ஒரு தாயின் உணர்வுகள்
என் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று நான் நினைத்த உடன் என் மனம் “ஒ! அந்த கெட்ட நாட்கள்” என்று எச்சரித்தது. என் மகன் அவன் பாலீர்ப்பை பற்றி என்னிடம் சொன்ன அந்த நாட்களை தான் “கெட்ட நாட்கள்” என்று என் மனம் நினைவுறுகிறது .
யோசித்து பார்த்தால் என்ன இது முட்டாள்தனம் என்று எனக்கே தோன்றுகிறது… ஏன்? என் மனம் ஏன் எப்படி நினைக்கிறது?. எனது இந்த கேள்விக்கு பதில் தான் இந்த கட்டுரையின் வடிவில் இங்கே…… (சற்று நீளமாக!)
இது நடந்தது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் சென்னையிலிருந்தேன் என் மகன் அமெரிக்காவில் இருந்தான். என் மகன் இணையத்தில் என்னை உரையாட அழைத்து, “ஒரு பெண்ணை வாழ்கை துணையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று சொன்னான். நான் அதிர்ந்து போனேன். என் குடும்பத்தின் வருங்காலமே இருண்டது போல் தோன்றியது. அவன் சில புத்தகங்களையும், இது பற்றிய சில இணைய தளங்களையும் எனக்கு அனுப்பினான், அவற்றை படித்தால் அவனது உணர்வகளை புரிந்துகொள்ள உதவும் என்றான்.
என்னால் இதை ஏற்றுகொள்ள முடியவில்லை ஆனால் அதே சமயம் நான் இதை எதிர்க்கவும் இல்லை. என்னை விட்டு தள்ளி வெகுதூரத்தில் தனியே இருப்பதால், அப்பொழுது அவனது மன நலம் எனக்கு முக்கியமாக தோன்றியது. இந்திய வரட்டும் அவனை எப்படியாவது “மாற்றி” விடலாம் என்று எண்ணினேன். என் மகனோ இது சம்பந்தமான தகவல்களை அனுப்பி கொண்டே இருந்தான், ஒரு தருணத்தில் “நீ எப்படி இருந்தாலும் உன்னை ஆதரிப்பேன்” என்று சொல்லிவிட்டேன், அதற்கு மேல் இதை பற்றி பேச எனக்கு விருப்பம் இல்லை.
அவனை பார்க்க அமெரிக்கா சென்றபொழுது, அவனுடன் சேர்ந்து ஒரு மனநல மருத்துவரை போய் பார்த்தேன். அவரிடம் என் மகன் மருத்துவ உதவி பெற்று மாறவேண்டும், நான் பேரன் பேத்திகளை என் மகன் மூலம் பார்க்க வேண்டும் என்கிற எனது ஆசையாய் சொன்னேன். என் மகனோ நான் அவனை புரிந்து கொண்டேன் என்று நினைத்துகொண்டிருந்தான், எனது இந்த எதிர்பார்ப்பு அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்று எங்களுக்குள்ளே பெரிய விவாதம் இதை பற்றி. என்னிடம் “எல்லாம் புரிகிறது” என்று ஏன் பொய் சொன்னாய் என்று அவன் கேட்டபொழுது நான் கூனி குறுகி போனேன்.
அதற்கு பிறகு, நானே முயற்சி எடுக்க தொடங்கினேன். கலிபோர்நியா நூலகத்துக்கு சென்றேன். தன்பாலீர்ப்பு பற்றிய புத்தகங்களையும், தன் பாலீர்ப்புள்ளவர்களின் உணர்வுகள், வாழ்க்கைமுறை இதை பற்றிய புத்தகங்களையும் படித்தேன். மெதுவாக எனக்கு இதை பற்றி புரிய ஆரம்பித்தது.
நமக்கு ஏன் சில விஷயங்கள் பிடிக்கிறது, அனால் அதை போன்ற வேறு விஷயங்களில் நாட்டம் இருப்பதில்லை?. உதாரணத்திற்கு… எனக்கு பால் இனிப்புகள் பிடிக்காது. ஏன்? எனக்கு தெரியாது. ஒரு சோன்பாபடியை என்னால் சுவைக்க முடியும், அதே சமயம் விலையுயர்ந்த ஒரு பால் இனிப்பை குடுத்தால் எனக்கு அதில் விருப்பம் இருக்காது. அதுவும் இனிப்புதான்… சுவையானது தான். ஆனால் “உனக்காக இந்த விலை உயர்ந்த, தரமான பால் இனிப்பை கொண்டுவந்திருக்கிறேன் …நீ சாபிட்டால் தான் ஆயிற்று” என்று யாரவது என்னிடம் சொன்னால், “உங்கள் அன்புக்கு நன்றி, அனால் எனக்கு பால் இனிப்புகள் பிடிக்காது, எனக்கு வேண்டாம்” என்று மறுத்து விடுவேன். இனிப்பு போன்ற ஒரு சின்ன விஷயத்திலேயே என்னால் மற்றவருக்காக மாற முடியாது என்றால்…. இது ஏன் மகனின் வாழ்க்கை. அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது…. என் மகன் அவனது பாலில் உள்ள ஒருவருடன்தான் சந்தோஷமான ஒரு வாழ்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்று.
இதை ஏற்றுக்கொள்ள எனக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நமக்கு பிடிக்காத ஒன்றை நம் குழந்தைகள் செய்தால் நமக்கு வேதனையாக இருக்கிறது. பிடிக்காத ஒன்றை வாழ்க்கையாக ஏற்று காலம் முழுவதும் நம் குழந்தைகள் வேதனை பட வேண்டுமா? ஏன்? ஊர் உலகத்தில் நாலு பேர் என்ன நினைப்பார்கள் என்பதற்காகவா? நாளைக்கு எனக்கு பணபிரச்சனை என்னால் கரண்ட் பில் கட்ட முடியவில்லை என்றால்.. இந்த “நாலு பேர்” வந்து கட்டுவார்களா? எனக்கு ஒரு கஷ்டம் என்றாலோ, ஒரு தேவை என்றாலோ என் மகன் தான் ஓடி வருவான். குடும்பத்திற்காக, அவனது தம்பிக்காக என் மகன் எவ்வளவோ செய்திருக்கிறான்.அவனது சந்தோசத்தை ஏன் “நாலு பேருக்காக” காவுகொடுக்க வேண்டும்?
இன்றும் என் கணவர் இதை ஏற்றுகொள்ள வில்லை, இதை எதிர்க்கிறார். அனால் காலபோக்கில் அவர் மாறுவார், நானும் என் மகனும் சேர்ந்து அந்த மாற்றத்தை கொண்டுவருவோம் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதுவரையில் என் மகனால் முடிந்தவரை அவருடன் பேச முயற்சிக்கிறான்.
மேக்டலினின் அலுவலகத்தில் நடைபெற்ற பெற்றோர்களின் சந்திப்பில் நான் பங்கு பெற விரும்பியதை ஏன் கணவர் மிகவும் எதிர்த்தார். இது போன்ற பிரச்சனைகளை நாங்கள் ஒரு குடும்பமாக எதிர்கொள்ள தான் வேண்டும். அனால் ஊர் உலகத்திற்கும் இந்த சமுதாயத்தில் உள்ள நாலு பேருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
சமீபத்தில் எனது உறவினர் ஒருவரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். சில கல்யாண சடங்குகளை செய்ய என்னை மேடைக்கு அழைத்தார்கள். உடன் என் நாத்தனார், ” உங்களுக்கு இதில் அனுபவம் இல்லையே” என்றாள். என் மகனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பதை சுட்டி காட்டினாள் அவள். “உனக்கு தான் அனுபவம் இருகிறதே, நீ போ” என்று சிரித்துக்கொண்டே மனநிறைவுடன் அவளை அனுப்பிவைத்தேன். இது நாள் வரையில் இது போன்ற விஷயங்களுக்கு என் மனம் ஏங்கியது இல்லை. என் மகனின் சந்தோசத்தை விட, இது போன்ற சடங்குகள் எனக்கு முக்கியமும் இல்லை.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு, விதவை திருமணத்தை சமுதாயம் ஏற்கவில்லை. அதை ஆதரித்தவர்கள் எதிர்ப்பையும், கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.அந்த போராட்டங்களின் பயனாக இன்று விதவை பெண்கள் ஒரு புது வாழ்வை பெற முடிகிறது. அதை போல் தன்பாலீர்புள்ளவர்களின் காதலும், திருமணமும் சமுதாயத்தால் ஒரு நாள் அங்கீகரிக்கப்படும். அதுவரையில் பலர் “நம் கலாச்சாரத்திற்கு புறம்பானது” என்று கத்தி கொண்டுதான் இருப்பார்கள். அதை சட்டை செய்யபோவதில்லை என்ற முடிவை நான் எடுத்து விட்டேன்.
என் உறவினர்களில் பலர் என் மகனின் திருமணத்தை பற்றி கேட்கிறார்கள், அவர்களுக்கு நான் சொல்லும் பதில் – ” கல்யாணம் நடக்கும் பொது, கண்டிப்பாக உங்களுக்கு பத்திரிகை அனுப்பப்படும்”. நான் சிறிதும் தயக்கமின்றி இப்படி சொல்ல, அவர்கள் பதிலேதும் பேசுவதில்லை. நான் தயங்கினால் உடனே எனக்கு அறிவுரை சொல்ல துவங்கிவிடுவார்கள்.
எனக்கு ஒரு நல்ல மகன் கிடைத்திருக்கிறான் என்பதில் எனக்கு ரொம்பவும் பெருமை. என் கணவர், ” ஊர் உலகம் என்ன சொல்லும்? அவன் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும், வேண்டுமானால் ரகசியமாக அவன் இஷ்டப்படி இருக்கட்டும்” என்று சொன்னபோது என் மகன் அதை நிராகரித்துவிட்டான். தனது வாழ்கைத்துணைக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது என்பது என் மகனின் நிலை. அந்த நேர்மையை நான் பாராட்டுகிறேன். அந்த வகையில் எனக்கு என் மகன் எனக்கு ஒரு அரிய பொக்கிஷம், அவனை இழக்க நான் தயாரில்லை. என்றும் சந்தோஷமாக, பெருமிதத்துடன் அவன் துணைநிற்பேன், அவனை ஆதரிப்பேன்.
Oru Nalla Thaiku Udharanamaga Ivar Thigalgirar.. Nanum en ammavidam ipdi koorinal avar etru lkolvara? alladhu enna veruthtuviduvara…Kadavul mattume arivar….
அருமையான பதிப்பு