புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளோம்
11-12-13 என்னும் தேதி வாசிக்க அழகாய் இருந்தாலும் என் போன்ற ஒடுக்கப்பட்ட பாலியல் சிறுபான்மையின மக்கள் முழு சுதந்திர காற்றை சுவாசிக்க தடைவிதிக்க பட்ட ஒரு கறுப்பு நாள். நியாபகத்தில் வைத்து கொள்ள எளியதாய் இருந்தாலும் இந்த நாளை மறக்கவே நினைக்கிறது எமது இனம். ஆம்! அன்று தான் உச்ச நீதி மன்றம், திருநங்கைகள் மற்றும் மற்ற பாலியல் சிறுபான்மையினர்கள் (gay, bisexual men, lesbian, bisexual women, transmen) பரஸ்பர ஒப்புதலுடன் தனிமையில் ஈடுபடும் பாலுறவுகள் ‘இயற்கைக்கு எதிரான உறவு’ தான் என உறுதி செய்து இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 அது போன்ற உறவுகளை குற்றப்படுத்துவதை தொடரும் என தீர்ப்பு வழங்கியது.
பாரதி சொல்லும் நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையுமே போதும் என நம்பினோம் நாங்கள். எங்களை அடிமைப்படுத்தும், 1860 ஆம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இரவல் பெறப்பட்ட, அந்த பழைய பிற்போக்கான சட்டத்தை மாற்ற அகிம்சை வழியில் தொடர்ந்து போராடினோம். ஒன்பது ஆண்டு காலம் வழக்கு தொடுத்து பொறுமையாய் காத்திருந்த எங்களுக்கு வரமாய் இருந்தது 2009-ல் மதிப்பிற்குரிய நீதிபதி A.P SHAH அவர்களால் வழங்கப்பட்ட முந்தைய டில்லி உயர் நீதி மன்ற தீர்ப்பு. இந்திய அரசியல் அமைப்பு பெரிதும் போற்றும் அந்தரங்க உரிமைகள், சமத்துவ உரிமைகள் போன்றவற்றை மேற்கோள் காட்டி பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட, பரஸ்பர ஒப்புதலுடன், தனிமையில் நிகழும் எங்களின் பாலியல் உறவுகளின் மீதிருந்த குற்ற கறையை போக்கி நல்லதொரு தீர்ப்பினை அவர் வழங்கினார். சக மனிதர்கள் போலவே எங்களுக்குள்ளும் இருந்த இயற்கையான மற்றும் நியாயமான உணர்வுகளுக்கு புத்துயிர் ஊட்டியது அந்த தீர்ப்பு. ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய கலாச்சரம் என்பதை முற்றும் மறந்து போன சில ‘காலச்சார கட்டமைப்பாளர்கள்’ அந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ஒரு சாண் ஏறினால் முழம் சறுக்கும் எங்கள் வாழ்வில் இடியாய் வந்து இறங்கி உள்ளது அந்த மேல்முறையீட்டிற்கான உச்ச நீதி மன்ற தீர்ப்பு. அதன்படி தில்லி உயர் நீதி மன்ற தீர்ப்பை புறம் தள்ளி வைத்து விட்டு எங்கள் இயற்கையான காதலை மீண்டும் குற்ற படுத்துகிறது இந்த சட்டம்.
உடலுறவு பற்றி பேசுவது கொஞ்சமாய் இருந்தாலும் அதில் ஈடுபது அதிகமாய் இருக்கும் இந்தியாவில் ஆயிரத்தில் நான்கு நபருக்கு எச். ஐ. வி தொற்று இருப்பதாக சொல்லுகிறது தேசிய எய்ட்சு கட்டுபாட்டு சங்கம். மற்ற வழிகளிலும் எச். ஐ. வி கிருமி பரவும் என்றாலும் பாலியல் உறவு மூலம் ஏற்படும் தொற்றே பிரதானமாய் இருக்கிறது. குறிப்பாக பொதுவிளி மக்களை காட்டிலும் விளிம்பு நிலையில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்கள்/திருநங்கைகள், ஓரின உறவுகளில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் கனிசமான அளவில் இந்த தொற்று உள்ளது என்பது புள்ளியல் உண்மை.
நோய் தடுப்பு சாதனமாய் ஆணுறை இருந்தாலும், அவற்றை வாங்குவதில் மற்றும் பயன்படுத்துவதில் பல சமூக தடைகள் இருப்பதை நாம் புரிந்த கொள்ள முயற்சிக்க வேண்டும். முதலில் ஆணுறை எங்கு கிடைக்கும்? என்று ஓரளவு தெரிந்தாலும், அதை உப்பு புளி மிளகாய் போல சகஜமாய் ஏனோ வாங்க முடிவது இல்லை. கலாச்சார கற்பிதங்களை எல்லாம் மீறி துணிந்து வாங்கும் சிலருக்கும் அதை சரியாய் பயன்படுத்த போதிய அறிவு இல்லாததை அவ்வபோது நம் நட்பு வட்டாரங்களில் கேட்ட/காண முடிகிறது. அப்பாவிடமோ அக்காவிடமோ இன்னும் நூறு வருடம் ஆயினும் அதை பற்றி பேசிவிடவே முடியாது என்பதும் நாம் அறிந்ததே. கோடி கணக்கில் செலவு செய்த பின்பும் புதிய எச். ஐ. வி தொற்றினை கட்டுபடுத்த முடியாது நிலை இந்தியாவில் உள்ளதை அறவே மறுக்கமுடியாது. இப்படிபட்ட காலச்சார போர்வையில் பிணைந்து இருக்கும் பொது புத்தி உள்ள நம் நாட்டில் விளிம்பு நிலையில் உள்ள கல்வி அறிவு சற்று குறைந்த பாலியல் தொழில் செய்யும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் மற்ற பாலியல் சிறுபான்மையினர்கள் பாதுகாப்பான உடலுறவு கொள்வதில் நிச்சயம் பல தடைகளை சந்திக்க நேரிடும் என்பது சிந்தனையில் கொள்ளவேண்டியவை.
சொந்த நாட்டிலேயே பாலியல் சுதந்திரம் இல்லாமல் சூழ்நிலை கைதிகளாய் வாழும் நாங்கள் பாலியல் நலம் பேணுவது பற்றி எப்படி யோசிக்க முடியும்? எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையில் ஈடுபடும் மற்ற பாலியல் சிறுபான்மையினர்கள் குறித்து மருத்துவ நல பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்கள் வைத்து உள்ள முத்திரைக்கு இந்த தீர்ப்பு மெருகு ஊட்டுவதாய் அல்லவா இருக்கும். அரசின் எச். ஐ. வி திட்டங்களை செயல்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எத்தனை இலவச ஆணுறை கொடுத்தாலும், குற்றவாளிகளாக பச்சை குத்தப்பட்ட நாங்கள் எப்படி பொதுவிளியில் வெளிவந்து அவற்றை பெற முடியும். காவல் துறையினர்களும் மருத்துவர்களும் சாத்தியமாக இழைக்ககூடிய கறைப்படுத்துதலையும், ஒதுக்குதலையும் மீறி எங்கள் பாலியல் நலம் சார்ந்த பிணியினை எப்படி போக்க முடியும்? கறைபடுத்தபடும் சாத்தியங்கள் பல உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தொடர்ந்து சென்று எச். ஐ. வி-கான இரத்த பரிசோதனை எப்படி செய்து கொள்ள முடியும்? நோய் தொற்று ஏற்பட்டு உடல் வதை படினும் சிகிச்சை மேற்கொள்ளுவது சிக்கலாகி போகும் என்பது தான் கசப்பான உண்மை. அரசுகளின் ஏடுகளில் எங்கேயும் வரவில்லை என்றாலும் தற்கொலைகள் நிகழும் அபாயம் உள்ளதை மறுக்க முடியவில்லை.
‘நாங்கள் நாங்களாக’ உள்ளம் சொல்லும் உண்மையான ஆன்மாவாக வாழ குடும்பங்களிடம் போராடி படி படியாக புரிந்துணர்வு ஏற்படுத்தி வந்தோம். எங்களின் இயற்கையான பாலியல் இயல்புகள் மற்றும் பாலின அடையாளத்தை ‘குணபடுத்த’ பெற்றோர்களின் ஒப்புதலோடு சில போலி மருத்துவர்கள் தரும் எலெக்ட்ரிக் சாக்கிலிருந்து இடைப்பட்ட கொஞ்ச காலம் தப்பி நின்றோம். இப்போது பழைய நிலை மீண்டும் வர போவதை நினைத்து மனம் சிதைந்து இருக்கிறோம். உடல் வதைப்பட்டாலும் மாற்றான் மகளை மணந்து ஏற்கனவே ஒடுக்கப்பட்ட பெண் இனத்தை மேலும் ஒடுக்க கூடாது என உறுதியாய் நின்று குடும்பமற்ற தனி-நபராய் இறுதி வரை போராடி மடிந்தவர்கள் எங்களுள் பலர் உண்டு. ஆனால் இன்று ஆண்-பெண் கல்யாண பந்தத்தை புறகணிக்க குடும்பங்களுடன் நாங்கள் நிகழ்த்தி வந்த வாதத்தின் வலுவை இந்த தீர்ப்பு குறைத்து உள்ளது. மின் மயானம் ஆயிரம் இருக்கும் இந்த நவீன காலத்திலும் ‘கொல்லி வைக்க கடைசி காலத்தில் ஆள் வேண்டும்’ என வழக்கம் போல் உணர்ச்சிபூர்வமாய் வற்புறுத்தி கல்யாணம் செய்ய வைக்கும் நிகழ்வுகள் பெருக தான் செய்யும் என்பதில் சந்தேகம் பெருதும் இல்லை. திருநங்கைகளின் சமூக பாதுகாப்பிற்காக தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நல வாரியத்தின் வேலைகளை ‘திருநங்கைகளின் பாலுறவுகளை குற்றம்’ என சொல்லும் இந்த தீர்ப்பு முடக்குமோ என அஞ்சுகிறோம்.
நடு கடலில் நீந்த முடியாமல் தத்தளிக்கும் எங்களுக்கு, இந்த தீர்ப்பில் ‘தேவைபட்டால் அரசு பாராளுமன்றத்தின் மூலம் தகுந்த சட்ட மாற்றம் கொண்டு வரலாம்’ என்பது ஓட்டைகள் பல உள்ள லைப் போட் (life boat) ஆகத்தான் தோன்றுகிறது. பாராளுமன்றத்தில் தேங்கி இருக்கும் ஆயிரம் அலுவல் மத்தியில், எங்கள் குரல் அடர்ந்து காட்டில் இரவு நேர பூட்சிகளின் சத்தமாய் ஒழிந்து போகி விடாது என நம்புகிறோம்.
மனித உரிமைகளை மேற்கோளிட்டு ஊடங்களில் எங்களுக்கு ஆதரவாய் சில தலைவர்கள் பேசுவது பலத்த காயத்திற்கு முதல் உதவி செய்வது போல் இருந்தாலும், சிலரின் வன்மையான விமர்சனங்கள் எங்களை மேலும் வலியில் ஆழ்த்துகிறது. ஆதரவு தெரிவிக்கும் சில தலைவர்களையும் ‘பாலியல் சிறுபான்மையினர்’ என முத்திரை குத்தி கறைப்படுத்துவது பிரித்து ஆளும் உச்ச பட்ச சூழ்ச்சி. தலித்து மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு தலித்து அல்லாத பாலியல் சிறுபான்மையின மக்கள் குரல் கொடுத்து உள்ளோம் என்பதை வரலாற்றில் பதிவிடுகிறோம். அதற்காக முத்திரை குத்த பட்டால் அதையும் சுகமாய் ஏற்போம்.
பாலியல் சிறுபான்மையினர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றதில் வெளிப்படையாக இல்லை என்றாலும், அறம் கற்று நம் நாட்டை வழி நடத்தும் சான்றோர்கள், தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வாமல் பாதுகாப்பார்கள் என உறுதியாய் இருக்கிறோம். கால வெள்ளத்தில் கரைந்து போக மாட்டோம். நின்று போராடுவோம். நாங்கள் புதைக்க படவில்லை விதைக்க படுகிறோம் விருட்சமாய் எழுவோம் மீண்டும்! [படித்தது பிடித்திருந்தால் தயவு செய்து மற்ற சமூக ஆர்வலர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.]
ஆம், நாம் உண்மையாகவே புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டுள்ளோம்.
குரலற்றவர்களின் குரலாக மேலெழுந்த வழக்கின் சிறு வெளிச்சக்கீற்றையும் உச்சநீதிமன்றம் ஊதியணைத்திருப்பது, இச்சமூகம் எப்படிப்பட்ட விக்டோரியன் காலத்திய மதிப்பீடுகளில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. இப்படிப்பட்ட நிலையில் பாலியல் தேர்வு என்பது அவரவரின் உயிரியலமைப்பு மற்றும் உரிமை சார்ந்த ஒன்று என்பதை இச்சமூகம் எப்போது ஏற்றுக்கொள்ளுமோ என நினைத்தால் மலைப்பாகத்தானிருக்கிறது!
சராசரி இந்திய ஆண்மனதாலும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டுள்ள பெண்மனதாலும் ஆண்-பெண் பாலுறவன்றிய வேறொரு மனித உறவு என்பது இயற்கைக்கு மாறான ஒன்றாகவே புரிந்துகொள்ளப்படுகின்றது என்றால் அது புரிந்துகொள்ளக்கூடியது தான். ஆனால் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று மட்டுமே பதிந்துள்ள சமூகச் சித்திரத்தைத்தான் இந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியும் கொண்டிருக்கிறாரென்றால் வேறென்ன சொல்ல?
பாராளுமன்றத்தில் விவாதித்துச் சட்டப்பிரிவு 377 ஐ நீக்கவோ திருத்தவோ செய்யுங்கள் என்றாவது வழிகாட்டினாரே…. அந்த அளவில் அவருக்கு நன்றி! இதையே ஒரு வாய்ப்பாகக் கொண்டு, நாடு தழுவிய பொது விவாதங்களை மேற்கொள்வதே பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.
நமது இந்தியச் சமுதாயத்திற்கென்றே சில விசித்திரத் தனித்தன்மைகள் உள்ளன. அவற்றிலொன்று, உலகின் மிகப்பெரிய சனநாயகம் ‘தானே’ என்று அறைகூவிக்கொண்டே சிறுபான்மையினரின் குரல்வளையை நெரிப்பது! அப்படிக் குரல்வளை நெரிக்கப்படும்பொழுதெல்லாம், திமிறிக்கொண்டு போராடியே மத, சாதிச் சிறுபான்மையினர் மற்றும் பெண்களின் உரிமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. அதைப்போலவே, ஒருங்கிணைந்த தொடர்ச்சியான போராட்டங்களின் வழியாகவே அவரவரின் பாலியல் தேர்வை உரிமையாக வென்றெடுக்க முடியும்!
இதற்கு முன்பும் 377-வது சட்டப்பிரிவு இருந்தது. இன்றும் இருக்கிறது. நாளை? இருக்கக்கூடாது! அதற்கான விவாதங்களைச் சமூகத்தின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் துவங்கிப் பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்வதே இனிச் செய்யவேண்டிய பணியாக இருக்கும். உச்சநீதிமன்றத்தீர்ப்பின் தடைக்கல்லையே படிக்கல்லாக அமைத்து வெற்றி பெரும் நாள் வெகுதொலைவிலிருக்காது என்று நம்புகிறேன். இந்தக்கடினமான பணியின் வலிமையான குரலான “ஓரினம்”-உடன் தோழர் தினேஷ்குமார் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அயரவேண்டாம் தோழர்!
“அக்கா வந்து கொடுக்கச் சுக்கா? மிளகா? சுதந்திரம் – கிளியே?” என்பது புரட்சிக்கவிஞரின் வரி!