நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன்
தமிழாக்கம்: அனிருத்தன் வாசுதேவன்
பாலியல் குறித்தப் பயிற்சிப் பட்டறைகளை நான் ஏன் நடத்துகிறேன் என்று என் அம்மா என்னிடம் அடிக்கடிக் கேட்பதுண்டு. எப்படி உடலுறவு கொள்ள வேண்டும் என்பதில் நான் மற்றவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேனோ என்பதே அவருடைய கவலை. அது அத்தனை நல்ல யோசனை அல்ல என்று பெண்ணியவாதியான தன் மகளிடம் எப்படிக் கூறுவது என்று அவருக்குப் புரியவில்லை. நான் பாலினம் மற்றும் பாலியல்பு குறித்த பணியில் ஈடுபட்டுள்ளேன் என்று வெளியில் சொல்ல என் பெற்றோர்களுக்கு வெகு காலம் மிகவும் தயக்கமாக இருந்தது. என்னைப் பற்றி ஏற்கனவே குறைவாக இருந்த மற்றவர்களுடைய மதிப்பீடு இன்னும் சீரழிந்துவிடும் என்று அஞ்சினார்களோ என்னவோ. நான் ஒரு “ஆலோசகர்” என்று சொல்வது பாதுகாப்பாகப் பட்டது. ஏனெனில், ஆலோசகர்கள் பல துறைகளில் இருக்கிறார்கள். விருந்துகளிலும் ‘பார்ட்டி’களிலும் நிகழும் உரையாடல்களின் பொழுது நான் பாலினம் மற்றும் பாலியல்பு குறித்துப் பணிபுரிகிறேன் என்று பகிர்ந்து கொள்ளும் பொழுது ஒரு அமைதி சூழ்ந்துகொள்ளும். பொதுவிடத்தில் பாலியல் என்பது குறிப்பிடப்படுவதை எப்படிக் கையாள்வது என்று ஒருவருக்கும் புரிவதில்லை.
நான் ஏன் இந்தப் பணியைச் செய்கிறேன் என்று நீங்கள் கேட்க நேர்ந்தால் என்னுடைய பதில் இதுவே: பாலியல்பு, பாலினம் குறித்த விஷயங்கள் வெளிப்படையாக, உரக்க விவாதிக்கப்படுவதற்கான இடங்களை உருவாக்குவதற்காகவே நான் இந்தப் பணியைச் செய்கிறேன். இந்த விஷயங்களில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அவை கண்டிப்பாகப் பேசப்பட வேண்டும். இவை குறித்து நிலவும் அமைதியை நம்ப முடியவில்லை. நான் வளர்ந்த வருடங்களில் இந்த அமைதியும் வளர்ந்து வருவதை நான் கவனித்திருக்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் பொழுது, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் அவர்கள் நினைத்த சமயத்தில், நினைத்த இடத்தில், அதுவும் நின்றுகொண்டே கையில் எடுத்து சிறுநீர் கழிக்க ஏதுவான உறுப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. சிறுமிகள் மட்டும் ஏன் மறைவான இடங்களைச் தேடிச் சென்று அமர்ந்து யாரும் பார்க்கிறார்களா என்று உறுதி செய்து கொண்டு பின் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது என்று யோசித்திருக்கிறேன். இவை ஆச்சரியத்திற்கரிய வடிவமைப்புகளாக இருப்பதாகவும் அவை அப்படி வேலை செய்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் நான் ஆசைப்பட்டேன். ஆனால் அப்பொழுது கண்டிப்பாக இது பேசக்கூடிய விஷயம் அல்ல. இடைக்குக் கீழும், தொடைக்கு மேலும் உள்ள விஷயங்களை ஒரு தீவிர அமைதியும் இருளும் சூழ்ந்திருந்தன.
பின்னர், எனக்கு வந்திருப்பது புற்று நோய் அல்ல என்றும் எனக்கு ஏற்படத் தொடங்கியிருக்கும் இரத்தக் கசிவு என் உடல் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது என்றும் புரிந்து கொண்டு நான் உள்ளாகியிருந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டேன். பல பெண்களுக்கு மாதவிடாய் குறித்து ஒன்றும் சொல்லப்படுவதில்லை என்று எனக்கு அப்பொழுது தான் தோன்றியது. அது என்னவாக இருக்கலாம் என்று எல்லோரும் யூகிக்க முயல்கிறார்கள். ஆனால் பெண்ணுடலில் இது நிகழ்கிறது என்ற உண்மையை மறைக்க அவளைச் சுற்றியுள்ள எல்லோரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். கடைக்காரர்கள் சுகாதாரத் துணியை செய்தித்தாளில் சுற்றி கவனமாகக் கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைக்கிறார்கள். மற்ற பொருட்களை அலட்சியமாக வெள்ளைநிறப் பையில் போட்டு வாடிக்கையாளரிடம் தரும் பொழுது இதனை மட்டும் ஏன் மனிதர்கள் கண் பார்வையிலிருந்து பாதுகாக்க வேண்டும்? 1980-களில் தான் மாதவிடாய் குறித்துப் பேசுவது தவறாகக் கருதப்பட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இன்றும் இளம் பெண்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரிவதில்லை என்பதைப் பார்க்கும் பொழுது அதிர்ச்சி அடைகிறேன். முற்போக்கான பெற்றோர்களை உடையவர்களைப் பற்றி நான் பேசவில்லை. அப்படி அல்லாதவர்களைப் பற்றிச் சொல்கிறேன். அடைப்புப் பங்சுச் சுருளைப் (Tampon) பற்றி இந்தியாவில் பலர் பேசுவது கூடக் கிடையாது. ஏனெனில், அதைப் பயன்படுத்தினால் யோனிச்சவ்வில் (Hymen) துளைவு ஏற்படலாம் என்ற முற்றிலும் தவறான கருத்து நிலவுகிறது. கன்னித்தன்மை இழந்த பெண்கள் நாட்டில் உலவுவது
சரியாகுமா! மற்றவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் என்ற சந்தை இதனால் பாதிக்கப்படும் அல்லவா! தினசரி செயல்பாடுகளினாலும், சைக்கிளில் பயணிப்பது, தீவிரமான உடற்பயிற்சிகள் செய்வது ஆகியவற்றினாலும் யோனிச்சவ்வில் (Hymen) கிழிவு ஏற்படலாம் என்ற புரிதல் சிறிதும் இல்லை.
ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கியவுடன் அவளுடைய உடல் செழிப்பாக இருக்கிறது என்பது கண்டு கொள்ளப்படுகிறது. உடனே, அதைப் பாதுகாப்பதற்கும் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்குமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான விளக்கங்கள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. பெண்கள் மட்டுமே இருக்கும் இடங்களில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆண்களைப் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படுகிறது. அவர்கள் இரவில் தனியாக செல்லக் கூடாது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பிரசங்கங்களில் எங்குமே எத்தகைய செயல்பாடு கர்ப்பத்தை விளைவிக்கும் என்று தெளிவாகக் கூறப்படுவதில்லை. கர்ர்பமடைவது குறித்த அச்சமூட்டும் கதைகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. ஒரு ஆணைப் பார்ப்பதினாலும் அவனைத் தொடுவாதாலும் கூட கர்ப்பமடையலாம் என்றெல்லாம் பெண்களுக்குக் கூறப்படுகிறது. என் ஆண் நண்பனின் கழுத்தில் முத்தமிட்டால் நான் கர்ப்பமடைவேன் என்றும் என் அம்மாவிற்கு அது உடனடியாகத் தெரியவரும் என்றும் நான் நம்பினேன். என் பள்ளிக்கூடத்தில் ஒரு நாள் மருந்து நிறுவனமான ஜான்சன் & ஜான்சனைச் சேர்ந்தவர்கள் வந்து ஒரு விளக்கப்படத்தைத் திரையிட்டனர். நாங்கள் இனி சிறுமிகள் அல்ல என்றும், “பெண்கள்” ஆகிவிட்டோம் என்றும் அது எங்களுக்கு அறிவித்தது. மிகவும் சுற்றிவளைத்தும் உணர்ச்சிகளற்றும் இருந்த அந்தத் திரைப்படம் கூறிய எதுவும் எங்களுக்கு விளங்கவில்லை. கடைசியில், எங்கள் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பொட்டலம் திணிக்கப்பட்டது. அதில் இரண்டு சுகாதாரத் துணிகள் இருந்தன. இது எங்களைக் கூனிக் குறுகச் செய்தது. எல்லோரும் அமைதியாக அந்த அறையை விட்டு வெளியேறினோம். மற்றவரை நிமிர்ந்து பார்ப்பதற்குக் கூட எங்களுக்கு வெட்கமாக இருந்தது.
வளர்ந்து பெரியவர்களாவது என்பது எளிதானதல்ல. குறிப்பாக, நம் உடலெங்கும் ஹார்மோன்கள் பெருக்கெடுத்து ஓடும் பொழுதும், மற்றவர் மீதான நம் அன்புணர்வுகள் நாளுக்கு நாள் வளரும் பொழுதும் வளர்ச்சி என்பது கடினமான ஒன்றாகிறது. கல்லூரி வாழ்க்கையின் பொழுது ஆண்-பெண் உறவுகள் பற்றிய கதைகள் ஏராளம். அத்தகைய சூழ்நிலையில், வேறு விதமான இச்சைகளை வெளிப்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. ‘பெண்மையாக’ நடந்து கொண்ட ஆண்களை நம்பிகள் (gay) என்று சொல்லி எங்களுக்குள் கிசகிசுத்துக் கொண்டோம். நங்கைகளாக் (lesbian) எந்தப் பெண்ணும் இருந்ததாக கதைகள் இருக்கவில்லை. அந்த
ஆண்டுகளில் என்னுடைய சிந்தனைக்கும் கடிவாளம் கட்டப்பட்டு இருந்தது என்று ஒப்புக்கொள்கிறேன். ஏதோ ஒரு விதத்தில் ஆண்குறி ஒன்று ஈடுபடாத உறவை ஏற்றுக்கொள்ளக் கூடிய பக்குவம் எனக்கு இருந்திருக்கவில்லை. தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி இலக்கியத் துறைகளில் மட்டுமே பாலியல்பு குறித்த விவாதங்கள் அன்று நிகழ்ந்தன. அங்கும் கூட, உணர்வுகள்,
விழைவுகள் பற்றிய எதும் அல்லாமல் வெறும் கல்வி குறித்த விவாதங்களாகவே அவை அமைந்தன. நான் கூறுவது 1980-களைப் பற்றி. இப்போதைய நிலைமை முற்றிலும் மாறுபட்டது.
பாலினம் மற்றும் பாலியல்பு குறித்து பல ஆண்டுகளாக செய்யப்பட்டப் பணியின் காரணாமாக தில்லியில் உள்ள கல்லூரிகளில் அவை குறித்துப் பேசுவதற்கான வெளிகள் இன்று ஏற்பட்டிருக்கின்றன. பல கல்லூரிகளில் இன்று நிகழும் விவாதங்கள், திரையிடல்கள், நாடகங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கிறது. பெண்கள் கல்லூரிகளில் இவை குறித்துப் பேச பல புத்திசாலித்தனமான முறைகளைக் கையாள்கின்றனர். பாலியல்பு மற்றும் சட்டம் ஆகிய இரண்டும் கலந்தத் துறைகள் பிரபலமாக இருந்தன. ஏனெனில், இந்த இரண்டு துறைகளுக்குமே வரையறை குறித்தத் தெளிவு இல்லாததால், இவற்றில் ஒருபாலீர்ப்பு மற்றும் விழைவு குறித்த விவாதங்களை நுழைக்க முடிந்தது. இளைஞர்களை சீரழிப்பதாக எங்களை யாரும் குற்றம்சாட்ட முடியாது. நாங்கள் கல்வித்துறையில் எங்களுடைய பணியைச் செய்து வந்தோம்; அவ்வளவு தான்!
சமூக நீதித் துறையில் நான் பணிபரியத் தொடங்கி 20 ஆண்டுளாகிவிட்டன. நான் பணி தொடங்கி பல ஆண்டுகளுக்குப் பாலியல்பு குறித்த புரிதல் வெகுக் குறைவாகவே இருந்தது. பாலினம், பால் வேற்றுமை குறித்த பரபரப்பான விவாதங்கள் மட்டுமே எங்களுக்கு வடிகால்களாக இருந்தன. இவற்றின் மூலம் எங்களுடைய பணியில் பெண்களை இணைத்துக்கொள்ள் முடிந்தது. பெண்ணுடல் பற்றி சற்று பேசக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. ஆனால் இவை பெரும்பாலும் வன்முறை அல்லது மகப்பேறு குறித்த ஆரோக்கியம் சார்ந்த விவாதங்களாக இருந்தன. பெண்ணுடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்படவில்லை. பெண்களை நீச்சலுடையில் காட்டிய திரைப்படப் போஸ்டர்களுக்கு கருப்பு பூசப்பட்டது. அழகிப் போட்டிகளை எதிர்த்துப் போராட்டங்கள் தொடங்கப்பட்டதும் அந்த ஆண்டுகளில் தான்.
அழகிப் போட்டிகளை எதிர்த்துப் போராடிய சக தோழி ஒருத்தி அந்த நாட்களை நினைவுகூர்ந்தாள். அத்தகைய போட்டி ஒன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த ஒருவர் கூறியது இவர் காதில் விழுந்தது: “போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களைப் பார். எவ்வளவு அகோரமாக இருக்கிறார்கள்”! இதைக் கேட்ட பொழுது இவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஆனால் பல ஆண்டுகள் கழித்து அதை நினைத்துப் பார்க்கையில் வேறு விதமாகத் தோன்றுகிறது. “நாம் பார்ப்பதற்கு எத்தனை வேடிக்கையாக் இருந்திருக்க வேண்டும். NGO-காரர்களுக்கே உரிய உடைகளில், அழகுப் போட்டிகளையும் கவர்ச்சியையும் எதிர்த்துப் போராடினோம்,” என்று சிரிக்கிறார். எப்பொழுதும் சற்று கசங்கி இருந்த கைத்தறி ஆடைகளையும், ஜோல்னா பைகளையும் பற்றி பேசுகிறார் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். ஆனால் அழகிப் போட்டிகள் குறித்த நமது இன்றைய விவாதங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன – அவை பெண்களைப் போகப் பொருட்களாகப் பார்க்கின்றன என்பதை மட்டுமல்லாமல், இவற்றில் பங்குகொள்ளும் பெண்களும் தங்களது உரிமைகளை செயல்படுத்துகின்றனர் என்பதையும் நாம் இன்று ஏற்றுக்கொள்கிறேன். எல்லா விஷயங்களுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்த முடியாது என்பதை ஏதோ ஒரு விதத்தில் பரிந்துகொள்கிறோம்.
எண்பதுகளின் இறுதி ஆண்டுகளிலும், 1990-களின் தொடக்கத்திலும் “லெஸ்பியன்” என்ற சொல் தில்லியில் பணிபரிந்து கொண்டிருந்த எங்கள் சிலருக்குப் பரிச்சயமானது. “நிஜ வாழ்க்கையில் லெஸ்பியங்களாக இருப்பவர்கள்” பற்றிக் கேள்விப்பட்டோம். பெண்கள் இயக்கத்தில் யார் யார் ஒருபால் உறவுகளில் இருக்கக்கூடும் என்று யூகிக்க முயற்சி செய்தோம். எங்களில் பலருக்கு இது அன்று எங்களுடைய சொந்தப் பிரச்சனையாக இருக்கவில்லை. எனினும், பெண்களில் இயக்கத்திற்கு உள்ளும் ஒருபாலீர்ப்பு குறித்த வெறுப்பு இருப்பதைக் கண்டு திகைத்தோம். நான் வளர்ந்து வாழக் கற்றுகொண்ட நிலமே பெண்கள் இயக்கம் தான். எனினும் ஒரு பெண்கள் கருத்தரங்கிற்குச் சென்றிருந்த பொழுது ஒரு குறிப்பிட்டப் பெண்ணுடன் தங்குவதற்கு அறையை பகிர்ந்து கொள்வது குறித்து நான் எச்சரிக்கப்பட்டேன். ஏனெனில் அவர் ஒரு லெஸ்பியன்! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? வன்முறை என்பது வெளிப்படையாகவும் நேரடியாகவும் நடைபெறும் பொழுது அதை நம்மால் பரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த மாதிரியான வன்முறை அதிகம் கவனிக்கப்படாது போகிறது. அறியாமை என்று சொல்லி அதை நாம் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.
1993 ஆம் ஆண்டு தொடங்கி சக சமூக ஆர்வலர்களுடன் லெஸ்பியன் பெண்கள் குறித்த சூடான விவாதங்கள் பல நடைபெற்றன. இந்தியாவில் ஏழ்மை, வாழ்வாதாரம், தண்ணீர் ஆகியவை குறித்த பல முக்கியமான விஷயங்கள் இருக்கும் பொழுது, ஒருபாலீர்ப்பு கொண்ட பெண்களின் உரிமைகள் பற்றிப் விளிம்பு நிலையில் இருந்துகொண்டு சிலர் பேசுவதை நாடு முக்கியமாக கவனிக்க வேண்டுமா என்பது பெரிய கேள்வியாக இருந்தது. பீஜிங்க் நகரில் நான்காவது உலகப் பெண்கள் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் இந்த விவாதங்கள் எழுந்தன. அது தவிர ஆயத்தக் கூட்டம் ஒன்றில், ஐ, நா. சபை 1994 ஆம் ஆண்டை “குடும்பத்திற்கான ஆண்டாக” அறிவித்திருந்ததை ஒருவர் எதிர்த்துக் கேள்வி எழுப்பினார். அதுவும் இந்த விவாதங்களுக்கு உந்துதலாக அமைந்தது. 1994-ல் திருப்பதியில் நடைபெற்ற பெண்கள் இயக்க மாநாட்டின் பிரகடனத்தில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: தங்களது உடல்கள், பாலியல்பு, மற்றும் உறவுகள் குறித்து பெண்களுக்கு உள்ள உரிமைகளை இந்த பிரகடனம் அங்கீகரித்து ஆதரித்தது. ஆணாதிக்க சமுதாயங்களில் ஒருபாலீர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட பெண்கள் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் இந்தப் பிரகடனம் ஏற்றுக்கொண்டது.
கைத்தொழில் செய்வோருக்கு நிலைத்திருக்கக் கூடிய வாழ்வாதாரத்தைப் பெற்றுத் தரும் நிறுவனம் ஒன்றில் நான் அப்பொழுது பணியாற்றி வந்தேன். அங்கிருந்து கொண்டே தான் இந்தப் பலப் போராட்டங்களுக்கு இடையே சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். மிகவும் முக்கியமான பிரச்சனைகள் என்ற சிலவற்றின் மீது கவனம் செலுத்தி வந்த பெண்கண் நிறுவனங்களுடன் உரையாடுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. இருப்பினும் என்னைச் சுற்றி நடப்பதைப் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். எது பேசப்படுவதில்லை, எது சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை, எது எல்லோராலும் புறக்கணிக்கப்படுகிறது என்பதை கவனித்தேன். வாழ்வாதாரம், பாலினம், பாலியல், எல்லாவற்றிற்கும் மேலாக சுயமதிப்புடன் வாழ எல்லோருக்கும் இருக்கும் உரிமை ஆகியவை குறித்து நான் செய்துகொண்டிருந்த பணிகளை ஒருங்கினைக்கத் தொடங்கினேன். நான் மேற்கூறிய முடிவற்ற, காரசாரமான விவாதங்கள் என்னை இந்தத் திசையில் போக வற்புறுத்தின. ஆண்-பெண் என்ற எதிர்பால் ஈர்ப்பும் எல்லோரும் பறைசாற்றியது போல அப்படி ஒன்றும் விசேஷமாக இருக்கவில்லை. என்னுடைய நண்பர்கள் பலரும் நானும் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. ஏனெனில் நாங்கள் மரபுக்கு எதிரான வாழ்க்கையைத் தேர்வு செய்திருந்தோம்; எங்கள் உடல்கள், வாழ்க்கைகள், உறவுகள் குறித்த முடிவுகளை நாங்களே செய்யத் துணிந்திருந்தோம். அது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்தப் பட்டறை ஒன்றில் நான் பங்கேற்க நேர்ந்தது. அதில் ஒரு பயிற்சியின் பொழுது பங்கேற்பாளர்களைத் திருமணமான முதிர்ந்த ஆண்கள்/ பெண்கள் என்றும் திருமணமாகாத ஆண்கள்/ பெண்கள் என்றும் பிரித்தனர். திருமணம் ஆகாதவர்கள் உடலுறவு குறித்த எந்த செயல்பாட்டிலும் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்ற தவறான புரிதல் இதில் இழையோடி இருந்தது. மேலும், பங்கேற்பாளர்கள் அனைவருமே ஆண்-பெண் என்ற எதிர்பால் விழைவு கொண்டவர்கள் அன்ற அனுமானமும் இதில் இருந்தது. இது குறித்து நான் பேசிய பிறகு எங்களில் பலர் நாங்கள் வற்புறுத்தப்பட்டிருந்த குழுக்களிலிருந்து வேளியேறினோம். பயிற்சியை நடத்திக் கொண்டிருந்தவருக்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
பல காரணங்களுக்காக 1998 ஆம் ஆண்டு எனக்கு முக்கிய ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டு தான் “பயர்” திரைப்படம் இந்தியாவில் வெளிவந்தது. அந்தத் திரைபடத்தைப் பற்றி முடிந்த வரை விவாதித்தாயிற்று. நான் அதை செய்யப்போவதில்லை. தில்லியில் ஒரே குடும்பத்திற்குள் இருந்த இரு மத்தியவர்க்கப் பெண்களுக்கு இடையிலான இச்சையை இந்தத் திரைப்படம் சித்தரித்தது. இது இந்தியாவின் வலது சாரியினருக்கு சகிக்க முடியாததாக இருந்தது. இந்தக் கதாபாத்திரங்களில் ஒரு பெண்ணின் பெயர் “சீதா” என்று இருந்தது பிரச்சனையை இன்னும் மோசமாக்கியது. திரையரங்குகள் தாக்கப்பட்டன. பல செய்தி அறிக்கைகள் வெளியிடப்பட்டன: “இரு பெண்கள் உடல் ரீதியான உறவில் ஈடுபடுவது என்பது இயற்கைக்குப் புறம்பானாது,” என்றார் மஹாராஷ்டிர மாநிலத்தின் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரமோத் நாவல்கர். “இது போன்ற திரைப்படங்களை எங்கு ஏன் எடுக்க வேண்டும்? அமெரிக்கா அல்லது மற்ற மேலை நாடுகளில் செய்யலாம். லெஸ்பியனிஸம் பொன்றவை இந்தியச் சூழலுக்கு உகந்தவை அல்ல,” என்றார் அப்பொழுது உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே. அத்வானி.
பாலியல் விழைவு குறித்த விவாதங்களைப் பொதுத் தளத்தில் வைக்க வலது சாரியினரின் இந்தக் கோபம் உதவியது. லெஸ்பியனிஸம், பொதுவாக ஒருபாலீர்ப்பு, பாலியல்பு ஆகியவை குறித்துப் பேசுவதற்கான வெளிகள் உண்டாயின. சிவசேனை இந்தத் திரைப்படத்தைத் தாக்கியதை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடந்தன. அதன் நீட்சியாக ‘Campaign for Lesbian Rights’ (CALERI) உண்டாயிற்று. போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்த தனி நபர்களும் குழுக்களும் தொடர்ந்து ஓராண்டிற்குப் பெண்களின் ஒருபாலீர்ப்பு குறித்துப் பொதுத் தளங்களில் பேசுவதற்கு முயற்சி செய்வது என்று தீர்மானித்தோம். நான் இதில் தீவிரமாகப் பங்கு கொண்டேன். இதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பெண்ணரிமை குறித்துப் பணியாற்றி வந்த பல பெண்கள் நிறுவனங்கள் இது குறித்து ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கான நிர்ப்பந்தத்திற்கு உள்ளாயின. ஆனால் அவர்கள் அதைச் செய்யாமல் இருக்க சொன்ன காரணங்கள் சுவாரஸ்யமாக இருந்தன.அந்த சமயத்தில் நானும் ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது: நான் இந்தப் போராட்டங்களில் பங்குகொள்வதற்கான காரணம் என் தனிமனித அடையாளம் மட்டுமன்று. நான் இதை ஒரு மனித உரிமை மீறலாகப் பார்க்கிறேன். நான் கைத்தொழில் செய்வொருடன் வேலை செய்துவந்த பொழுது நானும் கைத்தொழிலாளியா என்று ஒருவரும் கேட்டது கிடையாது. ஆனால் நான் ஒருபாலீர்ப்பு குறித்த பிரச்சனைகளுக்காக வேலை செய்வதால் நான் பாரபட்சம் பார்ப்பவளாகிறேன், அவர்களுள் ஒருவளாகிறேன், எனவே தீவிர நிலைப்பாடுள்ள ஒரு போராளியாகிரேன்.
இது பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை. நாம் பணி செய்வதற்கான கட்டமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பாலியல்பு மற்றும் பாலியல் உரிமைகள் குறித்து பணிபரியும் நிறுவனங்களின் எண்ணிக்கைப் பெருகியுள்ளது. கல்லூரி மாணவர்களுக்காகப் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கல்வியாளர்கள் இது பற்றி எழுதுகிறார்கள். பாலிவுட் திரைப்படங்களில் ஒருபாலீர்ப்பு கொண்ட ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்படுகின்றன. இவற்றில் பல முற்றிலும் காழ்ப்புணர்ச்சி நிறைந்த சித்தரிப்புகள். செய்தித்தாள்களில் இதுபற்றி சிலர் தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். எல்லாவற்றிலும் முக்கியமாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது. தன்னிச்சையாக நடைபெறும் ஒருபாலீர்ப்பு செயல்பாடுகளை இந்திய தண்டனைச் சட்டத்தில் பிரிவு 377-லிருந்து (“இயற்கைக்கு மாறான குற்றங்கள்”) நீக்குவது குறித்த வழக்கு இது. “எந்தப் ஆணுடனோ, பெண்ணுடனோ, மிருகத்துடனோ எவரொருவர் தன்னிச்சையாக இயற்கைக்கு மாறான புணர்ச்சியில் ஈடுபடுகிறாரோ அவருக்கு வாழ்நாள் முழுதிற்குமான சிறை தண்டனையோ, பத்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்,” என்று இந்தச் சட்டப்பிரிவு கூறுகிறது (2009 ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி அன்று இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்றத்தில் நிறைவுபெற்றது; தன்னிச்சையான, 18-வயதைக் கடந்தோரின் ஒருபாலீர்ப்புச் செயல்பாடுகள் தண்டனைச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டன).
இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே,1999 ல் பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று CALERI பெண்களின் அதிகார முன்னேற்றதிற்கான குழுவிடம் மனு ஒன்றை சமர்ப்பித்தது. “பெண்கள் தொடர்பான குற்றவியல் சட்டங்களின் மறுபரிசீலனை” என்ற இந்த மனு பிரிவு 377-ஐ நீக்குவது குறித்ததாக இருந்தது.
இடைப்பட்ட ஆண்டுகளில் இந்திய ஊடகங்களும் சற்று தோழமையுடன் நடந்துகொண்டுள்ளன. பொதுத் தளங்களில் மாற்றுப் பாலியல் குறித்த பிம்பங்கள் பல எழுந்துள்ளன. 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் நான்கு நகரங்களில் மாற்றுப் பாலியல் கொண்டோரின் விழாக்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. இவற்றுள் இரண்டில் பங்குபெறும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. இரண்டு இடங்களிலுமே மக்களிடையே பெரு மகிழ்ச்சியும் களிப்பும் இருந்ததை நிச்சயமாக உணர முடிந்தது. சமூகத்தால் வகுக்கப்பட்ட பாலின அடையாளங்களையும் விழைவுகளையும் தாண்டி நிற்பவர்களுக்கு நம் நாட்டின் வீதிகளும் தெருக்களுமே பாதுகாப்பற்றவையாக இருந்து வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஊர்வலங்களின் பொழுது இவர்கள் சட்ட்பூர்வமாக தம் வீதிகளை ஆக்கிரமித்தனர். அவர்களுக்குக் காவல் துறையும் பாதுகாப்பு வழங்கியது!
என்னுடைய நீண்ட பயணம் மிகவும் இனிமையானதாக் இருந்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில், பாலியல்பு மற்றும் பாலியல் உரிமைகள் குறித்துப் பணிபரியும் நிறுவனம் ஒன்றில் நான் பணிபரிந்துள்ளேன். நாடுகள், பண்பாடுகள், வயது, இனங்கள், மதங்கள், மாற்றுத்திறன், பாலியல்பு போன்ற வரையறைகளைக் கடந்து பல பயிற்சிகளை நான் நடத்தியுள்ளேன். இந்தப் பணியில் நான் கற்றுக்கொண்டது ஏராளம். ஏற்கனவே கற்றிருந்த பழையன பலவற்றை நான் மறக்கவும் வேண்டியிருந்தது. இது சவாலாகவும் இருந்தது. நான் பணியாற்றும் உலகத்தில் நிச்சயமாகப் பல மாற்றங்களைப் பார்க்கிறேன். எனினும் புதிதாக வரும் பலரும் பல புதிய விஷயங்களைக் கற்க வேண்டியிருப்பதையும் நான் பார்க்கிறேன். சுய இன்பம் தவறானதல்ல என்று 1983-ல் பணிபரிந்த பொழுது எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது; 2009-திலும் அதைச் சொல்ல வேண்டியுள்ளது. ஒருபாலீர்ப்பு தவறானதல்ல என்றும் ஆண்கள் நிகழ்த்தும் வன்முறை காரணமாகப் பெண்கள் ஒருபாலீர்ப்பு கொண்டவர்களாக ஆவதில்லை என்றும் நான் இறக்கும் வரையில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் ஒரு விளிம்புநிலைக் குழுவிலிருந்து இதைச் சொல்ல வேண்டியிருக்காது. பலர் இதையும் பாலியல் குறித்த இதர பல விஷயங்களையும் பற்றி உரக்கப் பேசிக் கொண்டிருப்பார்கள்.
நான் முன்னர் கூறியது போலவே இந்தப் பணியில் சவால்கள் ஏராளம். ஆண், பெண் என்ற இருமைக் கட்டமைப்பு எவ்வளவு வலுவிழந்ததாக இருக்கிறது என்பது குறித்து ஒரு நண்பருடன் விவாதித்துக் கொண்டிருந்தேன். அப்படி ஒரு கட்டமைப்பு இல்லையெனில், ஆண் பெண் என்ற வேற்றுமை இல்லை என்றாகிவிடும். பின் நாம் நம் விழைவுகளை வரையறுக்க அடையாளங்களே இல்லை என்றாகிவிடும். நாம் மற்ற மனிதர்கள் மேல் இச்சை கொள்ளும் வெறும் மனிதர்களாகி விடுவோம்! இதனால் அடையாள அரசியலுக்கு என்ன நேரும்? இந்த இருமைக் கட்டமைப்பு இல்லையெனில் பால்/ பாலினம் சார்ந்த வேற்றுமை இருக்காது. அடையாள முத்திரைகளிலிருந்து நாம் விடுதலையாகி விடுவோம்!
இது போலவே, நமது உலகப் பார்வையில் முழு திறன் இல்லாத உடல்களை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. இயலாமை இல்லாதவர்களின் உடல்கள் “தற்காலிகத் திறன் கொண்டவையே” என்று இயலாமை குறித்துப் பணிபரியும் நண்பர் ஒருவர் கூறினார். இது என்னை சிந்திக்க வைத்தது. உடல்/ மன இயலாமை மற்றும் பாலியல்பு குறித்து நாம் சிந்திக்கும் விதங்கள் அர்த்தமுள்ளதாக இருக்கின்றனவா என்று யோசித்தேன். இயக்க நரம்பில் குறைபாடு (Motor Nerve Disorder) உள்ள ஒருவரோ, முதுகுத் தண்டில் பிளவு உள்ள ஒருவரோ, சக்கர நாற்காலியில் உள்ள ஒருவரோ மற்றவர் மீது அவர்களுக்கு உள்ள இச்சையை வெளிப்படுத்தும் பொழுது நாம் அதைப் புரிந்துகொள்கிறோமா? மன நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மற்றொருவர் மீது தனக்குள்ள உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாமல் திரும்பத் திரும்ப “நான் அவரை மணந்துகொள்ள விரும்புகிறேன்,” என்று சொல்வதை நாம் சரியாகப் பரிந்துகொள்கிறோமா? நாமும் இயலாமை கொண்ட அந்த உடல்களாக எந்த நேரமும் மாறலாம் என்பது நமக்குப் புரிகிறதா? இயலாமை குறித்த கல்வியிலிருந்தும் ‘க்ரிப் தியரி’யிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.
தொழில்நுட்பம் அதி வேகமாக வளர்ந்துள்ளது. இணையதளத்தில் மனிதர்கள் நெருக்கமான உறவுகளை அமைத்துக் கொள்கிறார்கள். உரையாடுவதற்கான அறைகளின், ‘சேட் ரூம்களின்’ எண்ணிக்கைப் பெருகி வருகிறது. எல்லா விதமான ஆசைகளுக்கும் கனவுகளுக்குமென தனித்தனி ‘சேட் ரூம்கள்’ இருக்கின்றன. இளம் பருவத்தினருக்கு எல்லாவிதத் தகவல்களும் இணையதளத்தில் கிடைக்கின்றன. இவற்றுள் பல அவர்கள் வயதிற்கு ஏற்றவையாக இருப்பதில்லை. இணையதளத்தின் மூலம் பாலியல் உறவுகள் என்பதன் பொருள் விரிவடைந்துள்ளது. அது பொதுத் தளத்தில் இருப்பதால் அதை எப்படிக் கையாள்வது என்று நமக்குப் பரிவதில்லை. கைபேசியில் உள்ள காமிராவின் பயன்பாடு குறித்தும் நாம் அத்தனை உறுதியாகக் கூற முடியாது. ஏதோ ஒரு பொதுவிடத்தில் நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் பொழுது உங்கள் உடலை எவரும் புகைப்படம் எடுக்க மாட்டார் என்ற உத்திரவாதம் இன்று கிடையாது.
பாலியல் சார்ந்த ஏற்றத்தாழ்வு மிக்கக் கட்டமைப்பு ஒன்றை நாம் எப்படி உருவாக்கி அதற்குள் மனிதர்களையும் அவர்களது செயல்பாடுகளையும் அடுக்கி விடுகிறோம் என்பதைப் பரிந்துகொள்ள முடிவதில்லை. பல நேரங்களில், ஒருபாலீர்ப்பு கொண்டோரை எதிர்பாலீர்ப்பு கொண்டோருக்கு எதிரானாவர்களாகவும், இயலாமை அற்றவர்களை இயலாமை உள்ளவர்களுக்கு எதிராகாவும் கட்டமைத்து விடுகிறோம். இனப்பெருக்கத்திற்கு உதவும் உடலுறவை மற்ற உடலுறவிற்கு மேலானதாக கருதிவிடுகிறோம். இன்பம் மற்றும் சுய அடையாளம் சார்ந்த கதைகளைக் காட்டிலும் வன்முறையும் பாதிப்பும் நிறைந்த கதைகளையே விரும்புகிறோம்.
மனிதர்கள் உடலுறவு கொள்வதற்கோ கொள்ளாமல் இருப்பதற்கோ எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் என்று நமக்குப் புரிகிறதா? இச்சை, காமம் ஆகியவற்றில் தவறொன்றும் இல்லை என்றோ, உடலுறவையும் பணத்தையும் மனிதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளலாம் என்றோ, ஒன்றிற்கும் மேற்பட்ட உறவில் இருக்கலாம் என்றோ, நமது அடையாளங்கள் நிரந்தரமானவை அல்ல என்றோ, பாலியல்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்றோ நாம் பரிந்துகொள்கிறோமா?
உலகின் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும் வானவில்லை இன்னமும் இறுகப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகவே நான் இன்னமும் தொடர்ந்து இந்தப் பணியை செய்துகொண்டிருக்கிறேன். மற்றவர்களைப் பற்றிய மனத்தீர்ப்புகளை நான் வழங்காமலிருக்க வேண்டும். அத்தகைய உலகில் நான் வசிக்க விரும்புகிறேன். இசைவு, ஒப்புதல், இவற்றுடன் கூடிய உடலுறவு ஆகியவற்றை இனம் கண்டுகொள்ளக் கூடியவளாக நான் இருக்க வேண்டும். இவை குறித்த என் பார்வைக்கும் நடைமுறைக்கும் இடையே முரண்பாடு ஏற்படும் பொழுதும், எல்லாவற்றையும் கருப்பு/ வெள்ளை என்று வரையறுக்க இயலாது என்றும், இடைப்பட்ட எண்ணற்ற வண்ணங்களில் இருக்கலாம் என்றும் நான் பரிந்துகொள்ளக் கூடிய உலகமாக அது இருக்க வேண்டும். என் வாழ்நாளில் பாலியல்பு குறித்த விஷயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நான் என்னையும் மற்றவர்களையும் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அப்பொழுது தான் நாம் உருவாக்க நினைக்கும் உலகத்தை கொஞ்சமாவது நெருங்கிச் செல்ல முடியும். அதனால் தான் நான் செய்யும் பணியைத் தொடர்ந்து வருகிறேன்.
References:
1 Fernandez B, Radhakrishnan M, Deb P. 2007 Report on a Lesbian Meeting, National Conference on Women’s Movement in India, Tirupati, 1994, in Nivedita Menon (Ed) Sexualities, New Delhi: Women Unlimited
2 Cited in Lesbian Emergence: Campaign for Lesbian Rights. 1999. A Citizen’s Report, New Delhi
3 Memorandum in Lesbian Emergence: Campaign for Lesbian Rights. 1999. A Citizen’s Report, New Delhi
4 Rubin G. 1984. Thinking Sex: Notes For a Radical Theory of the Politics of Sexuality in Carole S. Vance (Ed) Pleasure and Danger: Exploring Female Sexuality, London: Routledge and Kegan Paul
5 Vance, C. 1984. Pleasure and Danger: Toward a Politics of Sexuality in Carole S. Vance (Ed) Pleasure and Danger: Exploring Female Sexuality, London: Routledge and Kegan Paul
This article was originally published by TARSHI – Talking About Reproductive and Sexual Health Issues in Issue 1 (2009) of their quarterly magazine In Plainspeak. We thank TARSHI and the author for permission to republish on Orinam.
thanks