இல்லெ? அதுதான் உனக்கு சந்தோஷம். அப்போதான் உன்னோட இந்த அழுகை நிக்கும்னா நீ நன்னாவே அழும்மா.” முரட்டுத்தனமான கோபத்துடன் பேசி வைத்து விட்டான்.

எனக்குத் தெரியும். அவனுக்கு எங்களை மனம் நோக அடித்து விட்டோமே என்ற கவலை. ஆனால் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம். எல்லாம் சேர்ந்துதான் இந்த கோபம். பெற்றவளுக்குத் தெரியாதா பிள்ளையின் உணர்வுகள். சட்டென்று என் மனம் ஒரு நிமிடம் யோசிப்பதை நிறுத்தி எதோ இடறுவதை புரிந்து கொண்டேன். அப்போ… இவன் கூறுவதை, இவன் உணர்வுகளை இப்பொழுது என்னால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?.. தலை சுற்றியது. பதில் தெரியாமல்..

டிவியின், பலத்த கைதட்டல் என் கவனத்தை கலைத்தது….

கிருஷ்ணரைப் பற்றிக் கூறி கொண்டு இருந்தவர், ‘ஏலாப் பொய்கள் உரைப்பான் என்று ஆண்டாள் பாசுரம். வெண்ணை திருடியது எல்லோருக்கும் தெரியும்.. கிருஷ்ணன் காணோம் என்றால் எங்கே தேடலாம் என்றால் ஆய்ச்சியர் புடவை கொசுவத்தில் தேடலாம் என்பது ஆழ்வார் பாசுரம்… இது எல்லாம் அவனுடைய குறைகளாக ஆயர் பாடியருக்குத் தெரியவில்லை. அவன், நான் நானாகத்தான் இருப்பேன். உங்களுக்கு என் மேல் பிரியம் இருந்தால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான்.

ராமன் அப்படி இல்லை.தன்னை ஒருவர் விரும்ப, எப்படி எல்லாம் நடக்க வேண்டுமோ, அப்படி எல்லாம் நடந்து அன்பை பெற்றார். தன் பெயரைக் காத்துக் கொள்ள, ராமன், பரதனைவிட்டுக்கொடுக்கவில்லையா….மனைவியையே கர்ப்பம் என்றும் பாராமல் தவிக்கச் செய்யவில்லையா.. மறைந்து நின்று வாலியை வதம் செய்யவில்லையா…ஆனால் கிருஷ்ணனனோ மனைவிமார் பல்லாயிரமாயிரமானவரும் சந்தோஷமாக இருக்கத்தான் வைத்துக் கொண்டார்…தன் விரதமன, ‘ஆயுதம் எடுக்க மாட்டேன்’, என்பதைக்கூட, தன் அன்பரான, பீஷ்மருடைய விரதமான, ‘கிருஷ்ணரை ஆயுதம் எடுக்க வைப்பேன்’ என்பதை, தான் தோற்று நிலை நாட்டினார் அல்லவா…அதுதான் உண்மயான அன்பு. தன்னை நம்பி வந்தவர்களுக்கு, அறிந்து மட்டுமல்ல, அறியாமல் கூடத் தவறு இழைக்காமல் இருப்பதுதான் உண்மையான அன்பு…..’ என்று கூறி கொண்டு இருந்தார்.

என் மனம் மறுபடி என் மகனைப் பற்றி சிந்தித்தது. அவனும் இதைத்தானே கூறுகிறான். அவனுடைய, வாழ்க்கைத் துணக்குத் தான் உண்மையானவனாக இருக்க வேண்டும் என்கிறான். இது சரிதானே…ஆயர்பாடியருக்கு கிருஷ்ணன் மேல் இருந்த அன்பு போல் எனக்கும் அன்பு இருந்தால், நான் என் மகனை, அப்படியே, புரிந்து கொண்டுதானே நடக்க வேண்டும்..

உண்மையில், அவன் தன்னை நம்பி வரும் துணைக்கு சந்தோஷம் தருவதில், கிருஷ்ணனைப் போலவும், தன் துணைக்கு உண்மையானவனாக் இருப்பதில் ராமனாகவும் இருக்க நினைக்கிறான். அவன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம் என்றால் ஏன் மறுக்க வேண்டும்? அவன் அழுவதை, அவன் குழந்தையாக இருந்த போதே தாங்காத என் மனம் இப்பொழுது தாங்குமா?…

அவன் வாழ்வில் அவன் சந்தோஷமாக இருக்கத்தானே கல்யாணம் செய்து கொள்ளச் சொல்கிறோம். அந்த கோணத்தில் பார்த்தால் இந்த திருமணம் அர்த்தமற்றது. அவனுக்கும் சரி, அந்த பெண்ணிற்கும் சரி, பெற்றவர்கள்ளாகிய எங்களூக்கும் சரி, யாருக்குமே சந்தோஷம் தர முடியாத இந்த திருமணம் மூன்று நாட்கள்,…இல்லை இப்பொழுதெல்லாம் இரண்டு நாட்கள் உறவினருடன் கூத்தடிக்க மட்டுமே….

டிவியில் நடுவர், ஆயர் பாடியர் கிருஷ்ணன் மேல் கொண்டிருந்த அன்பே சிறந்தது… ஏன் எனில் அது கட்டுத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டது என்று கூறி முடித்தார்.

நானும், என் கவலைகளுக்கு, மகனை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்ப்பக் மனதிற்குள் கூறி, எழுந்து காஃபி போட நடந்தேன்.

கிருஷ்ணரைப் போல் என் மகன்!

]]>
https://new2.orinam.net/ta/my-son-is-like-krishna-ta/feed/ 2
எனது மகளும்,மருமகளும் – ரேகா ஷா https://new2.orinam.net/ta/my-daugther-and-daughter-in-law-ta/ https://new2.orinam.net/ta/my-daugther-and-daughter-in-law-ta/#comments Tue, 25 Oct 2011 21:46:51 +0000 https://new2.orinam.net/?p=4286 “எனக்கு அது ஒரு பெரிய அதிர்ச்சி தான்! என் குடும்பத்துலையா இது மாதிரினு என்னால நம்பக்கூட முடியலை.அந்த உண்மையை ஏத்துக்கறது ரொம்பவே கஷ்டமாக இருந்தது” பத்து வருடங்களுக்கு முன்பு தன் மகள் ஏமி ஷா நங்கை(Lesbian) என்று வெளியே வந்த நாளை நினைவுகூருகிறார் ரேகா ஷா. ஏமிக்கு பசங்களின் மேல் ஏன் அவ்வளவு நாட்டம் இருப்பதில்லை என்று அடிக்கடி வியந்தாலும், அவள் ஒரு நங்கை என்ற உண்மையை சந்திக்க ரேகாவும் அவரது கணவரும் சிறிதும் தயாராக இல்லை.

எழுபதுகளில் அமெரிக்காவில் குடிபுகுந்த மும்பையை சேர்ந்த குஜராத்தி பெண்ணான ரேகாவிற்கு, மாறுபட்ட பாலீர்ப்பை (Alternate sexuality) பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. ‘ஒருபாலீர்ப்பின் (Homosexuality) விளைவு, கல்யாணமாகாமல், காலம் முழுவதும் தனிக்கட்டையாய், குழந்தைகள் இல்லாத சோகமான வாழ்க்கை’ என்பது ரேகாவின் அனுமானம். அதனால் கவலையுற்ற ரேகா, ஏமி பசங்களை சந்தித்து பழக வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார். “எப்படியாவது மாறி, ஒரு பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகமாட்டாளானு ஒரு நப்பாசை.” ஏமி பெற்றோரின் விருப்பத்தை எதிர்க்கவில்லை, சில பசங்களை சந்தித்து ‘டேட்டு’க்கு போனார், அதில் எந்த பலனும் இல்லை. இருந்தாலும் தன்னால் ஆனா முயற்சியை செய்கிறேன் என்பதை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால் டேட்டிங்கை விருப்பமில்லாமல் தொடர்ந்தார் ஏமி. கடைசியாக ரேகாவிற்கும் அவரது கணவருக்கும் “பாலீர்ப்பு என்பது இயற்க்கை, ஒருவர் விரும்பி தேர்ந்தெடுப்பது கிடையாது. காலப்போக்கில் எல்லாம் இது மாறப்போவதில்லை” என்ற உண்மை புரிந்தது. “அதுக்கப்பறம் ஏமியை கல்யாணத்துக்கு நாங்க கட்டாயப்படுத்தலை” என்றார் ரேகா.

ரேகா ஷா (நடுவில்), அவரது மகள் ஏமி(வலது) மற்றும் மருமகள் அமாண்டா(இடது)

ஏமியின் ஒருபாலீர்ப்பை(Homosexuality) முழுவதுமாக புரிந்து கொள்வதற்கும், ஏற்ற்றுக் கொள்வதற்கும் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எடுத்தன ரேகாவிற்கும் அவரது கணவருக்கும். இந்த ஆண்டுகளில் ஏமி மிகவும் பொறுமையுடன் தனது பெற்றோர்களை கையாண்டார். ஒருபாலீர்ப்பை பற்றி அவர்களுக்கு இருந்த தவறான அனுமானங்களை ஒவ்வொன்றாக களைந்தார், நங்கைகளும்(Lesbians) நம்பிகளும்(Gays) எல்லோரையும் போல குடும்பம், குழந்தை என்று நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்பதை விளக்கிச் சொன்னார். அது போன்ற நல்ல வாழ்கையை அமைத்துக்கொண்ட புகழ்பெற்றவர்களை உதாரணமாக காட்டினார்.

ரேகா ஷா அவரது மருமகளுடன்

ரேகாவிற்க்கோ சொந்த பந்தங்களை எப்படி சமாளிப்பது என்பது பெரிய கவலை. “எங்க குடும்பம் பெருசு. இந்தியாலையும், இங்கே அமெரிக்காலயும் எங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க இருக்காங்க. ஒரு பக்கம் ஏமி எங்க பொண்ணு, அவ மேல உள்ள பாசம். இன்னொரு பக்கம் ஒருபாலீர்ப்பை ஏற்றுக்கொள்ள தயாராகாத, திறந்த மனப்பான்மை இல்லாத ஒரு சமூகம். உரலுக்கு ஒரு பக்கம் இடினா, மத்தளத்துக்கு இரண்டு பக்கம்!”.

ரேகாவும் அவரது கணவரும், தங்கள் மகள் ஏமியின் சந்தோஷத்தை எல்லாவற்றிற்கும் முன்னால் வைக்க முடிவு செய்தார்கள், மெல்ல மெல்ல அதற்கான முயற்சிகளை மேற்க்கொண்டார்கள். ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம், ஏமி ஒரு நங்கை (Lesbian) என்று சொந்தக்காரர்களிடம் சொன்னதும், பலர் அதை ஏற்றுக்கொண்டு ஆதராவாக நடந்தார்கள். இதில் இந்தியாவிலிருந்த சொந்தக்காரர்களும் அடக்கம். “உன்னோட மனத்தைரியத்தையும், ஏமி மேல நீ வெச்சிருக்கற பாசத்தையும், உன் பறந்த மனப்பான்மையும் நாங்க ரொம்பவே பாரட்டறோம் ரேகானு எல்லோரும் சொன்னாங்க” என்று சிரிக்கிறார் ரேகா. “ஒரு சிலபேர் கொஞ்சம் மோசமா நடந்துக்கிட்டாங்க. ஆனா நாங்க அதையெல்லாம் சட்டை பண்ணலை. எங்க பொண்னும்,அவ வாழ்க்கையும் தான் எங்களுக்கு முக்கியம்னு அதுல மட்டுமே நாங்க அக்கறை கட்டினோம். காலப்போக்குல முதல்ல மோசமா நடந்துக்கிட்டவங்களும் மனசுமாறி நார்மலா ஆய்டாங்க”

ஏமி இப்பொழுது அவர் வாழ்கைதுணை அமாண்டாவுடன் விர்ஜீனியாவில் வசிக்கிறார். “ஏமி தனக்கு ஏற்ற ஒரு நல்ல துணையை தேர்ந்தெடுப்பானு எனக்கு நம்பிக்கை இருந்தது. ஏமி எனக்கு அமாண்டாவை அறிமுகம் செஞ்சப்போ எனக்கு அவளை ரொம்பவே பிடிச்சு போச்சு. பின்ன ரெண்டு பேருக்கும் நிச்சயம் ஆனப்போ எனக்கு ஒரே குஷி. அமாண்டா ஒரு நல்ல மருமகள்.” இப்படி பூரிக்கும் ரேகா இப்பொழுது ஒரு மாமியார் மட்டுமல்ல பாட்டியும் கூட. “ஆ! என் பேரன் இவான் எனக்கு ரொம்ப உசத்தி. அவன் எங்க வாழ்கையை சந்தோஷத்துல நிரப்பிட்டான் போங்க! ஏமிக்கு எப்பவுமே குழந்தைங்கன்னா ரொம்ப இஷ்டம். ஏமி செயற்கை முறைல கருத்தரிச்சா, இப்போ ஏமியும் அமாண்டாவும் எல்லோரையும் போல பெற்றோர்கள். இவானுக்கு இப்போ பத்தொன்பது மாசம், நல்ல அழகா ஆரோகியமா இருக்கான். எனக்கும் என் கணவருக்கும் இவான்னா உயிர்.”

“ஒருபாலீர்பாளர்கள் மேல எந்த தவறும் இல்லை. அவர்களும் எல்லோரையும் போல மனிதர்கள் தான். கல்யாணம், குழந்தைன்னு அவங்களுக்கும் நாம எல்லா மனித உரிமைகளையும் வழங்கணும். அவர்களும் சிறந்த பெற்றோர்கள். குழந்தைங்க அன்பை தான் எதிர்பார்க்கும், அது ஆம்பளைங்க கிட்ட இருந்தா இல்ல பொம்பளைங்க கிட்ட இருந்தானு எல்லாம் குழந்தைங்க கவலைப்படறது இல்லை. என்னால இத அடிச்சு சொல்ல முடியும் ஏன்னா, நான் என் பேரன் இவானை பாக்கறேனே” என்று பாலியல் சிறுபான்மையினருக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார் ரேகா.

சம்மந்திகள் : ஏமி மற்றும் அமாண்டாவின் பெற்றோர்கள்.இடதுபுறத்திலிருந்து இரண்டாவது, திருமதி.ரேகா ஷா

சரி அவரை போன்ற பெற்றோர்களுக்கு அவரது அறிவுரை என்ன என்று கேட்டபொழுது “தயவுசெஞ்சு உங்கள் குழந்தைங்களை புரிஞ்சுகிட்டு, அன்பா, ஆதரவா இருங்க. அவங்க ஒன்னும் இயற்கைக்கு புரம்பானவங்க கிடையாது. அவங்களும் கடவுளின் படைப்புதான். நீங்களே உங்கள் குழந்தைகளை ஏத்துக்கலேனா, ஊரு உலகம் எப்படி ஏத்துக்கும்?” என்றார் ரேகா.

]]>
https://new2.orinam.net/ta/my-daugther-and-daughter-in-law-ta/feed/ 9
ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! – ப்ரியா https://new2.orinam.net/ta/my-brother-is-gay-ta2/ https://new2.orinam.net/ta/my-brother-is-gay-ta2/#comments Tue, 25 Oct 2011 21:42:57 +0000 https://new2.orinam.net/?p=4280 இன்றும் பல விஷயங்களில் பழமையை விரும்புகின்ற தென்னிந்தியாவில், பெண்கள் தங்களது உரிமைகளுக்காக குரல் குடுப்பதும், பேரணிகளில் பங்கு பெறுவதும் மிக அறிது என்றால், அதனிலும் அறிது பிற சிறுபான்மையினருக்காக பெண்கள் குரல் கொடுப்பது. இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் ப்ரியா, 2009 ஆம் ஆண்டு, தனது அண்ணன் ப்ரவீனுக்காக, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட சிறுபான்மையினரின் “சென்னை வானவில் பேரணியில்” பங்குகொண்டு குரல் எழுப்பினாள். அந்த ஆண்டுதான் முதன்முறை சென்னையில் அத்தகைய பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ப்ரியா பேரணியில் “ஒரு ஒருபாலீர்ப்புள்ளவனின் சகோதரி நான்! என் அண்ணன் அவன் என்பதில் எனக்கு பெருமை” என்ற செய்திப்பலகையை கையில் ஏந்தி நடந்த அந்த தருணம், பாலின சிறுபான்மையினர் மட்டுமல்லாது பெண்ணியம் போற்றுபவர்களும் பெருமைப்பட வேண்டிய தருணம். உலகமகாகவி சுப்ரமணிய பாரதி உயிரோடிருந்திருந்தால்

“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;”

என்று ப்ரியாவை பார்த்து பாடி, புளங்காகிதம் அடைந்திருப்பான்.

ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம் நாஸ் பவுண்டேஷன் ஐ.பி.சி 377 ஐ எதிர்த்து தொடுத்திருந்த வழக்கில் “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்று தீர்ப்பை வழங்கி, ஒருபாலீர்ப்பை குற்றமற்றதாக ஆக்கியது. சட்டமாற்றம் இன்னமும் சமூக மாற்றத்தை கொண்டுவரவில்லை. இந்தியாவில் பல இடங்களில், ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண்கள் (நம்பி/Gay), ஒருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் (நங்கை/Lebsian),இருபாலீர்ப்பாளர்கள்(ஈரர்/Bisexuals), திருநர்கள் (திருநங்கை/திருநம்பி Transgenders) இவர்களுக்கு எதிராக பல வன்முறைகளும், கொடுமைகளும் நடந்தவண்ணம் உள்ளன. சமுதாயத்தில் இவர்கள் ஒதுக்கப்படுவதும், நசுக்கப்படுவதும் மிக சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கிறது. இவர்களை ஆதரிக்கும் இவர்களது குடும்பத்தினரையும், நண்பர்களையும் கூட இந்த சமுதாயம் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆட்படுத்துகிறது. இருபது வயதான ஒரு சின்னப்பெண் இவர்களை ஆதரித்து பேரணியில் பங்குகொள்வது என்பது சாதாரண விஷயமே இல்லை. “இப்படியெல்லாம் பண்ணினா, யாரு உன்னை கல்யாணம் பண்ணுவாங்க?” – இது முற்போக்காக சிந்திக்கும் ஒவ்வொரு பெண்ணையும் மடக்கிபோடும் இந்த சமூகத்தின் கேள்வி. இதற்கெல்லாம் சிறிதும் சளரவில்லை ப்ரியா “எனக்கு அதை பத்தி கவலை இல்லை. என்னை புரிஞ்சு, மதிச்சு நடக்காதவங்க யாரும் எனக்கு வேண்டாம்!” தெளிவாக சொல்கிறாள் ப்ரியா.

பேரணியில் பங்குகொண்டது ப்ரியாவிற்கு பெருமகிழ்ச்சி. “சென்னை வானவில் விழாவில் பங்குகொண்டதில் எனக்கு ரொம்ப குஷி. என் அண்ணனை நான் எவ்வளவு ஆதரிக்கிறேன், அவன் மேல் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதை அவனுக்கும், இந்த உலகத்திற்கும் காட்டியதில் எனக்கு ரொம்பவே மனநிறைவு. இது மாதிரி சின்ன சின்ன செய்கைகள், சிறுபான்மையினரான, நமது ஒருபாலீர்ப்புள்ள குடும்பத்தினருக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், எவ்வளவு சந்தோஷத்தை தரும் என்பதையும் நாம் எல்லோரும் உணரவேண்டும்” என்கிறாள் ப்ரியா.

தனது அண்ணனின் இந்த மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்துகொள்வது என்பது ப்ரியாவிற்கு மட்டும் எளிதாக இருக்கவில்லை. “ஒருபாலீர்ப்பு என்றால் என்ன என்று கூட எனக்கு தெரியாது. பிரவீன் அம்மாவிடம் இதை பற்றி சொன்ன சில வருடங்கள் கழித்து, அம்மா என்னிடம் விஷயத்தை சொன்னாள். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது.” ஒன்றும் தெரியாது என்பதால் சும்மா இருந்துவிடவில்லை ப்ரியா, பாலீர்ப்பை பற்றி புரிந்துகொள்ள பல புத்தகங்களை படித்தாள். அதற்கு மேல் அவளுக்கிருந்த கேள்விகளை, சந்தேகங்களை அவளது அம்மா தீர்த்து வைத்தார். “முதலில் ஒருபாலீர்ப்பை மாற்ற முடியும் என்று நினைத்தேன். இது மாற்றக்கூடியது இல்லை என்று தெரிந்தவுடன், ‘ஐயோ நம் அண்ணன் கல்யாணம் செய்துகொள்ள முடியாமல் காலம் முழுவதும் தனியாக இருப்பானே!’ என்ற கவலை என்னை வாட்டியது. எனக்கும் அம்மாவுக்கும் அதற்கு மேல் யோசிக்க தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்ததெல்லாம் ஆண்-பெண் உறவுகள் மட்டும் தானே” சிரிக்கிறாள் ப்ரியா. இபோழுது பிரவின் தனக்கு ஏற்ற (ஆண்) துணையை தேர்ந்தெடுத்து கொள்வான் என்ற நம்பிக்கை ப்ரியாவிற்கு இருக்கிறது. “அது நடக்கும் பொழுது, கண்டிப்பாக அவனுக்கு என் ஆதரவு உண்டு!” என்று உறுதியாக சொல்கிறாள் ப்ரியா.

இது போன்று பாலின சிறுபான்மையினரை கூடபிறந்தவர்களாக கொண்டவர்களுக்கு, அறிவுரை சொல்லமுடியுமா என்று கேட்டபொழுது, “அறிவுரை சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கா என்று தெரியவில்லை. எனது கோரிக்கை இதுதான்: தயவுசெய்து உங்கள் கூடப்பிறந்தவர்கள் என்னசொல்ல வருகிறார்கள் என்று காது கொடுத்து கேளுங்கள். கஷ்டம் தான், இருந்தாலும் முயற்சியுங்கள், என்ன இருந்தாலும் அவர்கள் உங்கள் ரத்தம் இல்லையா?. கேட்க கேட்க, புரிதல் அதிகமாகும், புரிதலும் பொறுமையும் இருந்தால் உங்களால் முழுமனதோடு அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும். பாலீர்ப்பு என்பது ஒருவர் விரும்பி தேர்ந்தெடுப்பது அல்ல, இயற்க்கை. அதனால் தயவுசெய்து உங்கள் கூடப்பிறந்தவர்களை நேசியுங்கள், ஆதரியுங்கள். உங்களது இந்த முயற்சியால் உங்களின் குடுமத்தில் பல சந்தோஷங்களுக்கு நீங்கள் வழிவகுக்கிறீர்கள். உங்கள் முயற்சி, உங்களுக்கே இன்ப அதிர்ச்சியாக இருக்கும்” என்று முடித்தாள் ப்ரியா.

]]>
https://new2.orinam.net/ta/my-brother-is-gay-ta2/feed/ 2
என் அக்கா ஒரு லெஸ்பியன் https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/ https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/#comments Sun, 23 Oct 2011 21:37:45 +0000 https://new2.orinam.net/?p=4270 “ஆம்பளைங்க சொல்றது தான் சட்டம்னு பொதுவா நாம எல்லலரும் பாக்கற ஆணாதிக்கம் உள்ள சூழ்நிலையில தான் நானும் வளர்ந்தேன். அதனால ஒருபாலீர்ப்பு (Homosexuality) ஒரு வக்கரமான விஷயம்னு நினைச்சேன்.” என்று சொல்லும் பரத் பாலனின் அக்கா அனிதா பாலன் ஒரு நங்கை (Lesbian). அனிதா தனது மாறுபட்ட பாலீர்ப்பை (Alternate sexuality) பற்றி முதன் முதலாக வெளியே வந்தது தனது சஹோதரன் பரத்திடம் தான். நங்கை (Lesbian) என்று சொல்வதை வீட, தான் ஒரு இருபாலீர்ப்புள்ள பெண் (ஆண், பெண் இருவரிடமும் ஈர்ப்புள்ள பெண்/ Bisexual) என்று சொன்னால், பரத்திற்கு புரிந்துகொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று எண்ணி, அவனிடம் அவ்வாறு வெளியே வந்தாள் அனிதா.

பரத் தனது அக்கா அனிதாவுடன்

அப்படியும் அனிதாவின் உணர்வுகளை, அவளது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்துகொள்வது பரத்திற்கு எளிதாக இருக்கவில்லை, குழம்பினான் பரத். அனிதாவிற்கு ஏதோ மனநல குறைபாடு என்றும், அவள் மேலைநாட்டு கலாச்சாரத்தின் ஆளுமையால் புரியாமல் சொல்கிறாள் என்றும் முடிவிற்கு வந்தான். அவர்களது குடும்பம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடி புகுந்திருந்தது.

இது நடந்த பொழுது பரத்திற்கு வயது 19, அனிதாவிற்கு வயது 21. என்ன செய்வதென்று புரியவில்லை பரத்திற்கு. குழப்பம், பயம், தடுமாற்றம். “நமக்கு ஒரு விஷயம் புரியலைனா, அத பத்தி பயம் ஏற்படுது. இது மனித குணம். என் அக்காவுக்கா இப்படினு எனக்கு பெரிய அதிர்ச்சி.” நினைவுகூருகிறான் பரத். பரத் அப்பொழுது கல்லூரியின் முதல் ஆண்டில் இருந்தான். பொருத்தமாக அதேசமயம் பரத்தின் நெருங்கிய நண்பன் ஒருவனும் ஒருபாலீர்ப்புள்ள ஆண் (நம்பி/Gay) என்று அவனிடம் வெளியே வர, அனிதாவிடுமும், அவனது நண்பனிடமும் ஒருபாலீர்ப்பை (Homosexuality) பற்றி மனம் திறந்து பேசினான் பரத். பேசப்பேச அவனுக்கு இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. எந்த விஷயத்தை பற்றி பேச பல இந்திய குடும்பங்கள் தயங்குகின்றனவோ, அதை பற்றி பரத் பேச, கேட்க, பரத்திற்கு தெளிவு பிறந்தது. ஒருபாலீர்ப்பை பற்றி இருந்த பயம் விலகியது.

அதன் பிறகு அனிதா தனது அப்பாவிடம் வெளியே வந்தாள். அவர் அனிதாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். அடுத்ததாக அம்மா. அனிதா அவளது அம்மாவிடம் வெளியே வந்தபொழுது பரத் அவளுக்கு துணையாய் இருந்தான். அப்பாவை வீட சற்று பழமைவிரும்பி அம்மா. எல்லோருக்கும் கடினமான கணம் அது. அம்மாவால் அனிதாவின் ஒருபாலீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இன்றும் திணறுகிறாள். இது ஏதோ அனிதாவின் வாழ்க்கையில் ஒரு கெட்ட காலம், போக போக சரியாகி விடும் என்பது அம்மாவின் எண்ணம். “அம்மாக்கு அனிதானா உயிர். கூடிய சீக்கிரம் அம்மா அனிதாவை முழு மனசோடு ஏத்துக்குவா! எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு” என்கிறான் பரத்.

தங்களது அன்றாட வாழ்க்கையிலோ, நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்பவர்கள் வட்டாரத்திலோ, குடும்பத்திலோ, மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbians, Gays, Bisexuals, Transgenders (LGBT) ) சந்தித்திராதவர்களிடமிருந்து தான், பாலியல் சிறுபான்மையினர் மீது வெறுப்பு அதிகம் வெளிப்படுகிறது. நமக்கு தெரிந்தவர்களில் யாராவது மாறுபட்ட பாலீர்ப்போ அல்லது பாலடையாளம் கொண்டவர்களாகவோ இருந்தால் அப்படி வெறுப்பை உமிழ்வது கடினம். இது தான் பரத்தின் நம்பிக்கைக்கு ஆதாரம். “கொஞ்சம் உங்க மனச திறந்து, அவங்க என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. ரொம்ப ஒன்னும் கஷ்டம் இல்லை” என்று சிரிக்கிறான் பரத். மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் நண்பர்கள், கூடப்பிறந்தவர்கள் மற்றும் இதர குடும்பத்தினர்கள் எல்லோரம் அவர்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்பது பரத்தின் கருத்து. “நம்ம குடும்பத்துக்காக நாமதான் குரல் கொடுக்கணும். அப்படித்தான் மக்களுக்கு புரியவைக்க முடியம்” என்கிறான் பரத்.

பரத் பாலன் மற்றும் அனிதா பாலன்

மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களுக்கு சமஉரிமைகள் வழகுவது, பாரம்பரிய குடும்ப நெறிகளுக்கு புறம்பானது என்பது பலரின் வாதம். பரத் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. “பாலியல் சிறுபான்மையினரையும் சமமா, ஒண்ணா நடத்தறதை வீட எதுங்க “குடும்பநெறி”? அவங்களை வெறுக்கறதும், ஒதுக்கறதும் தானா? அவங்களை குற்றவாளிங்களா நடத்தாம சமமா நடத்தனும். எல்லோருக்கும் இருக்கற அடிப்படி மனித உரிமைகள அவங்களுக்கும் குடுக்கனும். கல்யாணம், குழந்தைகள தத்து எடுத்துக்கறது எல்லாம்.” நாளை அனிதா தான் விரும்பிய பெண்ணை வாழ்க்கை துணையாய் தேர்ந்தெடுத்தால், அவளுக்கு பரத்தின் ஆதரவு கட்டாயம் உண்டு.

அனிதா, பெரும்பாலும் காணப்படும் எதிர்பாலீர்ப்புடன் (ஆண், பெண் ஈர்ப்பு/Heterosexuality) இருந்தால் பரத்திற்கோ அவனது குடும்பத்திற்கோ இவ்வளவு பிரச்சனை இல்லை. ஏதாவது மாயம் மந்திரம் மூலம் அனிதாவை அப்படி மாற்ற முடியும் என்றால் செய்வாயா என்று பரத்திடம் கேட்டபொழுது, “கண்டிப்பா மாட்டேன். ஒருத்தரோட பாலீர்ப்பு அவங்களுக்கு இயற்கையா அமைஞ்ச விஷயம், அவங்க அடிப்படை அடையாளத்துல ஒண்னு. அதை யாராலையும், எதுவாலையும் மாத்த முடியாதுங்கறது தான் உண்மை. அப்புறம் இந்த மாதிரி மாயம், மந்திரம், மருந்துனு பேசறதால மக்களுக்கு இந்த சிறுபான்மையினர் மேல இருக்கற பயமும், சந்தேகமும், வெறுப்பும் இன்னுமும் அதிகமாகும். ஒரு உதாரணத்துக்கு சொல்றேனே, நாங்க இப்போ அமெரிக்கால இருக்கோம். என் அக்காவ வெள்ளைகாரியா மாத்தினா இங்க இருக்கறது ஈ.சீனு சொன்னா, எப்படி நான் முடியாது, அவ எப்படி இருக்களோ அதுவே நல்லது, அவ என் அக்கானு சொல்வேனோ அதுபோலத்தான். என் அக்கா ஒரு லெஸ்பியன், ஒரு நங்கை. அந்த உண்மையை அவளை நான் மனப்பூர்வமா ஏத்துக்கறேன். அவளுக்கு என் அன்பும் ஆதரவும் என்னிக்கும் உண்டு.” என்று முடித்தான் பரத்.

]]>
https://new2.orinam.net/ta/my-sister-is-a-lebsian-ta/feed/ 8
ஒருபாலீர்ப்பு: பெற்றோர்களின் கதை https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/ https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/#comments Tue, 19 Apr 2011 02:16:26 +0000 https://new2.orinam.net/?p=2311 Excerpts from Barkha Dutt’s TV Show : Being Gay : The Parents’ Story. Watch the full video in English on NDTV’s website here .
Our sincere thanks to NDTV and Bharka Dutt for presenting this amazing show.

சித்ரா பாலேகர் : என் பொண்ணு என்கிட்ட தான் ஒரு லெஸ்பியன்னு வெளியே வந்தது 1993 ஆம் ஆண்டு. அவ அப்போதான் காலேஜ் முடிச்சிருந்தா. எனக்கு அவ சொன்னதை கேட்டப்போ, ஆச்சரியமா இருந்தது. பின்னாடி அவளே எனக்கு சொன்ன மாதிரி, அவ எல்லாரையும் போல எதிர்பாலீர்ப்புள்ளவளா தான் இருப்பான்னு எனக்கு நானே முடிவு பண்ணிகிட்டேன். இந்த மாதிரி ஒரு சாத்தியம் இருக்கும்னு கூட நினைக்கலை. மத்தபடி அவ சொன்னப்போ, நான் ஒன்னும் பெரிசா அதிர்ச்சியெல்லாம் அடையலை. அவள என் முழுமனசோட ஏத்துகிட்டேன்.

சித்ரா பாலேகர்

என்னோட ஆச்சரியத்துக்கு காரணம், எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. கொஞ்சம் கொஞ்சம் அதைபத்தி சினிமால, வெளிநாட்டுக்கு போனப்போ, இது மாதிரி நேரத்துல கேட்டிருக்கேன், அவ்ளோதான். மத்தபடி என் வாழ்க்கைல, எனக்கு தெரிஞ்சவங்கள்ல, இது மாதிரி யாரும் இருக்கலை. நான் அவகிட்ட கேட்ட முதல் கேள்வி, “ஏன் இத்தனை நாளா என்கிட்ட இதை நீ சொல்லல? உனக்கு எப்போ இது தெரிஞ்சது”னு தான். அவளுக்கு ஒரு பதிமுணு, பதினாலு வயசுல தான் ஒரு லெஸ்பியன்னுதெரிஞ்சிருக்கு. ஸ்கூல்ல பொண்ணுங்க பசங்கள பத்தி, பசங்க பொண்ணுங்கள பத்தி பேசும்போது, இவளுக்கு அந்த மாதிரி ஒன்னும் பேசவோ, கேக்கவோ விருப்பம் இல்லை. ரொம்ப குழம்பியிருக்கா. அவள சுத்தி எல்லாரும், எல்லாமும் ஆண்-பெண் சமந்தப்பட்ட விஷயங்களா இருந்ததால, அவளோட இந்த ஒருபாலீர்ப்பை நினைச்சு அவ குழம்பியிருக்கா, எல்லாரையும் விட்டு ஒதுக்கப்பட்டவளா பீல் பண்ணியிருக்கா. எங்க குடும்பத்துல நாங்க எல்லாத்தையும் மனம்விட்டு பேசுவோம் , அரசியலோ, சமுதாயமோ எதை பத்தி வேணும்னா பேசுவோம். ஆனா அவ சொன்னா, “அம்மா, நாம எல்லாத்தையும் பத்தி பேசினோம். ஆனா செக்ஸ் பத்தியோ, பாலீர்ப்பு பத்தியோ பேசினதில்லை. அதுனால எனக்கு தயக்கமா இருந்தது, இதை பத்தி பேச பயமா இருந்தது”னு.

அவ ஒரு நல்ல பொண்ணு. எல்லாத்துலயும் முதல்ல வருவா. அவ என் பொண்ணுங்கறதுல எனக்கு ரொம்பவே பெருமை, பெருமிதம். அவ என்கிட்ட லெஸ்பியன்னு வெளிய வந்தப்போ நான் யோசிச்சேன் “இதுனால நம்ம பொண்ணு மேல நமக்கு இருக்கற பாசமும் , அவளால நாம அடைஞ்ச பெருமையும் குறைஞ்சு போகுமா? இல்ல மாறிடுமா?”னு. இல்லையே! உடனடியா என் மனசு திடமாச்சு, நம்ம பொண்ணு இவ. எப்படி இருந்தா என்ன, அப்படின்னு ஒரு தெளிவு.

இது கொஞ்சம் பர்சலனா விஷயம்ங்கறதுனால, சொந்தம் பந்தம், அக்கம் பக்கத்துல, யார்கிட்ட என்ன சொல்லனும்னு, இதெல்லாம் அவ முடிவிக்கே நான் விட்டுட்டேன். அவளும், அவளோட பார்ட்னரும் என்கூட, எங்க வீட்டுலதான் இரண்டு வருஷம் இருந்தாங்க. எங்க நெருங்கின சொந்தக்காரங்க, பிரெண்ட்ஸ் எல்லாம் என் பொண்ணையும், அவளோட பார்ட்னரையும் (பெண்) முழு மனசோட ஏத்துக்கிட்டாங்க.

பிந்துமாதவ் : எனக்கு ஒரு பன்னண்டு பதிமுணு வயசிருக்கும்போது நான் ஒரு “கே”னு எனக்கு தெரியவந்தது. என்னோட வெளிய வந்த கதை ரொம்பவே கஷ்டமான, வேதனையான கதை. என் காலத்துல இப்போ இருக்கற மாதிரி டி.வீ சானல்ஸ், இன்டர்நெட் இதெல்லாம் கிடையாது. நான் காலேஜ் போய், மருத்துவம் சம்மந்தமான புத்தகங்கள படிக்கற வரைக்கும் எனக்கு ஒருபாலீர்ப்பை பத்தி ஒண்ணுமே தெரியாது. அந்த வாரத்தையை கூட நான் கேட்டதில்லை. எனக்கு பசங்கமேல ஈர்ப்புனு தெரியும். ஆனா அதுக்கு ஒரு பேரு இருக்கு, என்னை மாதிரி நிறைய பசங்க இருக்காங்க இதெல்லாம் அப்போ தெரியலை. என்கூட ஸ்கூல்ல படிக்கற பசங்க எல்லாம் பொண்ணுங்கள பத்தி பேசும்போது, எனக்கு அதுல எல்லாம் பெருசா நாட்டம் இல்லை. என்னோட ஒருபாலீர்ப்பை பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாததுனால, என்னை நானே ரொம்ப கீழ்த்தரமா நினைச்சேன். நான் ஒரு தரம் கேட்டவன், பாவி, கேவலமானவன் அப்படி எல்லாம் என்னை நானே நினைச்சு வெறுத்திருக்கேன். அதனால என்னோட சுயமரியாதை சுத்தமா அழிஞ்சு போச்சு. இரண்டு மூணு தரவை தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணினேன். என்னோட இந்த பாலீர்ப்பை பத்தி என் அம்மாக்கோ, அப்பாக்கோ தெரிஞ்சு போச்சுன்னா, எங்க குடும்ப மானமே போய்டும் அப்படி எல்லாம் நினைச்சு பயந்து நடுங்குவேன். இந்த கவலைகளால படிப்புல நாட்டம் குறைஞ்சது. இன்ஜினியரிங் மூணாவது வருஷத்துல ஒரு பேப்பர் தவிர, மீதி எல்லாத்துலயும் பெயில் ஆனேன். வேலைக்கு போனபிறகு எங்க வீட்டுல கல்யாணத்துக்காக ரொம்பவே நிர்பந்தம். வேற வழி இல்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன். கல்யாணம் தோல்வியில முடிஞ்சது. ஒரே வருஷத்துல விவாகரத்து. ரொம்பவே விவகாரமான விவாகரத்து. எங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரொம்பவே மனகஷ்டம். அப்போ கூட எங்க அப்பா அம்மாகிட்ட நான் ஒரு “கே”, எனக்கு பசங்க மேல ஈர்ப்பு, இதெல்லாம் பேசமுடியலை. அப்புறம் நான் வேலை மாறி அமெரிக்கா போன பிறகு, அங்க இருக்கற என்னை போன்றவர்களுக்கான ஆதரவு நிறுவனமான “த்ரிகொன்” மூலமா என்னை மாதிரி இருக்கற பிற இந்தியர்கள சந்திச்ச அப்பறம்தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா என் வாழ்கையை பத்தி புரிய ஆரம்பிச்சது.என்னை நானே புரிஞ்சு, ஏத்துகிட்டேன். முதல்ல அமெரிக்காலேயே செட்டில் ஆய்டலாம்னு நினைச்சேன். அப்புறம் யோசிச்சப்போ, இந்த மாதிரி பயந்து, குடும்பத்தை விட்டும், நாட்டை விட்டும் ஏன் தள்ளி இருக்கணும்னு தோணிச்சு. அதனால தைரியமா இந்தியாவுக்கு திரும்பினேன்.

பிந்துமாதவ் மற்றும் அவரது அம்மா

பிந்துமாதவின் அம்மா : மாதவ் வெளியே வந்தப்போ, அவன் ஒரு “கே”, அவனுக்கு பசங்க மேல தான் ஈர்ப்புனு சொன்னப்போ, எங்க குடும்பத்துல எல்லாருக்குமே பெரிய அதிர்ச்சி. நான் உடனடியா அவன ஒரு சாமியார்கிட்ட கூட்டிகிட்டு போய் பரிகாரம் கேட்டேன். ஒண்னும் பலனில்லை. அப்புறம் ஒரு மருத்துவர போய் பாத்தோம். அவர் தெளிவா எனக்கு சொன்னாரு, ஒருபாலீர்ப்புனா என்ன, அதுக்கு என்ன அர்த்தம், அதை மாத்த முடியாதுனு எல்லாம் விவரமா சொன்னாரு. உன் பையன் மாறவேண்டியதில்லம்மா, நீதான் உன் மனச மாத்திகிட்டு அவன புரிஞ்சிக்கனும்னு சொன்னாரு. நான் கொஞ்சம், கொஞ்சமா மனசு மாறினேன். ஒருபாலீர்ப்பு பத்தின படங்களை பாத்தேன் (“மை ப்ரதர் நிகில்”,”பிலடெல்பியா”). இவனை மாதிரி நிறைய பேரு இருக்காங்கனு புரிஞ்சது.

எனக்கு மாதவ தவிர ஒரு பொண்ணும் இருக்கா. அவ கல்யாணம் முடியற வரைக்கும் யார்கிட்டயும் இதை பத்தி சொல்ல வேண்டாம், கொஞ்சம் அமைதியா இருன்னு நான் மாதவ்கிட்ட கேட்டுகிட்டேன்.  அதுக்கப்புரம், மாதவே எங்க குடும்பத்துல மத்த எல்லார்கிட்டயும் இத பத்தி சொன்னான். இன்னிக்கும் என்னால தைரியமா என் சொந்தகாரங்க கிட்ட இதை பத்தி பேசமுடியலைங்கறது தான் உண்மை.

பஞ்சாபி பாட்டி : இதபாருங்க, என் பேரன் “கே” தான். அவன் அப்படிதான், அவன் வாழ்க்கை அப்படிதான். இதை எதிர்கரவங்க, முதல்ல

பேரனும் பாட்டியும்

என்கிட்ட மோதட்டும், அப்புறம் என் பேரன்கிட்ட மோதலாம். அவங்க அவங்க வாழ்க்கைல ஆயிரம் ஓட்டை இருக்கு, அதை கவனிக்காம , அடுத்தவங்க வாழ்க்கையை பத்தி என்ன பேச்சு? அந்தகாலத்துலையே சுயம்வரம்ங்கர பேருல எல்லோருக்கும் அவங்க வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க அதிகாரம் குடுத்தாங்க. ஆதி காலத்துலேயே அது சாத்தியம்னா, இப்போ ஏன் கூடாது? சட்டம் எழுதறவங்களுக்கு என்ன தெரியும், ஒரு அம்மா, ஒரு பாட்டிக்கு என்ன உணர்ச்சி இருக்குனு? எனக்கு என் பேரன் முக்கியம். என் பேரன் அவன் இஷ்டப்படி அவன் வாழ்க்கையை வாழனும். யாரு அதுக்கு தடை போடுவாங்க, பாப்போம். அட, இதோ ஜப்பான்ல பூகம்பத்துல ஊரே அடிச்சிகிட்டு போச்சு, ஒரு நொடில வாழ்கையே மாறி போச்சு. அங்க போன உசிருல “கே” பசங்க, மத்தவங்கன்னு எதுவும் வித்தியாசம் இருக்கா? இருக்கற வரைக்கும், மனுஷங்களா அவங்க இஷ்ட்டப்படி வாழ விடுங்க! உலகத்துல எல்லாருக்கும் அவங்க இஷடப்படி வாழ உரிமை இருக்கறப்போ, என் பேரனுக்கோ, அவனை மாதிரி இருக்கற மத்த பசங்களுக்கோ மட்டும் அந்த சுதந்திரம் இருக்க கூடாதா? பையனோ, பொண்ணோ, யார அவங்க விரும்பராங்களோ அவங்களோட சந்தோஷமா இருக்கட்டுமே. அதுல தலையிட நீங்க யாரு, கேக்கறேன்!

நிதினும் அவரது அம்மாவும்

நிதினின் அம்மா : சின்ன வயசுலேர்ந்தே என் பையன் வித்தியாசமா தான் இருந்தான். பொண்ணுங்களோட தான் விளையாடுவான், பசங்க கூட விளையாட மாட்டான். எனக்கே ஒரு சந்தேகம் இருந்தது. அவன் கடைசியா என்கிட்ட அவன் ஒரு “கே”னு சொன்னப்போ, எனக்கு அதிர்ச்சி எல்லாம் ஒன்னும் இல்லை. எனக்கு தெரியும்னு சொன்னேன். உன் வாழ்க்கை, உன் இஷ்டப்படி இருப்பானு சொல்லிட்டேன். எனக்கு கொஞ்சம் கூட தயக்கம் இல்லை. அக்கம் பக்கம், சொந்தம் பந்தம் என்ன சொல்லும்னெல்லாம் நான் கவலையே படலை.  இப்போகூட எல்லார்கிட்டயும் நானே சொல்றேன், ஆமாம் என் பையன் ஒரு “கே” தான், அப்படின்னு. அப்புறம் என்னால முடிச்சவரை, அவங்களுக்கு இதபத்தி புரியவைக்கறேன். என்னதான் ஆனாலும், அவங்க நம்ம குழந்தைங்க, நம்மாளோட அன்பும் ஆதரவும் அவங்களுக்கு தேவை.

Image Source : NDTV.com

]]>
https://new2.orinam.net/ta/being-gay-parents-story-tamil/feed/ 1
பெற்றோர்கள்: 377 எங்கள் குடும்பங்களை சீர்குலைக்கிறது https://new2.orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/ https://new2.orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/#respond Tue, 08 Feb 2011 10:51:06 +0000 https://new2.orinam.net/?p=4194

பிப்ரவரி 7, 2011 : ஜூலை 2, 2009 அன்று தில்லி உயர்நீதிமன்றம், நாஸ் பவுண்டேஷன் மற்றும் தில்லி அரசாங்கம் இவர்களுக்கிடையிலான வழக்கில், “வயதுவந்த இருவரின் விருப்பதுடன் தனிமையில் நடக்கும் பால் சமந்தப்பட்ட உறவு குற்றமல்ல” என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒருபாலீர்ப்பை சட்டத்தின் பார்வையில் குற்றமற்றதாக ஆக்கியது. ஒருபாலீர்ப்பு (Homosexuality) என்றால் என்ன என்று சரியான அறிவியல் ரீதியான புரிதல் இல்லாதவர்கள், தங்களது வாழ்க்கையில் ஒருபாலீர்ப்பாலர்களை அறிந்திராத பலர், இந்த தீர்ப்பு அபாயகரமானது என்று தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதற்கு இவர்கள் கூறும் காரணம், இந்த தீர்ப்பு குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்பதாகும்.

அர்த்தமில்லாத, தவறான, குழப்பம் விளைவிக்ககூடிய இந்த எதிர்ப்பிற்கு சவாலாக உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஒருமித்த குரல் ஒன்று எழும்பி உள்ளது . அந்த குரல், பெற்றோர்களுடையது. ஆம்! ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட பெற்றோர்களின் குரல் அது. இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்து மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களின் (LGBT) பெற்றோர்களில் சிலர் ஒன்று கூடி, ஐ.பி.சி. பிரிவு 377, ஒருபாலீர்ப்பை குற்றமாக்குவதால், தங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் எத்தகைய தீமையை விளைவிக்கிறது என்று விவரித்து மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கிறார்கள். உச்ச நீதிமன்றம் பெற்றோர்களின் இந்த மனுவை பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த பெற்றோர்கள் வேற்றுமைபடுத்தக்கூடிய, பிரிவினையை வளர்க்கக்கூடிய, கொடுமையான 377 போன்ற சட்டங்கள்தான் குடும்ப அமைப்பிற்கு கேடு விளைவிக்கும் என்று வாதாடுகிறார்கள். தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் நிலைநிறுத்த வேண்டும் என்று இவர்கள் வலியுறுத்துகிறார்கள். “377 சட்டம் தான் குடும்பங்களுக்கு கேடு விளைவிக்கிறது. தனிமனித உரிமைக்கு பங்கம் விளைவிக்கும் இந்த சட்டப்பிரிவினால் , அரசாங்கத்திற்கு தனிமனித வாழ்வில் தலை இடுகிற, நியாயமற்ற, அபாயகரமான சக்தி இருக்கிறது. ஒருபாலீர்ப்பாலர்களை குழந்தைகளாக கொண்ட குடும்பங்களுக்கு இதனால் பெரிய ஆபத்து. தேவையற்ற மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் எங்கள் குழந்தைகள் ஆட்படுத்தப்படுவதால், எங்கள் குடும்பங்களும் காயப்படுத்தப் படுகின்றன. எங்களை போன்ற குடும்பங்களின் மரியாதைக்கும், மனநிம்மதிக்கும் நேரடியாக பங்கம் விளைவிக்கிறது இந்த சட்டம்” என்கிறார்கள் இந்த பெற்றோர்கள்.

நிஷித் சரணின் தாயார் திருமதி.மின்னா சரண், இந்த குழுவிற்க்கு தலைமை வகிக்கிறார். இவரது மகன் நிஷித் திறமைவாய்ந்த ஒரு பட இயக்குனர். நிஷித் துயரகரமான ஒரு சாலை விபத்தில் இளவயதில் இறந்து போனார். ஒருபாலீர்ப்பாளரான நிஷித், தனது மாறுபட்ட பாலீர்ப்பை புரிந்து, அதை ஏற்றுக்கொள்ள எப்படியெல்லாம் மனப்போரட்டம் மேற்க்கொள்ளவேண்டியிருந்தது என்பதை படமாக பதிவு செய்து இருந்தார். குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் தான் வெறுக்கப்படுவோமே என்ற பயமும், கவலையும் அவரை ஒவ்வொரு நாளும் வாட்டி எடுத்தது. அவரது தாயாரோ அவரை புரிந்துகொண்டு , அவருக்கு உறுதுணையாகவும் ஆதரவாகவும் இருந்தார். “அடுத்தவர் என்ன சொல்லுவார்” என்று கவலைப்படாமல், இந்த சமூகத்தின் எதிர்ப்பிற்கு அஞ்சாமல், தன் மகனை முழு மனதோடு ஏற்றுக்கொண்ட ஒரு உன்னத தாய் திருமதி.மின்னா சரண். நிஷித்தின் மறைவிற்க்கு பிறகு, அவரது பெயரில் ஒரு அறக்கட்டளை அமைத்து, மாறுப்பட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்ட குழந்தைகளுக்கும் , அவரது பெற்றோர்களுக்கும் இடையே ஒரு பாலமாக, அன்பை வளர்க்கும் அன்னையாக அரிய பணியாற்றிவருகிறார் திருமதி.மின்னா சரண்.

வீணாவின் தாயார் திருமதி.முனித்தாயம்மா இந்த குழுவில் இடம்பெற்றுள்ள இன்னொரு தாய். வீணா ஒரு திருநங்கை. ஆணாக பிறந்த இவர், சிறுவயது முதல் தன்னை பெண்ணாக கருதியவர். பெண் குழந்தைகளை போல தன்னை அழகு படுத்திகொள்வதிலும், உடைகள் அணிவதிலும் இவருக்கு சிறுவயதிலிருந்தே இயற்கையான நாட்டம் இருந்தது. சரியான புரிதல் இல்லாததாலும், ஊர் உலகம் என்ன சொல்லுமோ என்ற பயத்தாலும், முனித்தாயம்மா தனது மகனை கண்டித்து, பல சமயங்களில் அடித்து துன்புறுத்தியுமிருக்கிறார். விவரம் தெரியாத வயதிலிருந்தே இயற்கையாக தனக்கு தோன்றிய விதத்தில் நடந்து கொண்ட குழந்தையை, புரிந்து கொள்ளமால் கண்டித்ததை மிகுந்த மனவருத்தத்துடன் இந்த தாய் நினைவுகூருகிறார். தன்னை போல் இல்லாமல், பிற பெற்றோர்கள் தங்கள் திருநங்கை (மற்றும் திருநம்பி ) (Transgender) குழந்தைகளை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிற முனித்தாயம்மா, 377 சட்டப்பிரிவு அத்தகைய மனமாற்றங்களுக்கு பெரிய முட்டுக்கட்டை என்கிறார்.

திருமதி. சித்ரா பாலேகர் ஒரு விருது பெற்ற நாடக நடிகர், இயக்குனர் மற்றும் படத் தயாரிப்பாளர். இவரது மகள் ஷாமலி பாலேகர் ஒரு லெஸ்பியன். இந்த மனுவில் சித்ரா தான் ஒரு லெஸ்பியனின் தாயாக இருப்பதால், எப்படி இந்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு உணர்கிறார் என்று விவரிக்கிறார். 377 போன்ற சட்டங்களால், இவரை போன்ற பெற்றோர்கள், மனம் திறந்து மற்றவர்களுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளக்கூட முடிவதில்லை என்பதையும், இவர் மாறுபட்ட பாலீர்ப்பை பற்றி தகவல் அறிய எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருந்தது என்பதையும் பற்றியும் சொல்கிறார் இவர்.

மாற்றுப் பாலியல் குறித்த புரிதலைப் புத்தகங்கள் மூலமும் பலரை சந்திப்பதன் மூலமும் தான் பெற்றிருப்பதாகவும், இது போன்ற வாய்ப்புகள் எல்லா பெற்றோர்களுக்கும் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார். சமூகத்தில் இது குறித்து நிலவும் தவறான கருத்துக்கள் அவர்களை அத்தகைய முயற்சிகளிலிருந்து தடுக்கிறது என்றும் கூறுகிறார் திருமதி. சித்ரா பாலேக்கர்.

இந்த மூன்று தாய்மார்களும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கிய பத்தொன்பது பெற்றோர்கள் அடங்கிய குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த பத்தொன்பது பெற்றோர்களும் இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து, பல வாழ்க்கை முறைகளிலிருந்து வருகிறார்கள். குடும்பத் தலைவிகள், ஆசிரியர்கள், வங்கி அதிகாரிகள், தபால் துறை பணியாளர்கள் என்று பல தரப்பட்டவர்கள் இந்த பெறோர்கள். இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், இந்த குழு, தீர்ப்பை எதிர்ப்பவர்களின் இன்னொரு குற்றச்சாட்டையும் தவிடு பொடியாக்குகிறது. அது “ஒருபாலீர்ப்பு ஒரு மேலை நாட்டு இறக்குமதி, நாகரிக விரும்பிகளின் வாழ்க்கை நெறி” என்ற குற்றச்சாட்டு. தங்கள் குழந்தைகளின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான 377 சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சராசரி, சாதாரண இந்தியர்கள் இந்த பெற்றோர்கள்.

மேலும் விவரங்களுக்கு: விக்ரம் டாக்டர் 98213-29037

]]>
https://new2.orinam.net/ta/parents-say-377-destroys-famiiies-ta/feed/ 0
ஒரு தாயின் உணர்வுகள் https://new2.orinam.net/ta/my-feelings-as-a-mother-ta/ https://new2.orinam.net/ta/my-feelings-as-a-mother-ta/#comments Sun, 18 Oct 2009 13:15:22 +0000 https://new2.orinam.net/?p=3182 என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைத்த உடன் என் மனம் “ஒ! அந்த கெட்ட நாட்கள்” என்று எச்சரித்தது. என் மகன் அவன் பாலீர்ப்பை பற்றி என்னிடம் சொன்ன அந்த நாட்களை தான் “கெட்ட நாட்கள்” என்று என் மனம் நினைவுறுகிறது .

யோசித்து பார்த்தால் என்ன இது முட்டாள்தனம் என்று எனக்கே தோன்றுகிறது… ஏன்? என் மனம் ஏன் எப்படி நினைக்கிறது?. எனது இந்த கேள்விக்கு பதில் தான் இந்த கட்டுரையின் வடிவில் இங்கே…… (சற்று நீளமாக!)

இது நடந்தது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சென்னையிலிருந்தேன் என் மகன் அமெரிக்காவில் இருந்தான். என் மகன் இணையத்தில் என்னை உரையாட அழைத்து, “ஒரு பெண்ணை வாழ்கை துணையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சொன்னான். நான் அதிர்ந்து போனேன். என் குடும்பத்தின் வருங்காலமே இருண்டது போல் தோன்றியது. அவன் சில புத்தகங்களையும், இது பற்றிய சில இணைய தளங்களையும் எனக்கு அனுப்பினான், அவற்றை படித்தால் அவனது உணர்வகளை புரிந்துகொள்ள உதவும் என்றான்.

என்னால் இதை ஏற்றுகொள்ள முடியவில்லை ஆனால் அதே சமயம் நான் இதை எதிர்க்கவும் இல்லை. என்னை விட்டு தள்ளி வெகுதூரத்தில் தனியே இருப்பதால், அப்பொழுது அவனது மன நலம் எனக்கு முக்கியமாக தோன்றியது. இந்திய வரட்டும் அவனை எப்படியாவது “மாற்றி” விடலாம் என்று எண்ணினேன். என் மகனோ இது சம்பந்தமான தகவல்களை அனுப்பி கொண்டே இருந்தான், ஒரு தருணத்தில் “நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆதரிப்பேன்” என்று சொல்லிவிட்டேன், அதற்கு மேல் இதை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை.

அவனை பார்க்க அமெரிக்கா சென்றபொழுது, அவனுடன் சேர்ந்து ஒரு மனநல மருத்துவரை போய் பார்த்தேன். அவரிடம் என் மகன் மருத்துவ உதவி பெற்று மாறவேண்டும், நான் பேரன் பேத்திகளை என் மகன் மூலம் பார்க்க வேண்டும் என்கிற எனது ஆசையாய் சொன்னேன். என் மகனோ நான் அவனை புரிந்து கொண்டேன் என்று நினைத்துகொண்டிருந்தான், எனது இந்த எதிர்பார்ப்பு அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று எங்களுக்குள்ளே பெரிய விவாதம் இதை பற்றி. என்னிடம் “எல்லாம் புரிகிறது” என்று ஏன் பொய் சொன்னாய் என்று அவன் கேட்டபொழுது நான் கூனி குறுகி போனேன்.

அதற்கு பிறகு, நானே முயற்சி எடுக்க தொடங்கினேன். கலிபோர்நியா நூலகத்துக்கு சென்றேன். தன்பாலீர்ப்பு பற்றிய புத்தகங்களையும், தன் பாலீர்ப்புள்ளவர்களின் உணர்வுகள், வாழ்க்கைமுறை இதை பற்றிய புத்தகங்களையும் படித்தேன். மெதுவாக எனக்கு இதை பற்றி புரிய ஆரம்பித்தது.

நமக்கு ஏன் சில விஷயங்கள் பிடிக்கிறது, அனால் அதை போன்ற வேறு விஷயங்களில் நாட்டம் இருப்பதில்லை?. உதாரணத்திற்கு… எனக்கு பால் இனிப்புகள் பிடிக்காது. ஏன்? எனக்கு தெரியாது. ஒரு சோன்பாபடியை என்னால் சுவைக்க முடியும், அதே சமயம் விலையுயர்ந்த ஒரு பால் இனிப்பை குடுத்தால் எனக்கு அதில் விருப்பம் இருக்காது. அதுவும் இனிப்புதான்… சுவையானது தான். ஆனால் “உனக்காக இந்த விலை உயர்ந்த, தரமான பால் இனிப்பை கொண்டுவந்திருக்கிறேன் …நீ சாபிட்டால் தான் ஆயிற்று” என்று யாரவது என்னிடம் சொன்னால், “உங்கள் அன்புக்கு நன்றி, அனால் எனக்கு பால் இனிப்புகள் பிடிக்காது, எனக்கு வேண்டாம்” என்று மறுத்து விடுவேன். இனிப்பு போன்ற ஒரு சின்ன விஷயத்திலேயே என்னால் மற்றவருக்காக மாற முடியாது என்றால்…. இது ஏன் மகனின் வாழ்க்கை. அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது…. என் மகன் அவனது பாலில் உள்ள ஒருவருடன்தான் சந்தோஷமான ஒரு வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்று.

இதை ஏற்றுக்கொள்ள எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நமக்கு பிடிக்காத ஒன்றை நம் குழந்தைகள் செய்தால் நமக்கு வேதனையாக இருக்கிறது. பிடிக்காத ஒன்றை வாழ்க்கையாக ஏற்று காலம் முழுவதும் நம் குழந்தைகள் வேதனை பட வேண்டுமா? ஏன்? ஊர் உலகத்தில் நாலு பேர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவா? நாளைக்கு எனக்கு பணபிரச்சனை என்னால் கரண்ட் பில் கட்ட முடியவில்லை என்றால்.. இந்த “நாலு பேர்” வந்து கட்டுவார்களா? எனக்கு ஒரு கஷ்டம் என்றாலோ, ஒரு தேவை என்றாலோ என் மகன் தான் ஓடி வருவான். குடும்பத்திற்காக, அவனது தம்பிக்காக என் மகன் எவ்வளவோ செய்திருக்கிறான்.அவனது சந்தோசத்தை ஏன் “நாலு பேருக்காக” காவுகொடுக்க வேண்டும்?

இன்றும் என் கணவர் இதை ஏற்றுகொள்ள வில்லை, இதை எதிர்க்கிறார். அனால் காலபோக்கில் அவர் மாறுவார், நானும் என் மகனும் சேர்ந்து அந்த மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரையில் என் மகனால் முடிந்தவரை அவருடன் பேச முயற்சிக்கிறான்.
மேக்டலினின் அலுவலகத்தில் நடைபெற்ற பெற்றோர்களின் சந்திப்பில் நான் பங்கு பெற விரும்பியதை ஏன் கணவர் மிகவும் எதிர்த்தார். இது போன்ற பிரச்சனைகளை நாங்கள் ஒரு குடும்பமாக எதிர்கொள்ள தான் வேண்டும். அனால் ஊர் உலகத்திற்கும் இந்த சமுதாயத்தில் உள்ள நாலு பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

சமீபத்தில் எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சில கல்யாண சடங்குகளை செய்ய என்னை மேடைக்கு அழைத்தார்கள். உடன் என் நாத்தனார், ” உங்களுக்கு இதில் அனுபவம் இல்லையே” என்றாள். என் மகனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பதை சுட்டி காட்டினாள் அவள். “உனக்கு தான் அனுபவம் இருகிறதே, நீ போ” என்று சிரித்துக்கொண்டே மனநிறைவுடன் அவளை அனுப்பிவைத்தேன். இது நாள் வரையில் இது போன்ற விஷயங்களுக்கு என் மனம் ஏங்கியது இல்லை. என் மகனின் சந்தோசத்தை விட, இது போன்ற சடங்குகள் எனக்கு முக்கியமும் இல்லை.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு, விதவை திருமணத்தை சமுதாயம் ஏற்கவில்லை. அதை ஆதரித்தவர்கள் எதிர்ப்பையும், கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.அந்த போராட்டங்களின் பயனாக இன்று விதவை பெண்கள் ஒரு புது வாழ்வை பெற முடிகிறது. அதை போல் தன்பாலீர்புள்ளவர்களின் காதலும், திருமணமும் சமுதாயத்தால் ஒரு நாள் அங்கீகரிக்கப்படும். அதுவரையில் பலர் “நம் கலாச்சாரத்திற்கு புறம்பானது” என்று கத்தி கொண்டுதான் இருப்பார்கள். அதை சட்டை செய்யபோவதில்லை என்ற முடிவை நான் எடுத்து விட்டேன்.

என் உறவினர்களில் பலர் என் மகனின் திருமணத்தை பற்றி கேட்கிறார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் பதில் – ” கல்யாணம் நடக்கும் பொது, கண்டிப்பாக உங்களுக்கு பத்திரிகை அனுப்பப்படும்”. நான் சிறிதும் தயக்கமின்றி இப்படி சொல்ல, அவர்கள் பதிலேதும் பேசுவதில்லை. நான் தயங்கினால் உடனே எனக்கு அறிவுரை சொல்ல துவங்கிவிடுவார்கள்.

எனக்கு ஒரு நல்ல மகன் கிடைத்திருக்கிறான் என்பதில் எனக்கு ரொம்பவும் பெருமை. என் கணவர், ” ஊர் உலகம் என்ன சொல்லும்? அவன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், வேண்டுமானால் ரகசியமாக அவன் இஷ்டப்படி இருக்கட்டும்” என்று சொன்னபோது என் மகன் அதை நிராகரித்துவிட்டான். தனது வாழ்கைத்துணைக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது என்பது என் மகனின் நிலை. அந்த நேர்மையை நான் பாராட்டுகிறேன். அந்த வகையில் எனக்கு என் மகன் எனக்கு ஒரு அரிய பொக்கிஷம், அவனை இழக்க நான் தயாரில்லை. என்றும் சந்தோஷமாக, பெருமிதத்துடன் அவன் துணைநிற்பேன், அவனை ஆதரிப்பேன்.

]]>
https://new2.orinam.net/ta/my-feelings-as-a-mother-ta/feed/ 2