கவிதை: அன்னையே மன்னிப்பாய்
உன்னையே சிதைத்து, ஒவ்வோர் அணுவையும் உயிர்வித்து
என்னையே தந்தாய் உலகிற்கு, ஏற்றங்கள் கண்டு வாழ்வதற்கு
கண்ணையே கையில் வைத்து, காலமெல்லாம் அதுபோல் காத்து
விண்ணையே கூட வளைத்து நான் கண்ணுரங்க உழைத்தாய்
முன்னதாய் நின்று நீ முதல் வார்த்தை கற்பித்தாய்
சின்னதாய் வைத்த அடிகள் சிறப்பாக ஊக்குவித்தாய்
ஏன்னதான் ஏழ்மையெனினும் கண்ணதின் கருணைதனிலே
கோமகன் போல் கருத வைத்தாய்
சொல்லதான் சொற்களில்லை எல்லாமே சொல்வதற்கு
மெல்லதான் நான் வளர, மேனி பெருத்து மோகங்கள் உணர
எல்லார் பருவம் போல், எனக்கும் வந்ததென, உன்
செல்வம் செழித்து செந்தாழம் பூக்குமென சின்னக்கனா கண்டிருப்பாய்
உண்மை சொல்வேன் உனக்கு, உள்ளம் வேறேனக்கு
கள்ளம் எதுவுமில்லை நீ கவலைப் படுவதற்கு, ஆனால்
வெள்ளம் பொங்குதெனக்கு என்னவர் கண்ட பொது
நெஞ்சம் அறிந்த நாள் முதல் இதுதான் விதியெனக்கு
வழக்கம் ஒருபோல் இருக்க, என் வாழ்வு வேறுபோல் பறக்க
குழப்பம் கொண்டு நான் குமுறிக் கொண்டிருந்தேன்
பழ்க்கம் ஆகிப் போனது மனம், பல காலம் போனதாலே
கலக்கம் எல்லாம் இன்றுன் கண்களைக் காண்பதுதான்
சோதனை உண்டெனக்கு, சொல்லமாட்டேன் உனக்கு
வேதனை பட்டாலும் நீ வெளிப்ப்டுத்த மாட்டாய் எனக்கு
பாதியாய் வாழ்விருக்கும், பகுத்தான் வழக்கு
நாதனுக்கு அப்படியோர் நயவஞ்சகக் கிறுக்கு
ஊனமாய்ப் பிறந்திருப்பின், ஊரெல்லாம் அறிந்திருக்கும்
வானமாய் உன்மேல், அநுதாபப் பட்டிருக்கும்
மானமற்ற மனிதர் வந்துன் மகன் மணம் பற்றிக் கேட்கையில், உன்னை
மெளனமாய் நிற்க வைத்தேன், மன்னிப்பாய் தாயே