வேலு வெளியே வந்த கதை
என் பாலுணர்வை வெளிபடுத்துவதற்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே நான் அதற்கான களத்தை தயார் செய்ய துடங்கிவிட்டேன் . அமெரிக்காவிலிருந்து அக்காவுடன் தொலைபேசியில் உரையாடும்போதெல்லாம் எனக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்பதற்கான குறிகளை காட்டினேன். முதலில் நான் கதை சொல்கிறேன், இப்படி சொல்லி விட்டு அவளுக்கு முன்னதாகவே நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அக்கா என்னை கேலிசெய்வாள் (அன்றிலிருந்து சில மாதத்தில் அவள் திருமணம் நடந்தது). கல்லூரி நாட்களில் எனது வகுப்பு தோழியுடன் நான் அதிக நேரம் செலவழிப்பதை பார்த்து என் அப்பா கூட சந்தேகப்பட்டார் என்று சொல்லி சிரிப்பாள் அக்கா. ( என் தோழி வீட்டிற்கு வரும்போதெல்லாம் அப்பாவின் முகத்தில் தெரியும் சந்தேகத்தையும், கடுப்பையும் வேடிக்கை பார்ப்பதில் எனக்கு ஒரே குஷி) . அனால் நான் சொல்லும் விஷயங்களை வெறும் வேடிக்கையாக மட்டும் அக்கா எடுத்துக்கொள்ள கூடாது என்பதில் நான் கருத்தாக இருந்தேன். அதனால் அவ்வப்பொழுது அவளுக்கு எனது எண்ணத்தை மறைமுகமாக தெரிவித்துகொண்டிருந்தேன்.
போன வருடம் அவள் திருமணத்திற்காக நான் இந்திய சென்றிருந்த பொழுது அக்கா தன் புலன் விசாரணையை துவங்கினாள்.பெண்கள் விவரமானவர்கள் ( பக்கா சாமர்த்தியசாலிகள், நம்புங்கள்) . நான் பேசுவதை வைத்தே என்னமோ விஷயம் இருக்கிறது என்று கண்டுபிடித்தவள் , என்ன பிரச்சனை என்று என்னிடம் கேட்டாள். அவள் வலை விரிக்க, நான் விழ காத்திருக்கும் மீனாய் அதில் விழுந்தேன். முதலில் எனக்கு கல்யாண சுமை வேண்டாம் நான் சுதந்திர பறவையாக இருக்க விரும்புகிறேன் என்று சால்சாப்பு சொன்னேன். அனால் அக்கா அதை நம்பவில்லை. என்னை கண்ணனுக்கு கண் பார்த்து அவள் கேட்டபொழுது என்னால் பொய் சொல்ல முடியவில்லை. அந்த நொடியிலேயே அக்காவிடம் மனம் திறந்து பேசவேண்டும் என்று துடித்தது என் மனம். அடக்கிகொண்டேன், நேரம் வரும்பொழுது இதை பற்றி விவரமாக சொல்கிறேன் என்றேன். அக்காவும் அதற்கு மேல் என்னை தொந்தரவு செய்யவில்லை. நான் சந்தோஷமாக இருக்க வேண்டும், அது தான் முக்கியம் என்றாள்.
இதேசமயம் அமெரிக்காவிலிருந்து என் காதலன், அடிக்கடி என்னுடன் பேசுவதற்காக என் அக்காவின் தொலைபேசியை தொடர்புகொண்டான். (என்னிடம் தனியே தொலைபேசி இல்லை, நான் இந்தியாவிலிருந்த நேரத்தில் அக்காவின் தொலைபேசியை உபயோகப்படுத்தி கொண்டிருந்தேன்) . என்னடா இது.. வேலை மெனக்கெட்டு இவ்வளவு தூரத்திலிருந்து , பணம் செலவழித்து ஒரு நண்பன் இத்தனை முறை தொடர்பு கொள்கிறானே என்று அக்காவுக்கு ஒரே சந்தேகம்! நடக்கிறதை வைத்து அக்கா தானாகவே விஷயத்தை யூகிக்க மாட்டாளா என்பது என் எண்ணம். (அக்காவும் சரியாகவே யூகித்தாள் என்று பின்பு எனக்கு தெரிய வந்தது).இந்த கண்ணாமூச்சிக்குப் பிறகு நான் அமெரிக்கா திரும்பினேன்.
சில மாதங்களுக்குப் பின்பு, ஒரு நாள் விடியற்காலை நான் ஆய்வுக்கூடத்தில் வேலையை முடித்துவிட்டு கண்ணசர தயாரானேன். அக்காவுக்கு ஒரு ஹலோ சொல்லலாம் என்று தொலைபேசியில் அழைத்தேன். சாதரணமாக பேசி கொண்டிருந்தவள் திடீரென்று ” நீ நேரம் வரும்போது சொல்கிறேன் என்று சொன்னயே, அந்த விஷயத்தை இப்பொழுது சொல்லு, என்ன பிரச்னை? எந்த விஷயம் உன்னை தொந்தரவு செய்கிறது? ” என்றாள். அப்பொழுது என் பெற்றோர்களும் வீட்டில் இல்லாததால் அவளால் தயக்கமின்றி பேச முடிந்தது, என்னையும் மனம்திறந்து பேசச் சொன்னாள் அக்கா.
நான் என்ன சொல்லபோகிறேன் என்று அவளுக்கு ஒரு அனுமானம் இருக்கிறதா என்று முதலில் கேட்டேன். “ஓரளவிற்கு இருக்கிறது அனால் தப்பாக யூகித்துவிடக்குடாது என்பதால் நீயே சொல்லு” என்றவள் என்ன விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை, அது அவளுக்கு என் மேல் இருக்கும் அன்பை எள்ளளவும் மாற்றாது என்று உறுதியளித்தாள்.
நான் மெதுவாக ஒரு முன்னுரையுடன் ஆரம்பித்தேன்,
“தயவுசெய்து என்னை பொறுமையாக கேளு, உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் தயங்காமல் கேளு, நான் சொல்லப்போகும் விஷயத்தால் நீ என்னை வெறுக்க மாட்டாய் என்று நம்புகிறேன், உனக்கும் நான் சொல்லப்போகும் விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை அதனால் எந்த குற்றவுணற்சிக்கும் உன்னை ஆளாக்கிக் கொள்ளாதே, தயவுசெய்து தொலைபேசி தொடர்பை துண்டித்து விடாதே.”
பின்பு தொடர்ந்தேன் ” எனக்கு பெண்கள் மேல் எந்த ஈர்ப்பும் இல்லை, ஆண்கள் மேல் தான். அதனால் என் வாழ்க்கை துணையாக ஒரு ஆணை தான் என்னால் கற்பனை செய்ய முடிகிறது, பெண்ணை அல்ல” என்றேன். ஆச்சரியத்திலும் ஆச்சரியம், நான் சொன்னதை மிகவும் எளிதாக, சாதரணமாக எடுத்துக்கொண்டாள் அக்கா. பின்பு கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள். நான் ஏன் இப்படி உணர்கிறேன்?, எனக்கு இருக்கும் இந்த ஈர்ப்பு நிரந்தரமானதா? நான் நன்றாக யோசித்து பார்த்து தான் சொல்கிறேனா…ஏனென்றால் என்னிடம் எந்த வித்தியாசமும் அவளுக்கு இது வரை தெரிந்ததில்லையே என்றெல்லாம் கேட்டாள். பின்பு யாரேனும் என்னை கட்டாயப்படுத்துகிறார்களா, அமெரிக்கா சென்றால்தான் நான் இப்படி மாறிவிட்டேனா, என் வளர்ப்பில் ஏதேனும் குறையா என்றும் கேட்டாள்.
நான் பொறுமையாக அதேசமயம் மன உறுதியோடு அவளது எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். அதை கேட்டு “நல்ல விவரமாதான் பதில் சொல்ற போ” என்று அக்கா என்னை கேலி செய்தாள். நான் சொன்ன விளக்கங்கள் அறிவுப்பூர்வமாக அவளுக்கு புரிந்தாலும் இந்த விஷயத்தை உடனே ஜீரணித்து கொள்ளமுடியவில்லை என்றாள். எக்காரணம் கொண்டும் அப்பா அம்மாவிடம் இதை பற்றி சொல்லாதே அவர்களால் இதை தாங்க முடியாது என்றும் என்னை எச்சரித்தாள்.
என் அக்கா என்னை ஏற்றுகொண்டாள் , எனது இந்த தன் பால் ஈர்ப்பால் அவளக்கு என் மேல் இருக்கும் அன்பு மாறவில்லை என்பது என்னை சந்தோஷப்படுத்தினாலும் , என் பெற்றோரிடம் இதை சொல்ல வேண்டாம் என்று சொன்னது எனக்கு கஷ்டமாக இருந்தது.
எல்லா பிரச்சனைகளுக்கும் காலம் தான் சிறந்த மருந்து என்பது மிகவும் சரி. அதற்கு பிறகு நானும் அக்காவும் இந்த விஷயத்தை பற்றி அடிக்கடி பேசினோம். மேலும், அவள் தன் பால் ஈர்ப்புள்ள என் நண்பன் ஒருவனின் சகோதரியிடமும் பேசினாள். பின்பு என் காதலனிடமும் பேசியவள் எனக்காக மிகவும் சந்தோஷ பட்டாள் . இவை எல்லாம் அவளுக்கு என் மாறுபட்ட பாலுணர்வை ஏற்றுகொள்ள உதவியது. எனது அடுத்த பிறந்தநாளுக்கு எனக்கும் என் காதலனுக்கும் சேர்த்து உடைகள் வாங்கி இருப்பதாக சொன்னாள் அக்கா . எனக்கு எப்பொழுது அவைகளை பார்போம் என்று இருக்கிறது. போன வாரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது, எங்கள் பெற்றோர்கள் என் கல்யாண பேச்சை எடுக்கும் பொழுது அவர்களிடம் என் தன்பால் ஈர்ப்பை பற்றி சொல்லலாம் என்றும் சொன்னாள். அதை கேட்டதிலிருந்து எனக்கு அளவு கடந்த ஆனந்தம்!
i am also a gay.after reading this,i got happy bcause i am felling alone.very nice velu.me too try to let know the thing to my family.