IPC – ஓரினம் https://new2.orinam.net வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில் மானுடர் வேற்றுமை இல்லை. Sun, 29 Mar 2015 06:06:08 +0000 ta-IN hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://new2.orinam.net/wp-content/uploads/2024/03/cropped-imageedit_4_9441988906-32x32.png IPC – ஓரினம் https://new2.orinam.net 32 32 பிரிவு 377 குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதிக்குமா? https://new2.orinam.net/ta/reviewingoptions-tamil/ https://new2.orinam.net/ta/reviewingoptions-tamil/#respond Tue, 28 Jan 2014 06:10:39 +0000 https://new2.orinam.net/?p=9703 பிரிவு 377 குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று அனுமதிக்குமா?

Reviewing Our Options (Vikram’s piece, translated from the English by Aniruddhan Vasudevan)


இன்று, ஜனவரி 28, 2014 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் கௌஷல் Vs. நாஸ் (பிரிவு 377) வழக்கில் நீதிபதி சிங்க்வி இயற்றிய அதிர்ச்சிக்கும் வெட்கத்துக்கும் உரிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது குறித்த தனது தீர்மானத்தை வழங்க உள்ளது.

உச்ச நீதிமன்றம் தான் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எண்ணற்ற குரல்கள் இந்தியாவிலும் உலகெங்கிலும் எழுந்ததன் காரணனமாகவே இன்று மறுபரிசீலனை குறித்த மனுக்கள் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்துள்ளன. பல மக்கள் குழுக்கள், அரசியல் கட்சிகள், சமய அமைப்புகள் மட்டுமின்றி இந்திய அரசும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்துக் குரல் எழுப்பியுள்ளன. நீதிபதி சிங்க்வி அவர்களின் தீர்ப்பை வன்மையாக்க் கண்டித்து இந்திய அரசு மறுபரிசீலனைக்கான மனுவையும் தாக்கல் செய்துள்ளது.

அரசின் இந்த மனு தவிர, இந்தியாவில் மாற்றுப் பாலியல்பு கொண்டோர் (LGBTQ) சமூகமும் நமது ஆதரவாளர்களும் உச்ச நீதிமன்றத்தில் ஏழு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் குறைபாடுகளையும், அது வெளிப்படுத்தும் தவறான புரிதல்களையும், பாகுபாட்டு மனப்பான்மையையும் சுட்டிக்காட்டும் விதத்தில் இந்த மனுக்கள் அமைந்துள்ளன. (இந்த மனுக்கள் குறித்த தகவல்களும், மறுபரிசீலனை செய்யப்படும் முறை குறித்த விவரங்களும் இங்கு: https://new2.orinam.net/377/377-supreme-court-review-petition-process-explained/)

எண்ணற்ற நபர்களை ஒரே சமயத்தில் குற்றவாளிகளாக்கும் இந்தத் தீர்ப்பு விளைவிக்கக் கூடிய அபாயங்களை எடுத்துக் கூறும் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு சாட்சியங்களாக LGBTQ மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உறுதிமொழி ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எச்.ஐ.வி தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களது பணியை எவ்வாறு பாதித்துள்ளது என்றும், காவல் துறையினர் அவர்களை நடத்தும் விதத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் விவரித்துள்ளனர். மனநல நிபுணர்கள் பலர், இந்தத் தீர்ப்பு பல LGBTQ நபர்களின் மன நலனை மோசமாக பாதித்துள்ளதை எடுத்துக்காட்டி வாக்குமூலங்கள் வழங்கியுள்ளனர். இவை தவிர, மாற்றுப் பாலியல் கொண்டோரின் பெற்றோர் பலர் தங்களது குழந்தைகள் மற்ற குடும்பத்தினரிடமிருந்தும், சமூகத்தில் பிறரிடமிருந்தும் சந்திக்கும் ஒதுக்குதலையும் புறக்கணிப்பையும் விளக்கியுள்ளனர்.

மறுபரிசீலனை கோரும் இந்த மனுக்களை தீர்ப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கும் தாக்கல் செய்ய வேண்டும். இதற்காக நமது சட்டக் குழுவும் அவர்களது உதவியாளர்களும் வியக்கத்தக்க விதத்தில் செயல்பட்டுள்ளனர். சமூகத்தின் நமக்கு ஆதரவாக எழுந்துள்ள குரல்களின் வலிமையும் இதற்குக் காரணம். LGBTQ மக்களின் உரிமைகளில் பொதுவாக ஈடுபாடு இல்லாதவர்களையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வாதமும் அதன் பாரபட்ச மன நிலையும் சலிப்படையச் செய்துள்ளன. இனிவரும் நிகழ்வுகள் எப்படி இருப்பினும் ஒன்று நிச்சயம்: இந்த மோசமான தீர்ப்பின் விளைவாக நமக்குப் பலரின் ஆதரவு கிட்டியுள்ளது.

உச்ச நீதிமன்றம் நம் குரல்களைக் கேட்கும் என்றும், இந்தத் தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்கும் என்றும் நம்பிக்கை கொள்வோம். பல நீதிபதிகளைக் கொண்ட குழுவை நியமித்து நீதிமன்றம் இதனைச் செயல்படுத்தலாம். அரசியல் சட்டத்தின் சம உரிமைக்கான கோட்பாடுகளை கேள்விக்குட்படுத்தும் தீர்ப்பாக இது இருப்பதால் இதற்கு தகுந்த கவனம் அளிக்க வேண்டும் என்ற நமது எதிர்பார்ப்பு நியாயமானதே.

இந்தத் தீர்ப்பு குறித்த தவறான புரிதல் ஒன்றை நாம் நீக்கிக் கொள்ள வேண்டும். சட்ட மாற்றத்திற்கான பொறுப்பு அரசுடையது என்று கூறி பொறுப்பை அரசிடம் வழங்கும் விதத்தில் இருப்பதாக பலர் எண்ணுகின்றனர். இது தவறு. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவ்வாறு கூறவில்லை. இந்தத் தீர்ப்பினால் ஏமாற்றமடைவோர் வேண்டுமானால் நாடாளுமன்றத்தை அணுகி சட்டத்தை மாற்றக் கோரலாம் என்று அலட்சியத்துடன் கூறுகிறது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. நாடாளுமன்றத்தின் அதிகாரப் பிரிவினைகள் இன்று இருக்கும் நிலையில் இது நடக்காத காரியம் என்பது உச்ச நீதிமன்றம் அறிந்ததே. அது மட்டுமன்றி, எந்த ஒரு இந்தியனின், எந்த ஒரு சமூகக் குழுவின் (அது எவ்வளவு சிறிய குழுவாக இருப்பினும்) அடிப்படை உரிமைகளும் பெரும்பான்மை சமூகத்தால் நசுக்கப்படாமல் பாதுகாக்க வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் கடமை. அந்த முக்கியமான கடமையிலிருந்து நீதிமன்றம் தவறியுள்ளது.

நம்முடைய வாதங்கள் வலுவாக இருப்பினும் உச்ச நீதிமன்றம் பொதுவாகத் தான் வழங்கிய தீர்ப்பை மாற்றிக் கொள்ள மிகவும் தயங்கும் என்பதே உண்மை. மறுபரிசீலனைக்கான வழிமுறை ஒன்று உள்ளது. எனினும், மிக அரிதான தருணங்களிலேயே அது ஏற்றுக்கொள்ளப் படுகிறது. தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளை அவர்கள் வழங்கிய தீர்ப்பு தவறானது என்றும், அதைக் குறித்து மீண்டும் சிந்திக்க வேண்டியது அவசியம் என்றும் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும். அது எளிதான காரியமல்ல.

இந்தத் தீர்ப்பைப் பொறுத்த வரை, அதனை இயற்றிய நீதிபதி சிங்க்வி அவர்க்ளின் பணிக்காலம் முடிந்துவிட்ட்து. அவரது இட்த்தில் நீதிபதி தத்து அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளார். நீதிபதி சிங்க்வி அவர்களுடன் இணைந்து தீர்ப்பு வழங்கிய நீதிபது முகோபாத்யாய் அவர்களுடன் இணைந்து நீதிபதி தத்து அவர்கள் மறுபரிசீலனை கோரும் மனுக்களை பரிசீலிப்பார்.
நீதிமன்றத்தில் வெளிப்படையாக இந்த மனுக்கள் கேட்கப்பட வேண்டும் என்று நாம் விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அது மறுக்கப்பட்டது. இன்று, செவ்வாய், 28 ஜனவரி 2014 அன்று மதியம் 12 மணியளவில் நடுவர்களது தனியறையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்படும். மாலை 6.30 மணியளவில் அவர்களுடைய முடிவு அறிவிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வலையேற்றம் செய்யப்படும். அந்த முடிவைப் பொறுத்து நமது பதிலும் செயல்பாடும் அமையும்.

மறுபரிசீலனைக்கான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் வழங்கப்பட்ட தீர்ப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்பதே நமது எதிர்பார்ப்பு. அவ்வாறு நிகழ்ந்தால் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்காட நாம் தயாராக வேண்டும். ஆனால் இம்முறை நமக்குக் கிட்டியுள்ள ஆதரவின் பலத்துடன்.

இன்னொரு சாத்தியம்: தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆனால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்படாமல் போகலாம். அப்படி நிகழ்ந்தால் நமது பணி சற்று கடினமாகும். உச்ச நீதுமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக ஏற்படும் விளைவுகள் அனைத்தையும் நாம் மிகுந்த அக்கறையுடன் ஆவணப்படுத்த வேண்டும்.
ஒருவேளை நீதிபதிகள் வழங்கப்பட்ட தீர்ப்பின் அ நீதியை உணர்ந்து அதனை தள்ளுபடி செய்யலாம். நீங்கள் கடவுள் நம்ப்பிக்கைக் கொண்டவரெனின் இவ்வாறு நிகழ வேண்டிக்கொள்ளுங்கள்!

மறுபரிசீலனை கோரும் மனுக்கள் முழுதுமாக நிராகரிக்கவும் படலாம். மீண்டும் விவாதங்களைத் தொடங்கி வழக்கை முழுமையாக நட்த்த்த் தயங்கலாம். அவர்கள் சமூகத்தில் எழுந்துள்ள கருத்து மாற்றங்களைப் பொருட்படுத்தாது போகலாம். கடைசியாக, இந்த நீதிபதிகளும் பாரபட்ச மனநிலை கொண்டவர்களாக இருக்கலாம்.
அப்படி நிகழ்ந்தாலும் அது நமது பயணத்தின் முடிவு அன்று. மேற்கொண்டு ஒரு மனுவைத் தாக்கல் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அது ஒரு தனி நபருடைய மனுவாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினால் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தன்னுடைய வாதத்தை முன்வைக்க வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதாகவும் கூறி ஒரு தனி நபர் மனு தாக்கல் செய்யலாம். இத்தகைய மனுவும் மிக அரிதாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதற்கான சாத்தியங்கள் இருப்பினும் இதை யார் தாக்கல் செய்யலாம் என்ற முடிவை நாம் மிக கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். மிக வலுவான வாதங்களை முன்வைக்கும் மனுவாக அது இருக்க வேண்டும்.

இவை அனைத்தையும் தாண்டி பொதுச் சமூகம் இருக்கிறது. அங்கிருந்து நமக்குக் கிடைத்துள்ள ஆதரவை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் நாம் நம்பிக்கை கொள்வோம். குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு நமக்குக் கிடைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. முற்போக்கு சிந்தனையுள்ள சமயக் குழுக்கள் மற்றும் தலைவர்கள் தெரிவித்துள்ள ஆதரவும் தெம்பளிக்கிறது. அதுவரை LGBTQ விஷயத்தில் ஆர்வம் கொண்டிராத அரசியல் தலைவர்களும் தனியார் அமைப்புகளும் வெளிப்படுத்தியுள்ள ஆதரவு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நம்மை “மிகச் சிறிய சிறுபான்மைக் குழு” என்று விவரித்ததைப் பொய்க்கச் செய்கிறது.

இந்த ஆதரவுகளை உள்வாங்கிக் கொண்டு நாம் இன்னமும் வலுவடைய வேண்டும். நம்மை எதிர்ப்பவர்கள் நம்புவது போல் நாம் இயற்கைக்குப் புறம்பான்வர்கள் அல்ல என்றும், நாமும் பிறரைப் போல் இந்தியர்களே என்றும், நமக்கும் சம உரிமைகள் பெறத் தகுதி உண்டு என்பதையும் நிச்சயம் நிலை நாட்டுவோம்.

இது நடக்கும் என்ற நம்பிக்கை நம்மில் இருக்கிறது. வேறு இடங்களில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது வரலாற்று உண்மை. அமெரிக்காவில் 1986ல் Bowers vs.Hardwick என்ற வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒருபாலீர்ப்பாளர்களைப் பாரபட்சமாக நடத்துவது சட்டப்படி குற்றமல்ல என்று அறிவித்தது. ஆனால், 17 ஆண்டுகள் கழித்து அந்த நீதிமன்றம் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. அந்த ஆண்டுகளில் சமூகம் மாற்றமடைந்திருந்தது. அதனை ஒட்டி நீதிமன்றமும் தன் நிலையை மாற்றிக் கொண்டது.

இன்று இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திற்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியுள்ளது. நீதிக்காக நம்மை காத்திருக்கச் செய்யாமல் தன்னுடைய நிலைப்பாட்டை அது மாற்றிக் கொள்ளும் என்று நம்புவோம். அவ்வாறு நிகழவில்லை எனினும் விரைவில் அது சமூகத்தின் மாற்றத்தையொட்டி தன் நிலையைத் திருத்திக்கொள்ளும் என்று நம்புவோம்.


மேலும் விவரங்களுக்கு: https://new2.orinam.net/377/377-supreme-court-review-petition-process-explained/
 and http://377.orinam.net

Original piece is at https://new2.orinam.net/reviewing-our-options/

]]>
https://new2.orinam.net/ta/reviewingoptions-tamil/feed/ 0