Harrish Iyer – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Tue, 26 May 2015 13:03:51 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png Harrish Iyer – ஓரினம் https://new2.orinam.net 32 32 நன்றி ஹரீஷ்! https://new2.orinam.net/ta/thanks-harish/ https://new2.orinam.net/ta/thanks-harish/#respond Thu, 21 May 2015 13:34:06 +0000 https://new2.orinam.net/?p=11677 குடும்பப் பெயர் வைத்து எவரையும் அழைக்கும் பழக்கம் எனக்கில்லை. அது என்  விருப்பச் சார்பு*. இந்த கட்டுரை வெளி வருவதற்குள் உங்களுக்கு எண்ணற்ற வாழ்த்துக்களும், வசவுகளும் வந்திருக்கும்.

உங்கள் அம்மாவின் விளம்பரத்தை மையமாய் வைத்து நான் எழுதுவதால் தான் உங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து தொடங்குகிறேன்! மேலும் இது தொடர்பாய் பல வலைப்பதிவுகளும், விவாதங்களும் துளிர் விட்டுள்ளது ஆரோக்கியமானதென்றே நான் கருதுகிறேன்!

இந்த பழுத்துப்போன எழுத்து கதம்பத்தினை இன்னமும் படிக்க நினைக்கும் எல்லா வாசகர்களுக்கும் நன்றி! சுருக்கமாக நடந்தவற்றை விவரிக்கிறேன். ஹரீஷ் அவரின் அன்னை அவருக்காக வரன் தேடி நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத்தார். அதில் சாதி தடையில்லை,ஆயினும் ஐயர் சாதியினருக்கு சார்பு உண்டு என வரையப்பட்டிருந்தது. அதனைப் பதிவு செய்ய பல நாளிதழ்களும் மறுத்த நிலையில் மிட் டே (Mid-Day) எனும் நாளிதழ் பிரசுரித்தது. அதன் பின் பாராட்டியும் கண்டித்தும் பல குரல்கள் எழுந்துள்ளன.

harish_matrimonial_ad

பாராட்டும் குரல்கள் 

இந்தியாவில்  முதல் முறையாக ஓர்பாலீர்ப்பு சார்ந்த வாழ்க்கைத்துணை தேடலுக்கு ஒரு குரல் கிடைத்துள்ளது.

எதிர்க்கும் குரல்கள் 

சாதி சார்பினை வெளிப்படையாய் தெரிவித்து இந்த விளம்பரம் சமூக சீர்திருத்தத்தில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உண்மை என்னவென்றால், ஹரீஷ்-க்கு சார்பான குரல்கள் தான் அதிகம் (வெறும் 6 சதவிகித இந்தியத் திருமணங்களே சாதி கலப்புத் திருமணங்கள்). பாலீர்ப்பு சிறுபான்மையினர் அடிப்படை உரிமைக்காக தோள் நின்று போராடினாலும், அவர்கள் சாதி ஒழிப்பின் முக்கியத்துவத்தினை அறியவில்லை. சாதி, பாலீர்ப்பு அரசியலின் விளிம்பிலிருந்து ஒளியாண்டுகள் (light years) பல கடந்து இருப்பதாகவே பலரும் எண்ணுகின்றனர். எனக்கென்னவோ இவை அனைத்தும் சாதியெனும் கணத்தோடு வெட்டுண்ட (intersected) பகுதிகளாகவே தெரிகிறது.

இதனை மேலும் விவரிக்க, தருமபுரியில் நடந்த சம்பவத்தினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். இளவரசன், திவ்யா இருவரும் சாதி கலப்பு திருமணம் செய்து கொள்ள, அவர்களின் கிராமத்தில் கலவரம் தொடங்கிற்று. திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொள்ளவே, குடிசை எரிப்பும், வன்முறையும் இடரின்றி தொடர்கின்றன! பின் திவ்யாவின் அன்னை தரப்பில் நீதி மன்றத்தில் மனு அளிக்கவே, ஆட்கொணர் நீதிப்பேராணை (writ of Habeus Corpus) வழங்கப்படுகிறது. திவ்யா பெற்றோருடன் செல்ல முடிவெடுக்க, இளவரசனின்  சடலம் அடுத்த நாள் மீட்கப்படுகிறது.

சாதியின் வன்மம்  மிக அதிகம்! சாதி எளிதில் மறையக்கூடிய விடயமில்லை. எல்லோருக்கும் இருக்கக்கூடிய சார்பு என்றாலும், இந்த விளம்பரத்தினை தருமபுரியோடு தரமேற்றி பார்க்காமல் என்னைப் போன்றோரல் இருக்க முடியாது!

“அதெல்லாம் சரி! சாதி எப்படிய்யா இதுக்குள்ள வந்துச்சு? என்னென்னவோ உளரிக் கொட்டுற!”, என்று நீங்கள் சொல்லலாம். பாலீர்ப்பு உரிமைகள் நிறுவப்பட்ட சமுதாயமாய் இந்தியா இருப்பதாய் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு இளவரசனும் திவ்யாவும், அமுதன் மற்றும் இளமாறனாய் இருப்பதாய் யோசித்துப் பாருங்கள்! நம் எல்லோருக்கும் அடிவயிற்றில் கொஞ்சம் நெருடல் ஏற்படுத்தும் காட்சிகள் தோன்றும்**!

சாதி சார்பு என்பது நகர தளங்களில் பழக்கம் மற்றும் வாழ்வியல் தொடர்பான சார்பாக சொல்லப்படுவதற்கு அடிப்படை இல்லாததாகவே கருதுகிறேன். குடும்ப பூசைகளிலோ, வழிபாட்டு முறைகளிலோ, விழாக்களிலோ பங்கு பெறுவதற்கான விதிகள் தன் சாதி மக்களுக்கு மட்டும் தான் இருக்கும் என்றும் மற்றவர்களுக்கு அவை விளங்காது எனவும் எண்ணுவது எந்த வகையில் நியாயம்? கற்றுக்கொள்வதற்கும், இசைந்து நடப்பதும் கடினமாக இருக்க இவை ஒன்றும் குவாண்டம் விசைவியல் (Quantum mechanics) அல்லவே?

நான் ஹரீஷ் அவர்களுக்கு நன்றி தெரிவித்த காரணம் இதுவே. அவரது விளம்பரம் மீண்டும் ஒரு பெரிய விவாதத்தினைத் தொடங்கியுள்ளது. சாதி எவ்வாறு பல தரப்பட்ட மக்களையும் பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்கான ஒரு எண்ண வெளியினை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் வைணவ மத நம்பிக்கைச் சார்ந்த மாற்று பாலீர்ப்பு அமைப்பான கால்வா (GALVA***) போன்றவற்றின் தகவு பற்றி பலரும் விவாதித்தது நினைவிற்கு வருகிறது. முகப்புத்தகத்தில் நடக்கும் எந்த விவாதமும் சமூக மாற்றத்தினை ஏற்படுத்தாது என்றாலும் அவை ஒரு சிறு தீப்பொறியினை துவக்குகின்றன.

இது போன்ற வாய்ப்புகளைப் மாற்று-பாலீர்ப்பு சமூகத்தினர் பயன்படுத்திக்கொள்வது மிகவும் அவசியம் என்று நான் எண்ணுகிறேன். ஏனெனில் சட்ட ரீதியான தடைகளை நாம் எதிர்கொண்டு வெல்ல முடியும்! சாதி ரீதியான கட்டுப்பாடுகள் சட்டத்தைக்  காட்டிலும் வலுவானவை!

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். எல்லோரும் சாதி குறிப்பிட்டிருப்பதை மையப்படுத்தி பல எண்ணங்களைப் பதிவு செய்கின்றனர். ஆயினும் பெற்றோரால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதில் உள்ள பிரச்சனையை யாரும் சொல்லவில்லை. குடும்ப அமைப்பும் திருமணமும் விதிப்ரழ்  மக்களின் (individuals who do not subscribe to hetero-patriarchy / Queer) அடிப்படை உரிமைகளை எவ்வாறு பறிக்கின்றது என்று பேசவில்லை. திருமணச் சந்தையிலிருந்து வேற்று சாதி ஆண்மகனைத் தேடினால் அது சரியா? அதுகுறித்தும் சிந்திப்போம்!

 “திருமணம் செய்வதற்கு முன்பு பொருத்தம் பார்க்கிறார்களே, அதில் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் சம தோற்றம், சம அன்பு, ஒத்த அறிவு, கல்வி ஒற்றுமை இருக்குமோ என்று கருதுவதில்லை. அதற்கு மாறாக நமது பிள்ளைக்கு அந்தப் பெண் தலைவணங்கிக் கட்டுப்பட்டு நல்ல அடிமையாக இருக்குமா என்ற கருத்தில், மாடுகளை விலைக்கு வாங்குவதற்கு என்னென்ன பொருத்தங்கள் பார்க்கிறோமோ அதையேதான் பெண்கள் பிரச்சினையிலும் பார்க்கிறார்கள். பெண்களே வீரத் தாய்மார்களாக ஆக விருப்பப்படுங்கள், நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும், மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்பழிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் “இவள் இன்னாருடைய மனைவி” என்று அழைக்கப்படாமல், “இவர் இன்னாருடைய கணவன்” என்று அழைக்கப்படவேண்டும்.”

-பெரியார்


* சாதி ஆதிக்க மனித உருவில் இது நகநுனியாய் இருந்தாலும், அகற்றப்படவேண்டிய அழுக்காகவே அதனை நான் கருதுகிறேன்! குடும்ப/சாதி பெயர் பயன்படுத்தாவிட்டால் அவர்கள் சாதியற்றவர் ஆவதில்லை. ஆயின் அவரின் சாதி அடையாளத்தினை தெரு விளக்காய் பளீரிட விரும்பா/முடியா நிலைக்கு அது ஒருவரைத் தள்ளுகிறது!

** இவை நடக்கவில்லை என்று நினைக்காதீர்கள்!  பல நங்கைக் காதலர்கள் இந்தியா முழுவதிலும் தற்கொலை செய்து கொள்கின்றனர்! அதற்க்கு பாலீர்ப்பு  மட்டும் காரணமில்லை! சாதியும் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.

***அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு ஓர்பாலீர்ப்பு (இரு ஆண்கள்) திருமணத்தைப் பற்றிய கட்டுரையில் ஒருவரின் சாதி மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு காரணமாய் பிராமண சாதியின் செயல்பாடுகள் மற்ற சாதியினருக்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளதாக அந்த அமைப்பின் மும்பை முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது! உயர் சாதிச் சலுகைப்  பற்றிய ஆழ்ந்த எண்ண  ஓட்டம் அவசியம் என்று நான் நினைக்கிறேன்.

 

]]>
https://new2.orinam.net/ta/thanks-harish/feed/ 0